பாரதி ஒரு தபசி – பிரணதர்த்திஹரன்


எப்போ வருவாரோ என்ற தொடர் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில், பிரணதர்த்திஹரன், பாரதியாரின் ஆன்மீக பக்கத்தை பற்றி சொற்பொழிவு ஆற்றியிருந்தார்.

“புரட்சிகரமான பாரதி ஆங்கிலேய அதிகாரிகளை எதிர்த்து, விடுதலை உணர்வோடு சுற்றித் திரிந்து கொண்டிருந்தவர். நாம் அறிவோம், உண்மையில் ஒரு போராளிக்கு பின் ஞானி இருந்திருக்கிறார். தமிழ் புலமையில் உச்சத்தை அடைந்தவர் என்பதே நிதர்சனமான உண்மை. நவீன இலக்கியத்தில் மரபை விட்டுவிடாமல் கம்பனை போல் இளங்கோவை போல் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர் பாரதி.

இவ்வுலகில், பாரதியை போல் மிகவும் சுவாரஸ்யமான வாழ்க்கையை வாழ்ந்தவர் உண்டா என பாரதியை நன்கு உணர்ந்தவர்களுக்கு தெரியும் எதற்கும் கட்டுப்படாமல் கால் போன போக்கில் வாழ்வை எதிர்கொண்டவர் பாரதி. அவர் ஒரு புதுமை விரும்பி, என்றும் புதுமையை நாடிச் செல்பவர் அதன் காரணத்தினாலே அவர் முக்தியை நாடிச் சென்றார்.

முக்தி என்பது, விடுதலையைக் குறிக்கும் சொல். முதலில் நாட்டின் விடுதலை, பின் சமூக விடுதலை. சமூகத்தில் பெண்களுக்கான விடுதலை, பின் இறைவனிடம் சரணாகதியாகும் ஆன்ம விடுதலை. பாரதி ஒரு மாபெரும் தபசி, தவத்தை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தார். தவம் எல்லோரிடமும் அன்பு செலுத்துதல் தான், அன்பே சிவம், அன்பு தான் இறைவனை அணுகுவதற்கான ஒரே வழி, பாரதி பாடுகிறார் காக்கைச் சிறகினிலே நந்த லாலா என்று.

ஒரு சமயம் பாரதியின் குடும்பம் கஷ்டத்தில் இருந்தது. செல்லம்மா சமைப்பதற்காக கொஞ்சம் அரிசியை வைத்திருந்தார். அதை எடுத்து காக்கைகளுக்கும், குருவிகளுக்கும் உணவளித்து விட்டார். திகைப்பில் இருந்த செல்லம்மாவிடம் “இதோ பார் காக்கைகளும் குருவிகளும் எத்தனை ஆனந்தமாக இருக்கிறது” என்று எங்கும் அன்பைச் செலுத்தினார்.

அன்பில் தவம் இருந்தார். அனைத்திலும் இறைவனை கண்டார். உண்மையில், அவர் இல்லற வாழ்க்கையை தவிர அனைத்தையும் துறந்தார். தன கையில் உள்ளதை வாரி வழங்கினார். தான் வாழ நினைத்த வாழ்க்கையை தன் அன்பின் மூலமாக வாழ்ந்தார். கீதையின் தாக்கம் அவரிடம் இருந்தது. கீதையை அதிகமாக பயின்றார். கர்மம், பக்தி, யோகம், ஞானம் என கீதையின் சாரத்தை முழுமையாக அடைந்தார்.

அவரது கவிதைகளில் தத்துவம் வெளிப்படும். பெரும்பாலும் கவிதைகள் அவரது புறச்சூழலை சார்ந்தே அமைந்தது. அவரது பாடல்களில் எதார்த்தவியல் பிரதிபலிக்கும் தான் கண்ட காட்சியை தனக்கே உரிய அதீத புலமையின் பால் காலத்தை வென்றிருக்கும் கவிதைகளை தமிழுக்கு கொடையாக அளித்தார்.

பாரதி தன் வாழ்நாள் முழுவதும் அன்பில் திளைத்திருந்தார். அதை ஒட்டு மொத்த சமூகத்திற்கும் பரப்பினார். பல மொழி ஆளுமையுடையவர் தனது இருப்பை தக்கவைக்க ஒரு போதும் நினைத்ததில்லை பல எதிர்ப்புகளுக்கு இடையில் வாழ்ந்தார். தான் செல்லும் இடம் காணும் காட்சி அனைத்திலும் அன்பு செலுத்தினார். அதில் இறைவனைக் கண்டார்.

 

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *