ஆத்மாவின் ஒப்பாரி | கவிதை | இரா.சி. சுந்தரமயில்


நீர் ஊற்ற மறந்த

என் வீட்டுத்தோட்டம்

எனக்காக காய்கனிகள்

தந்த போது

பாலூட்டி சீராட்டி

பார்த்துப் பார்த்து

பக்குவமாய் வளர்த்த

என் மகனே

இரண்டாம் நாள்

பாலுக்குக் கூட காத்திராமல்

எந்திரத்தில் என்னை எரியூட்டி

எந்திரமாய்ப் போனாயே…..

சாம்பல் வாங்க மறந்தாயே…

“இருக்கும் போது இவன்

என் பேர் சொல்லும் பிள்ளை

இறக்கும் போது எனக்கு

கொள்ளி வைக்கும் பிள்ளை”

என்றெல்லாம் சொல்லிய

என் வாய்க்கு

‘வாக்கரிசி’ போடலையே…..

நிரந்தரமாய் நான் தூங்க

அம்மா என்று

அழக்கூட நேரமின்றி

அவசரமாய்ப் போனானே…..

தலைமுடியும் மழிக்கலையே……

சொட்டு கண்ணீர் வடிக்கலையே….

“மகனே! இக்கணமே

நான் உன்னைப் பார்க்க வேண்டும்

மறுகணம் நான்

இருப்பேனோ இறப்பேனோ”

என்று இறுதி மூச்சில்

நான் தவித்த போது

“இதோ வருகிறேன்” என்ற நீ

அருகில் இருந்த ஆயாவிடம்

“இறந்த பின் சொல்லுங்கள்

அப்போது வருகிறேன்” என்றாயே…..

உன்னைப் பிரிந்து சென்ற நான்

புரியாமல் போனேனே……

புலம்பவிட்டுப் போனாயே…..

பந்தல் போடலையே…..

பச்சைப்பாடை விரிக்கலையே……

குடம் தண்ணீர் ஊத்தலையே……

கோடித்துணி போடலையே…….

உடன்பிறந்தானும் வரவில்லையே…..

ஊராரும் கூடலையே……

மின்னலாய் நீ வந்தாய்

மின்மயானம் கொண்டு சென்றாய்

கடமையைச் செய்வதாய் நினைத்து

என்னிடம் கடன்பட்டாயே…….

 

நன்றி : இரா.சி. சுந்தரமயில் | வார்ப்பு இணையம்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *