தலைவர் பிரபாகரன் பற்றிய ஹக்கீமின் மதிப்பு செயலாக மாற வேண்டும்!


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர், தேசியத் தலைவர் பிரபாகரன் குறித்து முஸ்லீம் காங்கிஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் பேசிய கருத்துக்கள் ஊடகப் புலத்தில் பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. வடக்கில் பிரபாகரன் ஒருவர் உருவாக்கப்பட்டு, நாட்டை நாசப்படுத்தியதுபோல, முஸ்லீம் பிரபாகரனை உருவாக்க வேண்டாம் என்று கடந்த வாரம் முல்லைத்தீவில் வைத்து ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரி கூறியிருந்தார்.

இந்தக் கருத்து ஈழத் தமிழ் மக்களை பெரும் சீற்றத்திற்கு உள்ளாக்கியிருந்தது. உண்மையில், இக் கருத்தை கூறியதன் மூலம் மைத்திரிபால சிறிசேன அனைத்து இன மக்களின் வெறுப்புக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளார். ஈழத் தமிழ் மக்களை மாத்திரமின்றி, முஸ்லீம் மக்களின் வெறுப்புக்கும் விமர்சனத்திற்கும் மைத்திரி ஆளாகியுள்ளமைமைத்தான் பாராளுமன்ற உறுப்பினர் ஹக்கீமின் பேச்சு உணர்த்துகின்றது.

அந்த வகையில், ஜனாதிபதி சிறிசேனவின் கருத்து முட்டாள்தனமான கருத்து ஹக்கீம் சாடியுள்ளார். பிரபாகரனுக்கு நிகர் பிரபாகரனே என்றும் பிரபாகரனை எவருடனும் ஒப்பிட முடியாது என்றும் வரலாற்றில் இனி எவரும் பிரபாகரன் ஆகிவிட முடியாது என்றும் ஹக்கீம் கூறியுள்ளார். அத்துடன் சமாதானப் பேச்சு வார்த்தைக் காலத்தில் வன்னியில் தலைவர் பிரபாகரனை சந்தித்தமை பற்றி நினைவு கூர்ந்துள்ள ஹக்கீம், தம்முடன் 5 மணிநேரத்தை செலவிட்டதாகவும் தமது அரசியல் செயற்பாடுகளுக்கு பெரும் ஆதரவை அவர் அளித்திருந்ததாகவும் நினைவுபடுத்தியுள்ளார்.

ஹக்கீம் போன்றவர்களின் இந்தக் கருத்து செயலாக மாற வேண்டிது அவசியமானது. முஸ்லீம் மக்கள் தொடர்பிலான விடுதலைப் புலிகளின் அக்கறையும் இடமும் கடந்த காலத்தில் பல்வேறு தரப்புக்களாலும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கே உள்ள பாரிய ஆபத்து யாதெனில் ஹிஸ்புல்லா போன்றவர்களும் ராசாத் பதியூதீன் போன்றவர்களும் தமிழ் முஸ்லீம் சமூகங்களை இணைந்து செயற்ட அனுமாதிக்காத, விரும்பாத மனநிலை கொண்டவர்கள்.

அதாவது தமது கட்சி அரசியலுக்காக தமிழ் முஸ்லீம் மக்களை பிரித்தாளும் சிந்தனையைக் கொண்டவர்கள். அண்மையில் பாராளுமன்ற தெரிவுக் குழுவின் முன்னிலையில் வாக்குமூலம் அளித்த ஹிஸ்புல்லா, வடக்கு கிழக்கு இணைத்தால் இரத்த ஆறு ஓடும் தமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவார் என்று கூறியுள்ளார். தமிழ் மக்களின் நிலங்கள், ஆலயங்களை அழித்து தமது ஆதரவாளர்களை குடியேற்றியவர் ஹிஸ்புல்லா.

வடக்கு கிழக்கில் இரத்த ஆறு ஓடும் என்று இவர் ஏற்படுத்திய தூண்டுதல்களும் சஹ்ரான்களின் தோற்றத்திற்கு அடிப்படையாகவும் அமைந்திருக்க கூடும். இந்த நிலையில் தொடர்ந்தும் இஸ்லாமிய மக்கள் மத்தியில் அடிப்படைவாத கருத்தை விதைத்து பயங்கரவாதத்தை ஹிஸ்புல்லா தூண்டி வருகின்றார் என்பதை தெரிவுக் குழு முன்னிலையில் அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஒரு ஆளுநராக பதவி வகிக்கக்கூடிய ஒருவர் நாட்டில் இரத்த ஆற்றை ஓடச் செய்வேன் என்று கூறியவர் என்பது எவ்வளவு கொடுமையானது? எப்பிடி இரத்த ஆற்றை ஓடச் செய்வீர் என்று தெரிவுக் குழு கேள்வி எழுப்பியபோது, ஹிஸ்புல்லாவின் மனங்களில் அந்த திட்டம் கற்பனையில் வந்து போயிருக்கும். இதற்காக ஹிஸ்புல்லாமீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கிழக்கில் ஹிஸ்புல்லாவின் அட்டகாசங்களுக்கு சற்றும் குறைவற்றது வடக்கில் ரிசாத்தின் அடாவடிகள். முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட நில ஆக்கிரமிப்புக்கள் காடழிப்புக்கள் ஹிஸ்புல்லாவின் காளி கோயில் அழிப்புக்களைப் போன்றவை. இந்த நிலையில்தான் ஹக்கீமின் கருத்து மிகவும் முக்கியமானதாக உள்ளது.

தமிழ் மக்கள் முப்பது வருடங்களாக தமது இன நில உரிமைக்காக போராடி வருகிறார்கள். அதற்காக மாபெரும் தியாகங்களை அவர்கள் செய்துள்ளனர். இலங்கைக்குள் சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்வதில் மிகவும் இணக்கம் கொண்ட முஸ்லீம் மக்கள் தமிழ் மக்களின் மனங்களையும் வடக்கு கிழக்கின் நிலவரங்களையும் புரிந்து கொண்டு இணைந்த வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் சமூகமாக இணைந்து வாழ வேண்டும். தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைகளை மைத்திரி தீர்க்க வேண்டும் என்று ஹக்கீம் கூறுகிறார். அதனை தீர்க்க முஸ்லீம் மக்களும் தமது நியாயமான பங்களிப்பை நல்க வேண்டும்.

தீபச்செல்வன்

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *