காகிதம் அருந்திய கனவின் குருதி | கவிதை | ஸ்பரிசன்


 

நெகிழ்ந்த துயிலின் கரையில்
உருப்புரியா ஒருதுளி கனவின்
நினைவினில் என் மனம்.

காற்றினுள் நிலவிய ஈரமாய்
விழியினில் தேங்கிய நீர்
நிற்பதறியாது வழிந்து சுட்டது
இதயத்தில் நீ செழித்த நாட்களை.

உன் முகம் தெரிந்ததோ கனவில்…

பிரார்த்தனையின் வாசனையாய்
வாழ்ந்திருந்த காலத்தின்
லஹரி தொடர்ந்துவரினும்
நீயற்ற என் வீட்டில் இருப்பதோ
நாகசீறலின் வலியூட்டும்அச்சங்களே.

சாலைமர நிழல்களும் இசையும்
வாய்த்த புத்தகங்களின் சகபகிர்வில்
திருமணத்தில் ஒருவரான நம்மை
அன்றொரு அறையில் சிலரின்
காகிதமும் குச்சிப்பேனாவும்
ரத்தென்று சொல்லி விட்டன.

உயிரின் மீது உலைகள்
தாவி நின்று கொதிக்கின்றது.

அசையாது கிடக்கின்றேன்
வெண்ணிற பருத்திப்படுக்கையில்…

கொலையுறும் மழலை போல்
விபரமற்று துடிக்கும் மனதுக்கு
தெரியவேயில்லை…
கண்ட கனவில் உன் முகமும்
உன் உடையும் உன் சூடும்…

எழமுடியாது தவிக்கும்
சுடப்பட்ட குதிரையென
துணை நீங்கிய மனம்
தனித்துத்துடிக்கிறது விரிப்பினில்…

நகங்களில் சிக்கிக்கொண்டு
வீறிட்டு அழும் அந்த கனவை
என் செய்ய என் தோழியே?

 

– ஸ்பரிசன் –Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *