பாக். அகதிகளுக்கு நிதி உதவி – ஜம்மு& காஷ்மீர் அரசு ஒப்புதல்


இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினையின் போது மேற்கு பாகிஸ்தானிலிருந்து இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்தியா ஆளுகைக்கு கீழிருந்த ஜம்மு& காஷ்மீரிலும் இன்னும் சில இந்திய மாநிலங்களிலும் குடியேறினர். மதக்கலவரங்களுக்கு அஞ்சி வெளியேறிய அம்மக்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 70 ஆண்டுகாலமாக நிலுவையிலிருந்த நிலையில்,  நிதியுதவி அளிக்க ஜம்மு& காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் ஒப்புதல் அளித்துள்ளார். 

இதன் மூலம் ஜம்மு& காஷ்மீரில் வசித்து வரும் 5,764 குடும்பங்களுக்கு தலா 5.50 லட்ச ரூபாய் நிதியுதவியாக அளிக்கப்பட இருக்கின்றது. கடந்த செப்டம்பர் 26 அன்று ஆளுநர் சத்ய பால் மாலிக் கீழ் கூடிய மாநில நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. 

பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக வெளியேறியவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள், மற்றும் சீக்கிய மதத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். இப்படி வெளியேறி ஜம்மு& காஷ்மீர் தவிர பிற இந்திய மாநிலங்களில் குடியேறியவர்கள் இந்திய குடிமகன்களுக்கு வாய்ப்புகள் மற்றும் உரிமைகளுடன் வாழ்வதாக கூறப்படுகின்றது. 

இவ்வாறான சூழலில், ஜம்மு& காஷ்மீரில் வசிக்கும் இந்த அகதிகள் தொடர்ந்து தங்களுக்கான உரிமைகளையும் உதவிகளையும் கோரி வந்தனர். கடந்த ஜூன் மாதம், இந்த அகதிகளுக்கான ஒரு முறை நிதியுதவி வழங்கும் முன்மொழிவுக்கு இந்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், கவர்னரின ஆளுகையின் கீழ் உள்ள மாநில நிர்வாகம் இந்த அகதிகளுக்கான நிதியுதவி வழங்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிதியுதவியினை பெற மேற்கு பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக வெளியேறியவர்கள் தேவையான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் எனக்கூறியிருக்கும் அரசின் அதிகாரப்பூர்வ பேச்சாளர், “இந்த திட்டத்துக்கான செலவுகளை இந்திய அரசு ஏற்றுக்கொள்ளும். மாநில அரசின் உறுதிப்படுத்தலின் அடிப்படையில், ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5.50 லட்சம் ரூபாய் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும்” எனக் கூறியிருக்கிறார். 

இந்த அகதிகளுக்கு குடியுரிமை சார்ந்த பிரச்னையும் இருந்ததாக சொல்லப்பட்ட வந்த நிலையில், அவர்களுக்கு கடந்த சில மாதங்களாக அரசின் அடையாள சான்றிதழ் வழங்கும் பணி நடைபெற்று வந்தது.  இதன் வாயிலாக, அவர்கள் இனி அரசு, ராணுவம், மற்றும் காவல்துறை பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியினையும் பெற்றுள்ளனர். அண்மையில் எடுக்கப்பட்ட இந்நடவடிக்கைகளின் மூலம் மேற்கு பாகிஸ்தானிய அகதிகளின் 70 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *