என்னை விட்டுச் சென்றாயே…..! | கவிதை | விமல் பரம்


கண்களை மூடி

கனவுகளை வரவழைத்தேன்

களங்கமில்லா முகம் தோன்றி

கண்களை நிறைத்தது

புன்னகை பூக்கும் உதடு

குழிவிழும் கன்னங்கள்

பார்வையில் ஒளிவீச்சு

மனசெல்லாம் அன்பின் ஊற்று!

 

உன்னை நான் சந்தித்த அந்த

நொடிப் பொழுதில்

அழகோவியமாய் ஆழப் பதிந்தாய்

என் நினைவில்

என்துணை நீயென்று மணியொலித்தது

உள் மனதில்

கைகோர்த்து இணைந்துகொண்டோம்

திருமணத்தில்!

 

காதலித்து இணையவில்லை

இணைந்தபின் காதலித்தோம்

கார்மேகம் சூழவில்லை

சந்தோஷவானில் சிறகடித்தோம்

கணப்பொழுதும் கலங்கவில்லை

மனநிறைவாய் வாழ்ந்திருந்தோம்

காலம் நம்மைப் பிரிக்கவில்லை

பிரிவுக்கு நாமே காரணமானோம்!

 

கண் விழிக்கும் நேரமெல்லாம்

உன் உருவம் தேடுகின்றேன்

என்னை விட்டுச் சென்றாயே

தனிமையில் நான் தவிக்கின்றேன்

உன் தவிப்பின் வேதனையை

என் மனதால் உணர்கின்றேன்

இனி வேண்டாம் பிரிவுத் துயர்

உன் வரவுக்காய் ஏங்குகின்றேன்!

 

என் வாரிசைச் சுமந்து

பிறந்தவீடு சென்றவளே

வாரியணைத்துக் கொஞ்சிட

தீபம் சுற்றி வரவேற்பேன்

தாமதம் செய்யாதே

விரைவில் வந்துவிடு

நம் காதல் பரிசோடு!

 

– விமல் பரம் | அவுஸ்திரேலியாLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *