அனைத்துப் பாவங்களையும் போக்கும் பிரதோஷ கால சோமசூக்தப் பிரதட்சணை முறை.


ஒவ்வொரு மாதமும் 2 பிரதோஷங்கள் வரும். ஒவ்வொரு பிரதோஷத்தன்றும் பகலில் விரதம் இருந்து பிற்பகல் 4.30க்கு மேல் சிவபெருமானை ரிஷபாரடராக தரிசனம் செய்ய வேண்டும்.

சனிக்கிழமை பிரதோஷம் வரும் நாளில் உபவாசம் இருந்தால் குழந்தை பாக்கியமும், செவ்வாய்க்கிழமை இருந்தால் கடன் நிவர்த்தியும், ஞாயிற்றுக்கிழமை இருந்தால் தீர்க்காயுள், ஆரோக்கியம் ஆகியவையும் ஏற்படும்.

இறைவன் தேவர்களைக் காக்க ஆலகால விஷம் உண்ட காலத்தைத் தான் பிரதோஷ காலம் என்பர். பிரதோஷ காலத்தில் சிவபெருமான் தன் தேவியுடன், ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மும்முறை வலம் வருவார். அச்சமயம் முதல் சுற்றில் வேத பாராயணமும், இரண்டாவது சுற்றில் திருமுறை பாராயணமும், மூன்றாவது சுற்றில் நாதஸ்வர இன்னிசையும் நடைபெறுவது ஐதீகம்.

அச்சமயம் பக்தர்கள் அனைவரும் ‘ஓம் நமச்சிவாய’ என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓயாமல் சொல்ல வேண்டும். சிவபெருமான் ரிஷப வாகனத்தில் வீதி உலா வரும்போது பக்தர்களும் பின்னால் செல்வது நல்லது.

கோவிலில் இருக்கும் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலையும், சிவப்பு அரிசியும், நெய் விளக்கும் வைத்து வழிபடுவது சாலச்சிறந்தது. பிரதோஷ காலத்தில் சிவலிங்கத்தை நந்திதேவரின் இரண்டு கொம்புகளுக்கிடையே கண்டு வணங்க வேண்டும்.இவ்வாறு, பிரதோஷ காலங்களில் சோமசூக்தப் பிரதட்சிணம் என்னும் முறையில் வலம் வந்து இறைவனை வழிபட வேண்டும்.

பிரதோஷ கால சோமசூக்தப் பிரதட்சணை முறை

முதலில் நந்திகேஸ்வரரின் கொம்புகள் வழியாக சிவலிங்கத்தை தரிசனம் செய்துவிட்டு அப்பிரதட்சிணமாக சண்டிகேஸ்வரர் சந்நிதி வரை சென்று அவரை வணங்கி பிறகு பிரதட்சணமாக ஆலயத்தை வலம் வந்து, சுவாமியின் அபிஷேகத் தீர்த்தம் விழும் நிர்மால்யத் தொட்டியைக் கடக்காமல் அப்படியே வந்த வழியே திரும்பி மீண்டும் நந்தியின் கொம்புகள் வழியே சிவலிங்கத்தைத் தரிசித்து மீண்டும் சண்டிகேஸ்வரர் சந்நிதி வரை சென்று அவரையும் தரிசித்து, மீண்டும் அப்பிரதட்சணமாக வலம் வந்து மீண்டும் சுவாமி அபிஷேகத் தீர்த்தம் விழும் நிர்மால்யத் தொட்டியைக் கடக்காமல் அப்படியே வலம் வந்த வழியே திரும்பி, மீண்டும் நந்திகேஸ்வரரின் கொம்புகள் வழியே இறைவனை வழிபட்டு, மீண்டும் சண்டிகேஸ்வரர் சந்நிதி வரை சென்று அவரை வழிபட வேண்டும்.

இவ்வாறு மும்முறை வலம் வந்து வழிபாடு செய்வதே பிரதோஷ கால பிரதட்சண முறையாகும்.இது அனைத்துப்பாவத்தையும் போக்கிவிடும் வல்லமை வாய்ந்தது. அதே சமயம் அனைத்து விதமான செல்வ வளத்தையும் தரக்கூடியது.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *