சினிமாஸ்கோப் முதல் 25 நாள் ரகசிய போஸ்டர் வரை | மேக்கிங் ஒஃப் ஊமைவிழிகள்


`ஊமை விழிகள்’ படம் வெளியாகி 33 ஆண்டுகள் ஆனதையொட்டி, இயக்குநர் அரவிந்தராஜ் விகடனுக்கு அளித்த நேர்காணல்…

vijayakanth

தமிழ்சினிமாவில் புதிய டிரெண்ட் செட்டை உருவாக்கிய திரைப்படம் ‘ஊமை விழிகள்’. கடந்த 33 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப்படம் வெளியான பிறகுதான், எல்லா திரைப்படங்களும் சினிமாஸ்கோப் தொழில்நுட்பத்தில் வெளிவர ஆரம்பித்தன. ‘ஊமை விழிகள்’ திரைப்படத்தின் இயக்குநர் அரவிந்தராஜ் அவர்களிடம் பேசினோம்.

’’ஃபிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்களுக்கு ஆர்ட் பிலிம்தான் எடுக்கத் தெரியும் என்றொரு மாயை உலவிய காலம். அந்தப் பொய்யான கருத்தை உடைத்தெறிய ஆசைப்பட்டார் ஆபாவாணன். ‘இரவுப் பாடகன்’ என்ற டைட்டிலை வைத்து புதுப்பட வேலைகளில் இறங்கினோம். ‘ஷோலே’ படத்தில் சவுண்டு இன்ஜினீயராக வேலைபார்த்த தீபன் சட்டர்ஜியைத் தேடி மும்பைக்குப் போனோம். மும்பையில் உள்ள ஃபிலிம் சிட்டியிலேயே நாங்கள் தங்கி, மனோஜ்-கியான் இசையில் ‘இரவுப் பாடகன்’ படத்துக்கான பாடல்களைப் பாட டி.எம்.செளந்தரராஜன், வாணி ஜெயராம், மலேசியா வாசுதேவன் ஆகியோரை மும்பைக்கு வரவைத்து ரெக்கார்டிங் செய்தோம். பின்னர் சில பல காரணங்களால் ‘இரவுப் பாடகன்’ நின்றுபோனது.

இயக்குநர் அரவிந்தராஜ்
இயக்குநர் அரவிந்தராஜ்

அடுத்து சின்ன பட்ஜெட்டில் ஒரு படத்தை உருவாக்கலாம் என்று ஆபாவாணன் ஐடியா கொடுத்தார். ஏற்கெனவே ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் நாங்கள் எடுத்து இருந்த க்ரைம் குறும்படத்தை மையமாக வைத்து படமெடுக்க திட்டமிட்டோம். ‘நாம் எடுக்கப்போற படத்துக்கு யாரை டைரக்டரா போடலாம் சொல்லுங்க’ என்று ஆபா என்னிடம் கேட்டார். அப்போது பிரபலமாக இருந்த மகேந்திரன், மணிவண்ணன் பெயரைச் சொன்னேன். ‘ஏன் நீங்க டைரக்‌ஷன் செய்ய மாட்டீங்களா’ எனக் கேட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து படத்தின் டைட்டில் ‘ஊமை விழிகள்’ என்று சொன்னவுடனே எனக்குள் ஒருகதை ஓடியது. ‘வழக்கமாக, காதல் கண்களில் இருந்துதான் தொடங்குகிறது’ என்று சொல்வார்கள். ’ஒரு இளைஞன் அழகான கண்கள் கொண்ட பெண்ணைக் காதலிக்கிறான்; அவள் ஏமாற்றி விடுகிறாள். அதன் பிறகு பழிவாங்கும் படலமாக அவன் அழகான பெண்களின் கண்களைப் பறிக்கிறான்’ என்ற கதையை நான் சொல்ல, அது எல்லோருக்கும் பிடித்துப்போனது. ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் எடுத்த குறும்படம் ப்ளஸ் காதல் கதை இரண்டும் கலந்து ‘ஊமை விழிகள்’ படத்தின் கதையை நான் எழுத, திரைக்கதை, வசனம், பாடல்கள் ஆபாவாணன், இசை இரட்டையர்கள் மனோஜ் கியான் என்று புதுப்படத்துக்கான திட்டம் உருவானது.

முதலில் நாங்கள் எடுத்த ‘மர்டர் எக்கோ’ குறும்படத்தை ஜெய்சங்கருக்குப் போட்டுக் காட்டினோம். அவருக்கு ரொம்பவும் பிடித்துப்போனது. ‘நீங்கதான் பத்திரிகை ஆசிரியர் வேடத்துல நடிக்கிறீங்க. உங்களுக்கு ஜோடியா ஶ்ரீவித்யா நடிக்கிறாங்க. அவங்களோட கால்ஷீட்டை நீங்கதான் வாங்கித்தரணும்’ என்று அவர் தலையில் பொறுப்பை போட்டோம். அவரும் சந்தோஷமாக சம்மதம் சொல்லி, ஶ்ரீவித்யா கால்ஷீட்டையும் வாங்கிக் கொடுத்துவிட்டார்.

Oomai Vizhigal
Oomai Vizhigal

அப்போது சிவகுமார் ரொம்ப ரொம்ப பிரபலமாக இருந்தார். அதனால் ‘ஊமை விழிகள்’ படத்தில் விஜயகாந்த் நடித்த போலீஸ் அதிகாரி வேடத்துக்கு சிவகுமார் சாரை தேடிப்போனோம். அந்தக் காலகட்டத்தில் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர் இயக்கிய படத்தில் சிவகுமார் நடிக்க, அந்தப்படம் படுதோல்வி அடைந்துவிட்டது. அதனால் இன்ஸ்டிடியூட் மாணவர்களின் மேல் பயங்கர கோபமாக இருந்தார் சிவகுமார். தன் உதவியாளரிடம், ‘ஃபிலிம் இன்ஸ்டிடியூட்னு யாராவது வந்தா வீட்டுக்குள்ளேயே விடாதீங்க’ என்று சொல்கிற அளவுக்கு கடுமையான கோபம்.

ஒருநாள் சந்திரசேகர், ‘போலீஸ் அதிகாரி வேஷத்துக்கு யாரைப் போடப்போறீங்க… நான் வேணும்னா விஜயகாந்த்கிட்ட கேட்கட்டுமா?’ என்று கேட்டார். ‘விஜி சார் இப்போ யூத்; வயசான வேஷத்துல நடிப்பாரா’ என்று தயங்கியபடி சொன்னேன். அதன் பிறகு இப்ராகிம் ராவுத்தரை பார்த்தோம். அவருக்கு எங்கள் மேல் நம்பிக்கை ஏற்படவில்லை. ‘ஊமை விழிகள்’ படத்தில் இடம்பெற்ற எல்லா பாடல்களையும் ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்பே ரிக்கார்டிங் செய்துவிட்டோம். ஒருநாள் ‘நிலைமாறும் உலகில்…’ பாடலை ராவுத்தரிடம் போட்டுக் காண்பித்தோம். அதில் இடம்பெறும் ‘தினம்தோறும் உணவு அது பகலில் தோன்றும் கனவு’ பாடல் வரிகளைக் கேட்டதும், இந்த வரிகள் சினிமாவில் போராடுற ஒவ்வொரு அசிஸ்டென்ட் டைரக்டரோட வாழ்க்கையைப் பிரதிபலிக்குது’ என்று சொல்லி கண்கலங்கிவிட்டார். அதன்பிறகு குறும்படம் பார்த்து பிரமித்துவிட்டார். ‘ச்சும்மா 10 நிமிஷமே இப்படி மிரட்டுற நீங்க, நிச்சயம் 3 மணி நேரம் படத்தை நல்லாத்தான் எடுப்பீங்க’ என்று பாராட்டினார். இன்னொரு நாள் கேப்டனுக்கு குறும்படம் காட்டினோம். அவருக்கும் பிடித்துப்போய் உடனே ஒப்புக்கொண்டார்.

எங்களோட ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தவர்தான் அருண் பாண்டியன். அவரும் படத்தில் நடிக்க கமிட்டாகியிருந்தார். ஒருமுறை அவரிடம், ‘உன்னோட ஒண்ணா படிச்சவர்தானே கார்த்திக், அவரை நம்ம படத்துல நடிக்கிறதுக்கு கால்ஷீட் கேளு’ என்று சொல்ல, கார்த்திக்கும் நடிப்பதற்கு ஓ.கே சொன்னார். ஜெய்சங்கர், விஜயகாந்த், கார்த்திக், சந்திரசேகர், சரிதா, சசிகலா எல்லோரையும் ஒப்பந்தம் செய்தாகிவிட்டோம். முக்கியமாக வில்லன் வேடத்தில் யாரை நடிக்க வைப்பது என்று கடும்போட்டி ஏற்பட்டது. அப்போது ரவிச்சந்திரன் நடித்தால் வித்தியாசமாக இருக்கும் என்று யோசித்து, அவரைத்தேடி தோட்டத்துக்குப் போய் பேசினோம். ‘நான் சினிமாவுல நடிச்சி ரொம்ப வருஷமாச்சு; என்னை விட்டுடுங்கோ’ என்று சொன்னார். ரொம்ப வற்புறுத்த ஒப்புக்கொண்டார். அடுத்து, ‘சார் ஒரு விஷயம்; ‘ஊமை விழிகள்’ படம் ரிலீஸாகி 25 நாள்வரை போஸ்டர்ல உங்க போட்டோவை போடமாட்டோம்’ என்று ஆபாவாணன் ஓப்பனாகப் பேசியதும், எங்களுக்கு பக்கென்றது. அதன்பிறகும் நடிக்க சம்மதம் சொன்னார் ரவிச்சந்திரன்.

Oomai Vizhigal
Oomai Vizhigal

நாங்கள் சொன்ன எல்லாவற்றையும் ஒப்புக்கொண்ட விஜயகாந்த், ‘சினிமாஸ்கோப்லதான் ‘ஊமைவிழிகள்’ படத்தை எடுக்கப்போறோம்’ என்று சொன்னதும் அதிர்ச்சி அடைந்தார். ஏனென்றால் அந்தசமயம் சினிமாஸ்கோப்ல எடுத்த சிவாஜி நடிப்பில் வெளிவந்த ‘ராஜ ராஜ சோழன்’ படமும், ரஜினி, கமல் நடித்து ரிலீஸான ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ திரைப்படமும் தோல்வி அடைந்தன. அதனால் கேப்டன் பயந்தார்; அப்புறம், ஒருவழியாக ஒப்புக்கொண்டார். ஆரம்பத்தில் காதோரத்தில் நரைமுடி வைத்துக்கொள்ள மறுத்தார்; இன்னொரு விஷயம் கேப்டனுக்கு படத்தில் பாடல்களே கிடையாது. அதற்கும் சம்மதித்து பெருந்தன்மையாக நடித்துக் கொடுத்தார். ‘ஊமை விழிகள்’ படத்தில் சூன்யக்கார பாட்டியாக நடித்தவர், ஏற்கெனவே எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு அம்மா வேடத்தில் நடித்து இருக்கிறார். அதன் பிறகு சினிமாவில் வாய்ப்பே இல்லாமல், இருக்க வீடுகூட இல்லாமல் ஒரு வீட்டுத் திண்ணையில் அடுப்புவைத்து சமைத்து வறுமையில் போராடிக்கொண்டு இருந்தார். அவரை அழைத்துவந்து நடிக்க வைத்தார் ஆபாவாணன்.

தமிழ் சினிமாவில் முதன்முறையாக இரவில் நடக்கும் காட்சிகளை இரவிலேயே ‘ஊமை விழிகள்’ படத்தில் படமாக்கினோம். நாங்கள் படப்பிடிப்பு நடத்திய சமயத்தில், ஈழத்தமிழர் விடுதலை பிரச்னை கொழுந்துவிட்டு எரிந்துகொண்டு இருந்தது. இலங்கைத் தமிழர்களுக்காக ஒரு பாடலை உருவாக்க திட்டமிட்டோம்; அதுதான் ‘தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா’ பாடல். அதில் சரணத்தில் ‘யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா? ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா’ என்று ஈழத்தமிழர்கள் மீது கொண்ட ஈடுபாட்டில் எழுத்தப்பட்டது. நீண்டநாள்களுக்குப் பிறகுதான் ஈழத்தமிழர்கள் இந்தப்பாடலை தேசிய கீதமாக வைத்திருந்த உண்மை தெரிந்தது. இப்போதும்கூட கனடா, பிரான்ஸில் இந்தப்பாடல் தேசிய கீதமாகவே போற்றப்படுகிறது.

தமிழ் சினிமாவில் ரீ-ரிக்கார்டிங் விஷயத்தில் இளையராஜாதான் ஜாம்பவான். அவரே மனோஜ்-கியானின் பின்னணி இசையை, அதுவும் வயலின் பயன்படுத்திய விதத்தை மனம் திறந்து பாராட்டினார். மனோஜ்-கியான் பாலிவுட்டில் பிரபலமான லட்சுமிகாந்த் பியாரிலால் சிஷ்யர். ‘ஊமை விழிகள்’ படத்தைப் பார்த்த சென்சார் போர்டு, படத்துக்குத் `தடை’ என்று சொல்லிவிட்டது. சினிமா உலகில், ‘அவ்வளவுதான்; ‘ஊமைவிழிகள்’ படம் ரிலீஸே ஆகாது’ என்று பேச ஆரம்பித்துவிட்டனர். ஒருவழியாக டெல்லிக்குப் போய் போராடி சென்சார் சான்றிதழ் வாங்கி வந்துவிட்டோம்.

Oomai Vizhigal
Oomai Vizhigal

33 ஆண்டுகளுக்கு முன்பு ஆகஸ்ட் 12-ம் தேதி பெரிய போஸ்டரில் சென்சார் சான்றிதழைப் போட்டு, ‘ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் நாங்கள் சுதந்திரம் அடைகின்றோம்’ என்று போஸ்டர் ஒட்டினோம். ஏவி.எம்.சரவணன் போன்செய்து பாராட்டினார். அந்தப் போஸ்டர் அப்போது தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. ‘ஊமை விழிகள்’ ரிலீஸானது; சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் படத்தின் ரிசல்ட் எப்படி இருக்கிறது என்பதை அறிய நாங்களே தியேட்டர் விசிட் அடித்தோம். தியேட்டரில் படம்பார்த்துவிட்டு வெளியேவந்த ரசிகர் ஒருவரைப் பின் தொடர்ந்து ‘படம் எப்படி இருக்கு?’ என்று கேட்டேன். `படம் தேராது’ என்று பதில் சொன்னார்; நான் அப்படியே அதிர்ச்சியில் சிலையாகிவிட்டேன். `சார் நீங்க சினிமாக்காரர்னு தெரியும் அதான் பொய் சொன்னேன்; உண்மையிலேயே படம் 100 நாளைக்கு மேல் ஓடும்’ என்று சொல்லிவிட்டு சிரித்தபடி சென்றார். ‘ஊமை விழிகள்’ ரிலீஸுக்குப் பிறகு அடுத்து வெளிவந்த அனைத்துப் படங்களும் சினிமாஸ்கோப்பிலேயே எடுக்கப்பட்டது’’ என்று முடித்தார் இயக்குநர் அரவிந்தராஜ்.

நேர்காணல் மற்றும் எழுத்து- ராகேஷ் பெ. விகடன் பத்திரிகையாளர். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *