2013 ஆம் ஆண்டுக்குரிய இலக்கியத்துக்கான நோபல் பரிசினைப் பெற்ற அலிஸ் மன்றோ | நேர்காணல் | பகுதி 1


கனடிய எழுத்தாளரான அலிஸ் மன்றோ 2013 ஆம் ஆண்டுக்குரிய இலக்கியத்துக்கான நோபல் பரிசினைப் பெற்றுள்ளார். அதனையொட்டி காலச்சுவடு இதழில் வெளியான இந்நேர்காணல் மீள்பிரசுரமாகின்றது. அலிஸ் மன்றோவுடனான இந்நேர்காணலைக் கண்டவர் எழுத்தாளர் அ.முத்துலிங்கம். – பதிவுகள் ]

டொரன்டோவில் ஒரு நாள் மாலை ‘பென் கனடா’ என்ற அமைப்பு ஒரு கூட்டத்தை ஒழுங்கு பண்ணியிருந்தது. கனடிய ஆங்கில எழுத்தாளர்களுக்கான கூட்டம் அது. ஏறத்தாழ எல்லா எழுத்தாளர்களும் அன்று வந்திருந்தார்கள். ஒவ்வொரு எழுத்தாளராக மேடையில் தோன்றிப் பேசினார்கள்; சிலர் வாசித்தார்கள். சுருக்கமான பேச்சு. ஒருவர்கூடக் கொடுத்த நேரத்துக்கு மேல் எடுத்துக் கொள்ளவில்லை. கடைசியாக ஓர் உருவம் மேடையை நோக்கி நடந்தது. பார்த்தால் அது அலிஸ் மன்றோ; கனடாவின் மிகப் பிரபலமான எழுத்தாளர். இவரைத்தான் நான் இரண்டு வருடங்களாகத் தேடித்தேடிக் களைத்துப்போயிருந்தேன். அந்த நேரம், அந்தக் கணம் என் மனத்தில் ஒரு வார்த்தை வந்து விழுந்தது. காத்திராப்பிரகாரம். ஐம்பது வருடங்களாக அழிந்துபோன அந்த வார்த்தைதான் என்னுடைய அந்த நேரத்து உணர்வைப் படம் பிடிப்பதாக இருந்தது. அலிஸ் மன்றோவின் பேச்சு நிதானமாகவும் அழகாகவும் சுருக்கமாகவும் அமைந்தது. ஒரு புத்தகம் அச்சில் இருப்பதாகவும் அது வெளிவந்ததும் தான் எழுதுவதை நிறுத்திவிடப் போவதாகவும் அறிவித்தார். அரசியல்வாதிகள் இப்படி அறிவிப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், ஓர் எழுத்தாளர் ஒய்வு பெறப்போவதாக அறிவித்ததை நேரிலே கண்டது எனக்கு அன்று தான் முதல் தடவை.

அலிஸ் காரணத்தைச் சொன்னார். ‘எழுத்து எழுத்து என்று அலைந்தே வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. என் நண்பர்களுக்கோ உறவினர்களுக்கோ வேறு உதவி கேட்டு வரும் பொதுநலத் தொண்டர்களுக்கோ என்னால் நேரம் ஒதுக்க முடியாமல் போய்விட்டது. முன்பு சாதாரணமாகச் செய்த சிறிய காரியங்களும் இப்போது எனக்கு மலைபோலத் தெரிகின்றன. வயது 75 ஆகிறது. மாதக் கடைசியில் பில்களுக்குப் பணம் கட்டுவது, அந்த வாரக் குப்பையை அகற்றுவது, தேக அப்பியாசம் செய்வது, மருந்துகள் சாப்பிடுவது என்று எல்லாமே பெரிய சுமையாக மாறிவிட்டன. இனிமேல் கொஞ்சம் மற்றவர்களுக்கும் வாழ்வது என்று முடிவுசெய்திருக்கிறேன்’ என்றார்.

நான் திகைத்துப்போன அளவுக்கு மற்றவர்களும் திகைத்திருக்க வேண்டும். பேச்சு முடிந்ததும் அவரைச் சுற்றிப் பலரும் சூழ்ந்துவிட்டார்கள். இந்தக் கும்பலில் போய் இவரை எப்படிச் சந்திப்பது என்ற குழப்பம் எனக்கு ஏற்பட்டது.

இரண்டு வருடங்களாக இவரைச் செவ்வி எடுப்பதற்காக நான் அலைந்திருந்தேன். ஒரு நாள் அதிகாலையில் என்னை அழைத்துப் பேட்டி தருவதாகச் சொன்னவர் மறுபடியும் என்னைத் தொடர்புகொள்ளவேயில்லை. பீட்டர் மத்தீஸன் என்ற எழுத்தாளர் நேபாள மலைகளில் பல வருடங்கள் பனிச் சிறுத்தையைத் தேடி அலைந்து கடைசிவரையும் அதைக் காணவில்லை. ஆனாலும் அவர் ‘பனிச் சிறுத்தை’ என்று ஒரு புத்தகம் எழுதி, அது ழிணீtவீஷீஸீணீறீ ஙிஷீஷீளீ கிஷ்ணீக்ஷீபீ பெற்றது. அதுபோல நானும் அலிஸ் மன்றோ பற்றி அவரைச் சந்திக்காமலே ஒரு கட்டுரை எழுதி அது பிரசுரமாகியிருந்தது.

அலிஸ் மன்றோவைச் சுற்றி இன்னும் கூட்டம் சேர்ந்துகொண்டிருந்தது. இதுதான் கடைசி. இந்தச் சந்தர்ப்பத்தைவிட்டால் இனிமேல் இவரைப் பிடிக்க முடியாது. இவரை நோக்கி நடந்தேன். அப்போது ஓர் அதிசயம் நடந்தது. மோசேக்குச் செங்கடல் பிளந்தது போலக் கூட்டம் வழிவிட்டது. காரணம் வேறு ஒன்றுமில்லை, என்னுடைய வயதும் நிறமும்தான். என் பெயரைச் சொன்னேன். அவர் வாழ்க்கையில் எத்தனை அப்பாத்துரை முத்துலிங்கங்களைச் சந்தித்திருப்பார். என்னை ஞாபகம்வைத்திருந்தார். எனக்குத் தருவதாகச் சொன்ன செவ்வி பற்றி வினவினேன்; உடனே சம்மதித்தார். அரை மணித்தியாலம் என்றார். நான் சரி என்றேன். மீண்டும் ‘அரை மணித்தியாலம் மட்டுமே’ என்றார். அதற்கும் சரி என்றேன். அவர் 200 மைல் தூரத்தில் இருப்பதால் என்னால் அவ்வளவு தூரம் வர முடியாது என்று சொன்னேன். தொலைபேசி மூலம் செவ்வி பதிவானது. அதுவே கீழே.

நீங்கள் ஒருமுறை அயர்லாந்துக்குப் பயணம் செய்து அங்கே ஆறு மாத காலம் தங்கி 70 பக்கச் சிறுகதை ஒன்றை எழுதியிருந்தீர்கள். ஆனால், அதைத் திரும்ப வாசித்தபோது அதன் tone சரியாக அமையாததால் அதைத் தூக்கி எறிந்துவிட்டதாகக் கூறியிருக்கிறீர்கள். அது என்ன tone?

இதற்கு நான் எப்படிப் பதில் சொல்வது? சிறுகதையில் அடிநாதம் என்று ஒன்றிருக்கிறது, அது சரியாக அமையவில்லை. படிக்கும்போது நெருடலாக இருந்தது. கண்ணால் பார்க்க முடியாத ஒன்று சிறுகதையின் சமநிலையைக் குலைத்துப் போட்டுவிட்டது. திரும்பப் படித்துப் பார்த்தபோது அது என்னுடைய கதையாகவே தோன்றவில்லை. என்னுடைய வசனங்கள்கூட இல்லை. என் மனத்தில் இருந்த கதையும் பேப்பரில் பதிந்த கதையும் வேறு வேறாகத் தெரிந்தன. சொல்லப்போனால் என் மூளையில் இருந்தது பேப்பரில் வரவேயில்லை.

இன்னொரு காரணமும் இருக்கலாம். கதாநாயகியின் பெயரை மேரி என்று மாற்றியிருந்தேன். மேரி என்பது அயர்லாந்தில் மிகவும் பொதுவான ஒரு பெயர். நூற்றுக் கணக்கான அயர்லாந்துச் சிறுகதைகளை நான் படித்திருக்கிறேன். என்னையறியாமல் கதையில் அந்தச் சாயல் வந்து விழுந்துவிட்டது. என் கையை மீறி ஏதோ ஒன்று நிகழ்ந்திருந்தது. அதுதான் ஆறுமாத உழைப்பை ஒரு கணத்தில் குப்பையில் வீசிவிட்டேன்.

அது எப்படி உங்களால் முடிந்தது? அவ்வளவு சுலபமாகத் தூக்கி எறிய முடியுமா?

நான் எறிவேன். எனக்குப் பிரச்சினையே இல்லை. உண்மையில் எனக்கு அப்படி எறிந்துவிட்ட பிறகு பெரிய ஆசுவாசமாக இருந்தது. நிம்மதி பிறந்தது. இதை வைத்து என்ன செய்வது என்று திணறிக்கொண்டு இருந்தபோது அதை வீசி எறிந்தது என் பிரச்சினைக்குத் தீர்வாக இருந்தது. உண்மையில் நான் சந்தோஷமாக இருந்தேன்.

 

 

தொடரும்…..

 

 

 

சந்திப்பு : அ. முத்துலிங்கம் | பதிவுகள்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *