பாகிஸ்தானிடம் பெற்ற தோல்விகளுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை?


நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 11வது லீக் போட்டி நாளைய தினம் (07) இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் பிரிஸ்டோல் கௌண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

நாளைய தினம் நேருக்கு நேர் மோதவுள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளது கடந்தகால போட்டி முடிவுகள் அணிகளை பலமாக காட்டாவிட்டாலும், அவர்களின் திடீர் எழுச்சிகள் இரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடும் என்பதில் எவ்வித ஐயங்களும் இல்லை.

உதாரணமாக, 2017ம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கு செல்லும் போது, பாகிஸ்தான் அணி கிண்ணத்தை வெல்லும் என எவரும் கணிக்கவில்லை.

ஆனால், அங்கு சென்று பலமான அணிகளை வீழ்த்தி சம்பியனானது. அதே தொடரில் இலங்கை அணி பலவீனமாக அணியாக களமிறங்கிய போதும், பலமான இந்திய அணியை வீழ்த்தியதுடன், அரையிறுதிக்கு தகுதிபெறும் வாய்ப்பை மயிரிழையில் தவறவிட்டிருந்தது.

இவ்வாறு இரண்டு அணிகளிடமும் உள்ள போராட்ட குணத்தை இந்த உலகக் கிண்ணத்தின் முதல் இரண்டு போட்டிகளிலும் காணமுடிந்தது. நியூசிலாந்து அணியிடம் படுதோல்வியை சந்தித்த இலங்கை அணி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சராசரிக்கு குறைவான ஓட்டங்களை பெற்றிருந்த போதும், தங்களுடைய அபார பந்துவீச்சின் மூலம் 187 என்ற வெற்றியிலக்கினை கட்டுப்படுத்தியிருந்தது.

அதேபோன்று, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தங்களது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி, 105 ஓட்டங்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 300 இற்கும் அதிகமான ஓட்டங்களை குவித்து, இங்கிலாந்து அணியை அதன் சொந்த மைதானத்தில் வீழ்த்தியிருந்தது.

மேற்குறித்தவாறு மோசமான ஆரம்பத்தை பெற்றிருந்த இந்த இரண்டு அணிகளும் , ஒரு போட்டியின் வெற்றியின் மூலம் தங்களுக்குள் முழு நம்பிக்கையை ஏற்படுத்திக்கொண்டுள்ளது.

இலங்கை அணியை பொருத்தவரை, வேகப் பந்துவீச்சாளர்கள் அணிக்குள் புதிய உத்வேகத்தை கொண்டுவந்துள்ளனர். குறிப்பாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அழைக்கப்பட்டிருந்த நுவான் பிரதீப் அவருடன் குறித்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய மாலிங்க ஆகியோர் இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு பலம் சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. அத்துடன், ஆப்கான் போட்டியில் இலங்கை அணியின் களத்தடுப்பு சற்று பேசக்கூடியதாக இருந்தது. குறிப்பாக திமுத் கருணாரத்ன மேற்கொண்ட ரன்-அவுட் மூலமான ஆட்டமிழப்பு மற்றும் திசர பெரேராவின் பிடியெடுப்பு.

ஆனால், இலங்கை அணியின் துடுப்பாட்டம் அணிக்கு மிகப்பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கான் போட்டியில், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை குவித்த போதும், மத்தியவரிசை வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டினை விட்டுக்கொடுத்து அணிக்கு ஏமாற்றத்தை வழங்கியிருந்தனர்.

இந்தநிலையில், அஞ்செலோ மெதிவ்ஸ் துடுப்பாட்டத்தில் தன்னுடைய அனுபவத்தை வெளிக்காட்ட வேண்டும் என்பதுடன், குசல் மெண்டிஸ், தனன்ஜய டி சில்வா மற்றும் லஹிரு திரிமான்னே ஆகியோரும் அணியின் துடுப்பாட்டத்துக்கு வலுசேர்க்கவேண்டிய கட்டயாத்தில் உள்ளனர்.

ஆனால், பாகிஸ்தான் அணியை பார்க்கும் போது, முதல் போட்டியிலிருந்து அந்த அணி தங்களுடைய பந்துவீச்சிலும் சரி, துடுப்பாட்டத்திலும் சரி அதிகமான மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.

முதல் போட்டியில் 105 ஓட்டங்களுக்கு சுருண்ட அந்த அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 348 என்ற சவாலான இலக்கை பெற்றிருந்தது. அத்துடன், வஹாப் றியாஸ் மற்றும் மொஹமட் ஆமிர் ஆகியோர் அனுபவ ரீதியில் சிறப்பாக உள்ளதுடன், ஏனைய பந்துவீச்சாளர்களும் பலமாக உள்ளனர்.

இவ்வாறான நிலையில், இலங்கை அணி நாளைய போட்டியில் தங்களை முன்னிலைப்படுத்த வேண்டுமானால், துடுப்பாட்ட வீரர்கள் நிச்சயமாக அணிக்கு தங்களுடைய பங்கினை சரிவர நிறைவேற்ற வேண்டும்.

அவ்வாறு துடுப்பாட்ட வீரர்கள் செயற்படும் போது, பந்து வீச்சாளர்களால் மன உறுதியுடன் பந்துவீச முடியும் என்பதுடன், எதிணிக்கும் சவால்களை கொடுக்க முடியும்.

நன்றி  – Mohammed Rishad

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *