குண்டான கர்ப்பிணி பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள்!


கர்ப்பிணிகளின் முக்கியமான பிரச்சனைகளுக்கு அதிக உடல் எடை ஒரு காரணமாகும். 18 – 30 சதவிகித கர்ப்பிணிகள் எடை அதிகமுள்ளவர்களாக இருக்கின்றனர்.

இதற்குக் காரணம் அதிக உடல் உழைப்பு இல்லாமை, துரித உணவுகள் அதிக அளவு உண்பது, கர்ப்பம் தரிக்கும் முன்பே அதிக எடையுடன் இருப்பது. குடும்ப மரபு வழி தொடர்பியலால் பெரிய உருவமாகவும் அதிக எடையுடனும் இருப்பர்.

பிரச்சனைகள்!
அதிக எடையினால் மாதவிடாய் கோளாறுகள், கருமுட்டை சரியாக உருவாகாது, கர்ப்பம் தரிப்பதில் சிக்கல், சுறுசுறுப்பின்மை, செயல்பாடுகள் குறைதல், கர்ப்பம் தரித்தாலும் கருச்சிதைவு ஏற்படலாம்.

ஆரம்பத்திலேயே அதிக எடை இருப்பவர்கள், குழந்தைப்பேற்றுக்கு முன்பே எடையைக் குறைக்க வேண்டும். 5 கிலோ குறைந்தால்கூட நன்மை உண்டாகும்.

அளவான சரிவிகித உணவு, அதிக நார்ச்சத்துகள், பழங்கள், கீரைகள் சாப்பிட வேண்டும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

வயது உடல் உழைப்புக்கேற்ற உணவு கலோரி எடுக்க வேண்டும். ஒரு காருக்கு எவ்வளவு தூரம் செல்ல வேண்டுமோ அந்த அளவுதான் டீசல் போடுவோம். அதேபோல் உடல் உழைப்புக்கு ஏற்ற அளவு உண்டால் போதும்.

இதைச் சிறு வயதிலிருந்தே வலியுறுத்தி வளர்க்க வேண்டும். கையில் அளவாகக் காசு இருந்தால் வேண்டிய செலவுகளை மட்டும் செய்வோம். அதிகம் பணமிருந்தால் வங்கியில் சேர்த்து வைப்போம். அதேபோல் அதிகமான உணவு சத்துக்கள் கொழுப்பாக மாறி உடலில் எல்லப் பாகங்களிலும் சேரும்.

எனவே, உணவைத் தேவையான அளவோடு சரிவிகிதமாகச் சாப்பிட வேண்டும். வேண்டிய உடற்பயிற்சி, யோகாசனம், பிரணாயாமம் செய்யலாம். கர்ப்பிணிகள் அல்லாதவர்கள் ஓடுதல், கயிறு தாண்டுதல், நீச்சல் போன்றவற்றைச் செய்யலாம்.

முதலில் 3 மாதம் வாந்தி, மயக்கம் இருக்கும், இந்தச் சமயத்தில் திட உணவுகளைவிட திரவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். அதனால், கிரக்கம் வராது. சத்து கிடைக்கும். எடையும் 2 அல்லது 3 கிலோ குறையும்.

பாதிப்புகள்!
அதிக எடையினால் மாவுச்சத்து அதிகரிப்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து கர்ப்பகால சர்க்கரை நோய் வரலாம். கர்ப்பம் வளர, வளர சர்க்கரையின் அளவு அதிகரித்துக்கொண்டே போகும்.

அதனால் பல பிரச்சனைகள் வரலாம். குறைப்பிரசவம் நிகழும், எடை குறைந்த குழந்தையாயிருக்கும். குழந்தைக்கு நரம்பு மண்டலப் பாதிப்புகள், பல்வரிசை பாதிப்புகள் வரலாம்.

ஆண் குழந்தையாய் இருந்தால் ஆண்குறி சரியாக உருவாகாது. இந்த மாதிரி பிரச்சனைகளோடு பிறக்கும் குழந்தைகள் சில நாட்களிலேயே இறந்துவிடும். சிலநேரம் குழந்தை இறந்தே பிறக்கும்.

பிரசவத்துக்குப் பின்…
அவர்கள் முந்தைய எடையுடன் கர்ப்பத்தின்போது 12 – 15 கிலோ கூடும். அந்த எடை அப்படியே நிலைத்துவிடும்.

சர்க்கரை நோய் அப்போது சிறிது சிறிதாக குறைந்தாலும் 2 – 3 வருடத்தில் ‘டைப்-2’ சர்க்கரை நோய் வந்துவிடும். அதேமாதிரி ரத்தக் கொதிப்பும் சீக்கிரமே வந்துவிடும். சிலநேரம் தைராய்டு குறைவும் ஏற்படலாம்.

பிரச்சனைகளைத் தவிர்ப்பது

  • அதிக எடையால் கர்ப்பத்தின் முன்பே எடை குறைத்தல், உடற்பயிற்சி, உணவு முறைகளைச் சொல்லிக் கொடுத்துக் கட்டுப்படுத்துதல்.
  • கர்ப்பம் தரித்தபின் முதல் 3 மாதம் தண்ணீர் ஆகாரம் அதிகம் எடுத்து உடற்பயிற்சி செய்து எடை குறைப்புச் செய்யலாம்.
  • ஆரம்பத்திலேயே உயரம், எடை பார்த்துப் பிரச்சனைகள் வருவதைச் சொல்ல வேண்டும்.
  • ரத்தக் கொதிப்பு, ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்புச்சத்து, தைராய்டு, ரத்தசோகை, சிறுநீரகப் பிரச்சனை உள்ளதா எனப் பார்க்க வேண்டும்.
  • 4 மாதத்துக்குப் பின் மாதா மாதம் உடற்சோதனை, ரத்தக் கொதிப்பு, ரத்தப் பரிசோதனை பார்க்க வேண்டும்.
  • குழந்தைகளுக்குப் பிறவிக் குறைபாடு உள்ளதா என்று பரிசோதனை செய்ய வேண்டும்.
  • நஞ்சுக்கொடி நன்றாக உண்டாகி இருக்கிறதா, ரத்த ஓட்டம் நன்றாக உள்ளதா, குழந்தைக்கு போதிய ரத்த ஓட்டம் கிடைக்கிறதா என்று அனுமானிக்க வேண்டும். குடல்நீர் சரியான அளவு உள்ளதா, அதிகரிக்கிறதா அல்லது மிகக் குறைவாக உள்ளதா என்று பார்த்துக் குழந்தைக்கு அதனால் பாதிப்பு உள்ளதா எனப் பார்க்க வேண்டும்.
  • பிரசவத்தைப் பொறுத்து முன் கூட்டியே தீர்மானிக்க வேண்டும். மயக்கவியல் மருத்துவரிடம் ஒருமுறை பார்த்து அறுவைச் சிகிச்சைக்கான தேவையான முன்னேற்பாடுகளை எதிர்வரும் பிரச்சனைகளுக்குத் தேவையான வேண்டிய மருந்துகள் முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

பின் விளைவுகள் (குழந்தைக்கு)
அதிக எடையுடன் உள்ள தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தையும் அதிக எடையுடன் இருக்கும். அதிக எடையுடன் வளரும் மூளைச் செயல்பாடுகள் மந்தமாக இருக்கும்.

அந்தக் குழந்தைக்கும் பிற்காலத்தில் சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, தைராய்டு பிரச்சனைகள் சீக்கிரமே வரும். எனவே, சிறுவயதிலிருந்தே குழந்தை சரியான எடையில் வளர்க்க வேண்டும். சரியான உணவு முறைகள், உடற்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

நன்றி – டாக்டர் சகுந்தலாதேவி

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *