உலகக்கிண்ண தொடரிலிருந்து வெளியேறியது தென்னாபிரிக்கா!


இம்முறையாவது உலகக்கிண்ண தொடரில் சாதிக்க வேண்டுமென்ற ஆசையுடன், உலகக்கிண்ண தொடருக்குள் அடியெடுத்து வைத்த தென்னாபிரிக்கா அணி, உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியுள்ளது.

பர்மிங்ஹாம்- எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற உலகக்கிண்ண தொடரின் 25ஆவது போட்டியில், நியூஸிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் மோதின.

எதிர்பார்பு மிக்க இப்போட்டியில், நாணய சுழற்சி சுழற்றுவதற்கு முன்னரே மழை குறுக்கிட்டதால், போட்டி 49 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

இதனைதொடர்ந்து நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, இரண்டாவது ஓவரிலேயே தனது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது.

குயிண்டன் டி கொக் 5 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை, போல்டின் பந்து வீச்சில் போவுல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனையடுத்து களம்புகுந்த அணித்தலைவர் டு பிளெஸிஸ், சற்று நிதான துடுப்பாட்டத்தை கடைபிடித்தாலும், அவரது நிதானம் நெடுநேரம் நீடிக்கவில்லை.

அவரும் 23 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை, லொக்கி பெர்குசனின் பந்துவீச்சில் போவுல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அடுத்ததாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அஷிம் அம்லாவும், மிட்செல் சான்ட்னரின் பந்துவீச்சுக்கு ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து களமிறங்கிய எய்டன் மார்கிரம் 38 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனையடுத்து களத்தில் நின்று தாக்குப்பிடித்த ராஸ்ஸி வெண்டர் டஸன், நிதான துடுப்பாட்டத்தை கடைபிடித்தார்.

வெண்டர் டஸனுடன் ஜோடி சேர்ந்த டேவிட் மில்லர், சற்று ஒத்துழைப்பு வழங்க அணியின் ஓட்ட எண்ணிக்கை சற்று உயர்ந்தது.

எனினும் துரதிஷ்டவசமாக டேவிட் மில்லர், 36 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய என்டில் பெலுக்வாயோ ஓட்டமெதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இறுதிவரை கிறிஸ் மோறிஸ்சும், ராஸ்ஸி வெண்டர் டஸனும் களத்தில் இருக்க தென்னாபிரிக்கா அணி, 49 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 241 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

2015ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்தில் முதல் இன்னிங்ஸிற்காக அணியொன்று பெற்றுக்கொண்ட நான்காவது குறைந்த பட்ச ஓட்ட எண்ணிக்கையாக இந்த ஓட்ட எண்ணிக்கை பதிவானது.

இதன்போது ராஸ்ஸி வெண்டர் டஸன் ஆட்டமிழக்காது 67 ஓட்டங்களையும், கிறிஸ் மோறிஸ் ஆட்டமிழக்காது 6 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில், லொக்கி பெர்குசன் 3 விக்கெட்டுகளையும், ட்ரென்ட் போல்ட், கொலின் டி கிராண்ட்ஹோம் மற்றும் மிட்செல் சான்ட்னர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைதொடர்ந்து, 242 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நியூஸிலாந்து அணி, ஆரம்ப விக்கெட்டை மூன்றாவது ஓவரிலேயே இழந்தது.

கொலின் முன்ரோ 9 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை, கார்கிஸோ ரபாடாவின் பந்து வீச்சில் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து களம்புகுந்த அணித்தலைவர் கேன் வில்லியம்சன், சிறப்பாக துடுப்பெடுத்தாடி அணியினை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இந்த சந்தர்பத்தில் துரதிஷ்டவசமாக மார்டின் கப்டில், 35 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை, ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனையடுத்து களமிறங்கிய ரோஸ் டெய்லரும், டொம் லதமும் ஒரு ஓட்டத்துடன் ஏமாற்ற, அடுத்து களமிறங்கிய ஜேம்ஸ் நீஸம் 23 ஓட்டங்களுடன் சற்று ஆறுதல் அளித்தார்.

இதன்பிறகு களமிறங்கிய கொலின் டி கிராண்ட்ஹோம், கேன் வில்லியம்சனுடன் இணைந்து 91 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்திருந்தனர். இதன்போது, கொலின் டி கிராண்ட்ஹோம், 60 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனையடுத்து மிட்செல் சான்ட்னர் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் 48.3 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு அணியினை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இதன் மூலம் நியூஸிலாந்து அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது, கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்காது 106 ஓட்டங்களையும், மிட்செல் சான்ட்னர் ஆட்டமிழக்காது 2 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் சதம் அடித்த நான்காவது நியூஸிலாந்து அணி தலைவர் என்ற பெயரை, கேன் வில்லியம்சன் பதிவு செய்தார்.

தென்னாபிரிக்கா அணியின் பந்து வீச்சு சார்பில், கிறிஸ் மோறிஸ் 3 விக்கெட்டுகளையும், என்டில் பெலுக்வாயோ, கார்கிஸோ ரபாடா மற்றும் லுங்கி இங்கிடி ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இப்போட்டியின் வெற்றியின் மூலம் நியூஸிலாந்து அணி, 9 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

தென்னாபிரிக்கா அணி, மூன்று புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டது.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 138 பந்துகளில் 1 சிக்ஸர் 9 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 106 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட, நியூஸிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் தெரிவுசெய்யப்பட்டார்.

தென்னாபிரிக்கா அணி, நியூஸிலாந்து அணியை இறுதியாக எதிர்கொண்ட ஐந்து போட்டிகளிலுமே தோல்வியை தழுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில், காலிறுதி போட்டியுடனேயே நியூஸிலாந்து அணி, தென்னாபிரிக்கா அணியை வெளியேற்றியிருந்தது.

இதனையடுத்து, 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில், அரையிறுதியில் நியூஸிலாந்து அணி, தென்னாபிரிக்கா அணியை வெளியேற்றியிருந்தது.

தற்போது இம்முறை குழு நிலைப் போட்டிகளுடனேயே, நியூஸிலாந்து அணி, தென்னாபிரிக்கா அணியை வெளியேற்றியுள்ளது.

இதுவரை உலகக்கிண்ண வரலாற்றில் தென்னாபிரிக்கா அணி, அரையிறுதியை தாண்டியது கிடையாது. இம்முறையாவது சாதிக்க வேண்டுமென்ற ஆசையில் வந்த அந்த அணி, இவ்வாறு துரதிஷ்ட வசமாக வெளியேறியுள்ளமையானது இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நன்றி-  VarothayanLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *