சீன ஜனாதிபதியின் வடகொரிய விஜயம்: கொரிய தீபகற்பத்தில் ஒரு சதுரங்க ஆட்டம்


ஹிந்துஸ்தான் டைம்ஸில் வெளியான கட்டுரையின் தமிழ் மொழியாக்கத்தை வெளியிட்டுள்ளது வீரகேசரிப் பத்திரிகை. சமகால உலக அரசியல் குறித்த, சர்வதேச அரசியலின் சதுரங்க ஆட்டம் குறித்த முக்கியத்துவமான இக் கட்டுரையை வணக்கம் லண்டன் நன்றியுடன் இங்கே மறுபிரசுரம் செய்கின்றது. -ஆசிரியர்

சீன ஜனாதிபதி சி ஜின்பிங் கடந்த வாரம் வடகொரியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தை சர்வதேச அரசியல் அவதானிகள் ஓர் சதுரங்க ஆட்டம் என்று வர்ணிக்கிறார்கள். சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலே தீவிரமடைந்துவரும் வர்த்தகப்போர், வடகொரியத் தலைவர் கிம்ஜொங் – உன்னுடனான பேச்சுவார்த்தைகளில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் காணமுடியாமல்போன வெற்றி ஆகியவற்றின் பின்னணியிலேயே சீனத்தலைவரின் இந்த விஜயத்தை நோக்க வேண்டியிருக்கிறது.

உலக நாடுகளிலிருந்து பெருமளவிற்குத் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் வடகொரியாவுடன் சீனா தொடர்ந்து பலமான உறவுமுறையொன்றைக் கொண்டிருக்கும் கொரிய தீபகற்பத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை நோக்கிய எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் சீனா முக்கிய பாத்திரமொன்றை வகிக்கும் என்பதற்கான பெய்ஜிங்கின் சமிக்ஞையாக அதைப் பார்க்க வேண்டும்.

கிம்மின் ஆட்சியை சீனா முழுமையாக ஆதரிக்கும் என்பதுடன், கொரிய தீபகற்பத்தின் பிரச்சினைகள் தொடர்பிலான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படுவதை விரிவுபடுத்துவதற்பு அந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட ஏனைய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள சீனா முயற்சிகளை மேற்கொள்ளும் என்பதே வடகொரிய அரசுக்குச் சொந்தமான செய்திப்பத்திரிகை ஒன்றினால் வெளியிடப்பட்ட ஆசிரியர் தலையங்கம் ஒன்றில் உள்ளடங்கியிருக்கும் சீன ஜனாதிபதியின் கருத்துக்களிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.

வடகொரியாவின் மிகப்பெரிய வாணிபப் பங்காளியாக சீனா இருந்துவருகிறது. அமெரிக்காவினால் விதிக்கப்பட்டிருக்கும் கடுமையான தடைகளின் தாக்கத்தை வடகொரியா சமாளிப்பதற்கு உதவுகின்ற இரகசிய உதவிகளையும் சீனா செய்து வருவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

கிம்முடன் ஊடாட்டங்களை டொனால்ட் ட்ரம்ப் ஆரம்பித்த பிறகு அணுவாயுதத் திட்டங்களில் வடகொரியா பெருமளவிற்குத் தனித்துவிட்டதாக அமெரிக்க நிர்வாகம் கூறி வந்திருக்கின்ற போதிலும், இரகசிய அணுவாயுதங்கள் மற்றும் ஏவுகணைத் திட்டங்களை நிறுத்துவதற்கு வடகொரியா பெரிதாக எதையும் செய்யவில்லை என்பதைக் காண்பிக்கும் சான்றுகளை மேற்குலகப் புலனாய்வு சேவைகள் கண்டுபிடித்திருக்கின்றன.

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப்போர் விரைவாகத் தீர்த்து வைக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை என்ற அறிகுறிகளுக்கு மத்தியில் கொரிய தீபகற்பத்தின் மீது பெய்ஜிங் அதன் செல்வாக்கைத் தொடர்ந்து பேணிவைத்திருக்கும் என்பதையும், எதிர்காலப் பேச்சுவார்த்தைகளில் சீனா சம்பந்தப்படும் என்பதையும் சி ஜின்பிங் உணர்த்தியிருக்கிறார்.

ஆனால் சிறியரக அணுவாயுதங்களைப் பரீட்சிக்கும் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்திருக்கும் வடகொரிய ஆட்சியைப் பலப்படுத்தும் காரியங்களில் சீனா ஈடுபட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக வேண்டியிருக்கும். பேச்சுவார்த்தைகளில் ட்ரம்ப் நிர்வாகம் கூடுதலான அளவுக்கு நெகிழ்வுத்தன்மையைக் காட்டாவிட்டால் ‘உண்மையாகவே விரும்பத்தகாத விளைவுகள்” ஏற்படும் என்று கூட கிம் பேசியிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

அணுவாயுத நீக்க இலக்கு நோக்கிப் பணியாற்றுவதற்கும், தறிகெட்ட எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடாதிருப்பதற்கும் வடகொரியத் தலைவரை ஊக்கங்கொடுத்து வழிக்குக் கொண்டுவர சீனாவினால் இயலும் என்று நெருக்கடியில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும், குறிப்பாக தென்கொரியாவும் ஜப்பானும் எதிர்பார்க்கும்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *