வன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை – பகுதி 17 | மகாலிங்கம் பத்மநாபன்சுட்டதீவுப் பிள்ளையார் வரலாறு

சுட்டதீவு பற்றி நான் முன்னரே பல தகவல்களை எழுதியுள்ளேன். அவை நான் சிறுவனாக இருந்தபோது செவி வழி கேள்விப்பட்ட விடயங்களேயாகும். இப்போதும் வாழ்கின்ற முன்னைய பூசாரியாரான திரு.முருகேசு செல்லத்துரை ஐயாவை நேரில் கண்டு ஓரளவு சரியான வரலாற்றை வாசகர்களுக்கு வழங்க விரும்பி அவரைச்சென்று சந்தித்தேன். அவர் 1929 ஆம் ஆண்டு பிறந்தவர். அவரிடமிருந்து அறிந்தவற்றை இப்போது எழுதுகின்றேன்.

சுட்டதீவில் அம்மனுக்கு கோவில் இருந்தாலும் பிரதான தெய்வம் பிள்ளையார் தான் என்பதை செல்லத்துரை ஐயா விளக்கமாகச் சொன்னார். செல்லத்துரை அவர்கள் பூசாரி மட்டுமல்ல, கண்களால் பார்த்தும் காதால் கேட்டும் சுயமாகவே நாட்டுக்கூத்து பயின்று அண்ணாவியாராகவும் புகழ் பெற்றவர். உடுக்கடிப் பாடல் பாடுவதிலும் தேர்ச்சிபெற்றவர்.

IMG_1094 (1)

இப்போது கிளிநொச்சி மாவட்டத்தில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஓர் அண்ணாவியாராகவும் இருக்கிறார். அரசு தன்னைக்கௌரவித்தது மட்டுமன்றி மாதா மாதம் ரூபா 5000 அரசினரால் வழங்கப்படுவதாகவும் கூறினார். சுட்டதீவில் விறுமன், ராக்கன், ராக்கிரிசி முதலிய சிறு தெய்வ வழிபாடும் நடைபெறுவதாகவும், கலையாடல், கட்டுச்சொல்லல், விளக்கு வைத்தல், பொங்கல், மடை முதலியன இடம்பெறுவதாகவும் கூறினார்.

சுட்ட தீவு பிள்ளையாரை, வாரிச்செட்டி மடத்துப்பிள்ளையார் என்றே ஐயா கதைத்தார். எனவே நான் அதற்கான காரணத்தைக் கேட்டேன். ஐயா வரலாற்றைக் கூறத் தொடங்கினார். அது நான் இதுவரை கேள்விப்படாத செய்தியாகவே இருந்தது.

தென் இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வியாபாரம் செய்ய வந்த செட்டியார்கள் சுட்ட தீவுக் கரையில் நெல் வேளாண்மை செய்யப் பொருத்தமான நிலம் இருப்பதை அறிந்து கச்சாய் துறைமுகத்தினூடாக, இங்கு வந்து விவசாயம்செய்தனர். அவர்களால் வயலைச்சுற்றி அமைக்கப்பட்ட வரப்புகள், அழிந்து விடாது இப்போதும் உள்ளதாகவும் கூறினார். அவர்கள் வயல் செய்த காலத்தில் ஒரு கொட்டிலை அமைத்து, ஒரு கல்லைப் பிள்ளையாராக இருத்தி வழிபாடு செய்து வந்தனர். பின்னர் ஏதோ காரணத்தினால் வயல்களை கைவிட்டுச் சென்றுவிட்டனர். செட்டிமாரால் அமைக்கப்பட்ட பிள்ளையார் வாரிச்செட்டி மடத்துப் பிள்ளையார் என்றே அழைக்கப்பட்டார்.

1880 ஆம் ஆண்டளவில் முதலிச்சின்னர் என்பார் மீன் பிடிப்பதற்காக தமது தோழர்களுடன் கச்சாய் துறைமுகத்திலிருந்து புறப்பட்டார். கடுமையாக வீசிய காற்றினால் அவர்கள் சுட்டதீவுக் கரையை அடைந்தனர். அப்போது சின்னரின் கண்களில் பிள்ளையார் கோவில் கொட்டில் தென்பட்டது.

முதலிச்சின்னர் தோழர்களுடன் கரையில் இறங்கி ஆராய்ந்தபொழுது பிள்ளையாரைக் கண்டார். பிள்ளையார் தம்மை அழைத்து வந்ததில் உள்ள காரணத்தைப் புரிந்து கொண்ட அவர் அன்று தொடக்கம் பிள்ளையாரின் பக்தரானார். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் கச்சாயிலிருந்து வந்து பிள்ளையாருக்கு விளக்கு வைத்து பூசை செய்யலானார். முதலிச்சின்னரின் பின் அவரது மூத்த மகன் முருகேசு (1900ஆம் ஆண்டு) பூசைக்கடமையை ஏற்றார்.

முருகேசுவின் மகனான செல்லத்துரை (அண்ணாவியார்) சிறுவனாக இருந்தமையால் முருகேசுவின் தம்பி முறையினரான பரமர் கந்தையா (சுழியர்), பரமர் கணபதிப்பிள்ளை (ஓணார்) ஆகியோர் பூசை செய்தனர். அவர்களைத் தொடர்ந்து அவர்களின் பிள்ளைகள் பூசை செய்தனர். தனது ஏழாவது வயதில் குஞ்சுப் பரந்தனுக்கு வந்து தமது சிறிய தந்தைமாருடன் வாழத் தொடங்கிய செல்லத்துரையர் உரிய வயது வந்ததும் ஏனையவர்களுடன் சேர்ந்து பூசை செய்யத்தொடங்கினார். இப்போது அவரது மகன் விஜயகாந்தன் பூசாரியாராக கடமை புரிகின்றார்.

ஆதியில் ஆனி மாதம் நடைபெறும் பொங்கலுக்கு பண்டமும் பக்தர்களும் கச்சாயிலிருந்து தோணியில் வருவது வழக்கம். இப்போது பண்டம் தரை வழியால் வருகின்றது. பக்தர்கள் பூனகரி, குஞ்சுப் பரந்தன், பெரிய பரந்தன், பரந்தன், மீசாலை முதலிய பல ஊர்களிலிருந்தும் வந்தனர். கோவிலில் வழந்து வைத்துப் பொங்கும் உரிமை பரம்பரை பரம்பரையாக பூசாரியாரின் உறவினர்களிடம் இருந்தாலும், மூன்று கிராமத்து மக்களையும் உள் வாங்குவதற்காக குஞ்சுப்பரந்தன், பெரிய பரந்தன், செருக்கன் கிராம மக்களுக்கும் சில வழந்துகளை வழங்கினர்.

நாட்டின் பிரச்சனை காரணமாக அவர்கள் இப்போது வாரிச்செட்டி மடத்துப் பிள்ளையாரிடம் செல்வது குறைந்து விட்டது. ஆனால் மீசாலை, பரந்தன், கோரக்கன்கட்டு, காஞ்சிபுரம், பூனகரி மக்கள் பெருவாரியாக இப்போதும் உழவு இயந்திரங்களிலும், மோட்டார் சைக்கிளிலும், நடந்தும் பிள்ளையாரை தரிசிக்கச் செல்கின்றனர். இப்போது கோவில் அழகாக கட்டப்பட்டு, மடப்பள்ளி கட்டப்பட்டு, மணிக்கூட்டுக் கோபுரம் அமைக்கப்பட்டு, கிணறு கட்டப்பட்டு, சுற்றுவேலி அமைக்கப்பட்டு மிகவும் அழகாக காணப்படுகின்றது.

 

செருக்கன் பிள்ளையார்

ஆதியில் மீசாலை, அல்லாரை, கச்சாய் போன்ற இடங்களில் உள்ளவர்களுக்கு குஞ்சுப்பரந்தனின் வடபகுதியிலும், செருக்கனிலும் சொந்தமாக காணிகள் இருந்தன. அவர்கள் அங்கிருந்து வந்து வந்து விவசாயம் செய்துவிட்டு, பின் தம் ஊருக்குச் சென்று விடுவர்.

1906 ஆம் ஆண்டு மாவிலங்கையடிச்சுப்பர் என்று அழைக்கப்பட்ட, சின்னத்தம்பி சுப்பர் தமக்கு சொந்தமான பத்து ஏக்கர் காணியில் முதல் முதலாக குடும்பத்தினருடன் குடியேறினார். அவரைத் தொடர்ந்து பலர் தம் குடும்பத்தினருடன் குடியேறினார்கள்.

IMG_1128IMG_1124

ஏறத்தாள முப்பத்தைந்து குடும்பங்கள் குடியேறி வாழ்ந்தன.

இந்த தகவலை உறுதிப்படுத்தவும், மேலும் விபரங்களை அறிந்துகொள்ளவும் தற்போதைய செருக்கன் பிள்ளையாரின் பூசாரிகளான பொன்னம்பலம் தர்மலிங்கம் (1949இல் பிறந்தவர்), அவரது தம்பியான பொ.நாகேந்திரம் ஆகியோர்களைச் சந்திப்பதற்காக செருக்கனுக்குச் சென்றோம்.

ஒரு சிலருக்கு நன்மை கிடைக்க வேண்டும் எனச்செய்யப்படும் காரியம் வேறு சிலருக்கு தீமையாக அமைந்து விடுவதுண்டு. 1963, 1964 ஆண்டுகளில் ஆனையிறவுப் பாலத்தை நிரப்பி மேற்குப் பக்கத்துக் கடல் நீர், கிழக்கு பக்கத்திற்கு போகாதவாறு தடுக்கப்பட்டது. கிழக்குப் பக்கத்து நீர் பாரிய நீரிறைக்கும் இயந்திரங்கள் மூலம் மேற்குப் பக்கத்துக்கு இறைக்கப்பட்டது. மழை பெய்யப் பெய்ய கிழக்குப்பகுதியில் இருந்து தொடர்ந்து மேற்குப் பகுதிக்கு நீர் இறைக்கப்பட்டது. கிழக்குப் பக்கத்தை நன்னீர் ஏரியாக மாற்றி அதனூடாக வன்னியிலிருந்து நன்னீரை யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கு திட்டமிடப்பட்டது. அதனால் 1964ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் கிழக்கே செல்ல முடியாத கடல் நீர் செருக்கன், பெரிய பரந்தன் கிராமங்களுக்குள் புகுந்தது. அதனால்பல தலைமுறையாக விவசாயம் செய்யப்பட்ட நிலம் கடல் நீரினால் உவர் நிலமாக மாற்றமடைந்தது.

விளைச்சல் குறைந்தது. மக்கள் பரந்தன் கோரக்கன்கட்டு, உருத்திரபுரம் சிவநகர் போன்ற இடங்களில் சென்று குடியேறினர். திரு பொ.தர்மலிங்கமும் அவர் தம்பியான நாகேந்திரமும் சிவநகரில் குடியேறிவிட்டனர். அங்கிருந்தே சைக்கிளில் வந்து பூசை செய்கின்றனர். தினமும் சைக்கிள் ஓட முடியாத தர்மலிங்கம் பூசைப் பொறுப்பை தமது தம்பியிடமே ஒப்படைத்து விட்டார்.

திரு பொ.தர்மலிங்கம், திரு பொ.நாகேந்திரம், கோவிலுக்கு வந்த சில பெரியவர்கள் ஆகியோரிடம் பூசை முடிந்த பின் தரப்பட்ட பொங்கலை உண்டபடியே கோவில் பற்றியும் செருக்கன் பற்றியும் கோவில் மண்டபத்திலிருந்தபடியே விசாரித்தோம்.

பூசாரிமாரையும், கோவிலையும், கோவில் அருகே காணப்பட்ட குளத்தையும், செருக்கன் கிராமத்தையும் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.

IMG_1122IMG_1115IMG_1117IMG_1106 (2)

இடம்பெயர்ந்து மக்கள் இல்லாத காலத்தில் குளத்தில் முதலைகள் குடியேறிவிட்டதாக குறிப்பிட்டனர். செருக்கன் கிராமத்தில் தற்போது நிரந்தர வீடுகள் பத்தும் தற்காலிக வீடுகள் ஐந்தும் பொது நோக்கு மண்டபம் ஒன்றுமே இப்போது உள்ளதாக அறிந்தோம். அவர்கள் கூறிய விபரங்களில் முக்கியமானதாக நான் கருதிய விடயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்று எண்ணுகின்றேன்.

கோவிலின் முதல் பூசாரியாக இருந்தவர் திரு சின்னத்தம்பி பரமர், இவர் தர்மலிங்கம் அவர்களின் பேரன் அல்ல. பரமரின் பின் திரு.பொன்னம்பலம் அவர்களும், அவரைத்தொடர்ந்து அவரது மகன் திரு.தர்மலிங்கமும் இன்று அவரது தம்பி திரு.நாகேந்திரமும் பூசை செய்கின்றனர்.

செருக்கனில் ஆதியில் விதைக்கப்பட்ட நெல் இனங்கள் பூவெள்ளை, கேரளி, பனங்களிச்சம்பா, தபால், சீனட்டி, முற்பங்கன், நாலு மொழியன், கறுப்பன் என்பனவாகும். இதில் கேரளி என்பது கேரளத்திலிருந்து யானைபிடிக்க வந்த பணிக்கர்கள் அறிமுகப்படுத்திய இனமாக இருக்கலாம். கறுப்பன் அல்லது மொட்டைக் கறுப்பன் என்றுஅழைக்கப்பட்ட நெல் அரிசி சோறு, அவ்வரிசி கொண்டு காய்ச்சப்படும் கஞ்சி, அவ்வரிசி மாவினால் தயாரிக்கப்படும் பலகாரங்கள் என்பன நறுமணமுள்ளதாகவும் சுவைமிக்கதாகவும் இருக்கும். விளைச்சல் அதிகம் பெறுவதற்காக மக்கள் தற்போது கறுப்பன் நெல்லை விதைக்காது, புதிய இன நெற்களையே விதைக்கின்றனர். பூனகரியில் மட்டும் மிகவும் அரிதாக கறுப்பன் நெல் பயிரிடப்படுகின்றது.

பொறிக்கடவை அம்மனின் துணைப்பூசாரிகளாக பலகாலங்களாக செருக்கனைச் சேர்ந்த ஒருவர் கடமை புரிந்தனர். திரு.நாகலிங்கம் என்பவரோடு அந்த முறை இல்லாது போயிற்று. திரு.நாகலிங்கம் அவர்கள் கடைசியாக பூனகரி மடம் என்ற இடத்தில் வாழ்ந்தார்.

கடைசியாக கச்சாய் துறைக்கும் சுட்டதீவு துறைக்குமிடையில் தோணி ஓட்டியவர்கள் திரு. தண்டையல் கணபதிப்பிள்ளையும் அவரது மகன் தண்டையல் அருணாசலமும் ஆகும். தண்டையல் என்ற பட்டம் தோணி ஓட்டுபவரைக் குறிக்கும்.

 

யானைக்குழிகள்

ஆதியில் யானை பிடிப்பதற்காக வெட்டப்பட்ட பாரிய யானைக் குளிகள் இன்றும் உள்ளன.  மாரிக்காலத்தில் இக்குளிகளும் சூழ உள்ள இடங்களும் நிரினால் நிரம்பிவிடும். முழு இடமும் கடல் போல காட்சியளிக்கும். காட்டிற்கு மாடுகள் கட்டச் செல்பவர்களுக்கான பாதையும் இக்குளிகளினருகே காணப்படும். காட்டிற்குள் போய் வருபவர்கள் இக்குளிகளினருகே செல்லும் போது மிகவும் அவதானமாக நடந்து செல்வர்.

காட்டில் செல்பவர்கள் இசகு பிசகாக யானைக்கூட்டத்தைக் கண்டால் ஓடி அருகே உள்ள நீர் நிலைகளில் விழுந்து ஒளித்துவிடுவர். நீருக்குள் ஒளித்தவரின் வாடை வீசாத காரணத்தால் யானைகள் அருகே சென்றாலும் ஒளித்தவரைக் காண்பதில்லை. ஒரு நாள் செருக்கனைச் சேர்ந்த ஒரு தந்தையும் மகனும் யானைக் குளிக்கருகே சென்று கொண்டிருந்தனர். அது ஒரு மாரி காலம். தந்தை தவறி யானைக்குளிக்குள் விழுந்துவிட்டார். யானைக்கூட்டத்தைக் கண்டு தான் தந்தை ஒளிக்கிறார் என்று கருதிய மகன் தானும் நீர் நிலைக்குள் படுத்துவிட்டான். மகனின் உதவி கிடைக்காது என்பதைப்புரிந்து கொண்ட தந்தை ஒருவாறு காலைக் கையை அடித்து குளியிலிருந்து தப்பி வந்துவிட்டார். அந்த மகனின் அறியாமையைப் பற்றி இப்போதும் செருக்கன் மக்கள் கதைத்து சிரிக்கின்றனர்.

சுட்டதீவுக் கோவிலின் அருகே பல்லாண்டுகளாக வீசுகின்ற காற்றினால் அடித்து வரப்படும் மணல்கள் சேர்ந்து ஒரு மணல் அணை  இயற்கையாகவே உருவாகி இப்போதும் காணப்படுகின்றது. செருக்கனில் தன்னைப்பற்றி சுயபுராணம் பாடும் ஒருவன் இருந்தான். அவன் தான் யானைகளையும் பிடித்து கயிற்றால் கட்டிவிடுவேன் என்று தன் வயதை ஒத்த தோழர்களிடம் கதை அளப்பது வழக்கம். அவன் ஒரு நாள் தன் தோழர்கள் சிலருடன் அந்த அணையின் ஒருபக்கத்தில் சென்று கொண்டிருந்தான்.

அப்போது அணையின் மறு பக்கத்தில், காட்டுக்குள்ளே யானைகள் நடமாடும் சத்தம் கேட்டது. உண்மையில் யானைக் கூட்டத்திலிருந்து பிரிந்து வந்த ஒரு சிறிய முன்னோடி யானைக்கூட்டம் அணையின் மறுபக்கத்தில் நின்றன. இதையறியாத புழுகு சிகாமணி திடீரென்று நான் ஒரு யானை பிடித்து வருகிறேன் என்று பெரும்குரலில் கத்தியபடி அணையில் ஏறி ஓடினான்.

அணையில் ஏறிக்கொண்டிருந்த அந்தச்சிறிய யானைக்கூட்டம் வெருண்டு எதிர்த்திசையில் ஓடியது. அப்போது அக்கூட்டத்தில் வந்த ஒரு வளர்ந்த குட்டி யானை கால் தடுமாறி விழுந்து மணலில் உருண்டது. பின் அது ஒருவாறு எழுந்து நோண்டியபடி ஓடி தன் கூட்டத்துடன் இணைந்து கொண்டது.

யானைகளை திடீரென்று கண்டு திகைத்து நின்ற புழுகு சிகாமணி யானைகள் ஓடிவிட்டதைக் கண்டு மனம் தேறி, ஒரு யானை விழுந்த நிகழ்வைப் பயன்படுத்த எண்ணி, “யானையைப்பிடித்துவிட்டேன், கட்டுவதற்கு கயிறு கொண்டு வருங்கள்” என்று கத்தினான். தலைமை யானை மட்டும் அன்று அவ்விடத்தில் இருந்திருந்தால் அன்றே புழுகுசிகாமணியின் கதை முடிந்திருக்கும்.

 

அக்கில் வேலி

ஆதியில் நெல் வேளாண்மையை, யானை, மான், மரை, குழுமாடு முதலிய மிருகங்களிடமிருந்து காப்பாற்ற கிராமத்தின் எல்லையில், ஊர் மக்கள் யாவரும் ஒன்றுசேர்ந்து அக்கில் வேலிகளை அமைத்தனர். காட்டிலே மரங்களைத் தறித்தனர். எருமை மாடுகளில் கட்டி இழுத்துவந்தனர். கிராமத்தின் எல்லை முழுவதும் மரங்களைக் கொண்டு சிறு இடைவெளி கூட இல்லாது அணை போல அடுக்கினர்.

இது பல வருடங்களுக்கு மிருகங்களை ஊருக்குள் வராது தடுத்து நிறுத்தும், அக்கில் வேலி என்று அழைத்தனர். இவர்களின் அக்கில் வேலி உடன் தொடர்ந்து பெரியபரந்தன் மக்களும் தங்களுக்கான அக்கில் வேலியை அமைத்துக் கொண்டனர். ஒருமுறை ஒரு முரட்டுத்தனமான யானைக்கூட்டம் அந்த அக்கில் வேலியை உடைத்துக்கொண்டு உள்ளே வந்து பயிரழிவு செய்த கதையையும், தாங்கள் யாவரும் சேர்ந்து மீண்டும் வேலியை திருத்தி அமைத்தமை பற்றியும் முதியவர்கள் கூறி, அந்தக்காலத்தில் மக்களிடையே  நிலவிய ஒற்றுமையையும் நினைவு கூர்ந்து பெருமூச்சு விட்டனர். இப்போது நெல் வேளாண்மையுடன், மந்தை வளர்ப்பும், மீன்பிடியும் பிரதான தொழிலாக இருப்பதை நாங்கள் அவதானித்தோம்.

 

தொடரும்…….

 

 

naban  மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர்குமரபுரம்பரந்தன்.

 

 

முன்னையபகுதிகள் ….

 

http://www.vanakkamlondon.com/periya-paranthan/

http://www.vanakkamlondon.com/periyaparanthan-2/

http://www.vanakkamlondon.com/periyaparanthan-3/

http://www.vanakkamlondon.com/periya-paranthan-4/

http://www.vanakkamlondon.com/periya-paranthan-5/

http://www.vanakkamlondon.com/periya-paranthan-6/

http://www.vanakkamlondon.com/periya-paranthan-7/

http://www.vanakkamlondon.com/periya-paranthan-8/

http://www.vanakkamlondon.com/periya-paranthan-9/

http://www.vanakkamlondon.com/periya-paranthan-10/

http://www.vanakkamlondon.com/periya-paranthan-11/

http://www.vanakkamlondon.com/periya-paranthan-12/

http://www.vanakkamlondon.com/periya-paranthan-13/

http://www.vanakkamlondon.com/periya-paranthan-14/

http://www.vanakkamlondon.com/periya-paranthan-15/

http://www.vanakkamlondon.com/periya-paranthan-16/

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *