இணையத்தில் நாம் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறோம்?


ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் போது இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?

இந்தியாவில் இணைய பாதுகாப்பு குறித்து மெக்கஃபே நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் பெரும்பாலான இந்தியர்கள், ஆஃபர் கிடைக்கும் எனும் ஆசையில் முன்பின் தெரியாத இணையதளங்களில் கூட தங்களது தனிப்பட்ட தகவல்களை பகிர்கின்றனர் எனும் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் இணைய வர்த்தகம் அதிவேகமாக வளர்ந்து வரும் துறையாக மாறியுள்ளது. இந்நிலையில், பண்டிகைக் காலத்தின்போது இணைய வர்த்தக நிறுவனங்கள் அதிரடி தள்ளுபடிகளை வழங்குகின்றன.

இந்த தள்ளுபடிக்கு ஆசைப்பட்டு 55 சதவீதம் இந்தியர்கள் தங்களது ஈ-மெயில் ஐடியை முன்பின் அறிந்திராத இணையதளங்களிடம் பகிர்ந்துகொள்கின்றனர். அதேபோல், 45 சதவீதம் பேர் தங்களது அலைபேசி எண்ணையும் இவ்வாறு பகிர்கின்றனர் என இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்த தகவல்கள் நாம் ஏன் பாதுகாக்க வேண்டும் எனும் கேள்வி நமக்குள் எழும். நாம் நமது டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாக்ராம் போன்ற சமூக வலைத்தளங்களில் மட்டுமில்லாமல், வங்கிக் கணக்குகளுக்குக் கூட ஈ-மெயில் ஐடியையோ, அலைபேசி எண்ணையோ தான் லாகின் ஐடியாக கொடுக்கிறோம்.

எனவே இவற்றை அறிவதன் மூலம், ஒருவரது சமூக வளைத்தளங்கள் முதல் வங்கிக் கணக்கு வரை அனைத்தையும் அணுகலாம். இதன் மூலம் ஒருவரது ஆதி முதல் அந்தம் வரை தகவல்கள் சேகரிக்கலாம். செந்தில் சொல்வது போல ‘இன்ஃபர்மேஷன் இஸ் வெல்த்’ எனும் யுகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

இந்த தகவல்களுக்காக கோடி ரூபாய் கூட கொடுக்க பெரும் நிறுவனங்கள் காத்திருக்கின்றன. சமீபத்தில், இவ்வாறு தனது வாடிக்கையாளர்களின் தகவல்களை கேம்ப்ரிட்ஜ் அனாலடிகா எனும் அமைப்புடன் பேஸ்புக் நிறுவனம் பகிர்ந்தது.  இதை அந்த ஆய்வு நிறுவனம் பல நாடுகளில் உள்ள அரசியல் கட்சிகளின் பிரச்சாரத்துக்காக பயன்படுத்தியது. இதற்காக அமெரிக்க பாராளுமன்றம், மார்க் சக்கர்பெர்கை வறுத்தெடுத்த சம்பவத்தை நாம் மறந்திருக்க முடியாது.

வங்கிக்கணக்குகளின் தகவல்களை அறிவதன் மூலம், இந்த டிஜிட்டல் யுகத்தில் வங்கித் திருட்டை சில விநாடிகளுக்குள் நிகழ்த்தலாம்.

எனவே கண்ணு மண்ணு தெரியாமல் ஆஃபர் கிடைக்கும் இடமெல்லாம் ஈ-மெயில் ஐடியையும், மொபைல் நம்பரையும் கொடுக்காதீர்கள். உங்களுக்காகத்தான் ஹேக்கர்கள் வலைவிரித்துக் காத்திருக்கிறார்கள் என எச்சரிக்கிறது மெகஃபே நிறுவனத்தின் இந்த ஆய்வு!

 

நன்றி : tamil.eenaduindia.comLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *