ஒரு வாரத்தில் அரசியல் நெருக்கடிக்கு முடிவு – ஜனாதிபதி


இன்னும் ஒரு வாரத்தில் தற்போதைய அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

பிரச்சினைகளைத் தாம் உருவாக்கவில்லை எனவும் ரணில் விக்ரமசிங்கவே அந்தப் பிரச்சினைகளுக்கு காரணகர்த்தா எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். பிரச்சினைக்கு தீர்வு காணும் தமது முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி அனைத்து தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதியும் கடந்த அக்டோபர் 26 ஆம் திகதியும் தாம் மேற்கொண்ட இரண்டு தீர்மானங்களும் சரியான அரசியல் முடிவுகள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார். சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாநாட்டில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

சுதந்திரக் கட்சியின் அரசியல் பயணத்தில் ரணிலின் சீரழிந்த அரசியலைத் தோற்கடிக்கும் வல்லமை இன்று கிடைத்துள்ளதாக ஜனாதிபதி இதன்போது கூறினார். நாட்டில் அரசியல் மோதல் கிடையாது என தெரிவித்த ஜனாதிபதி, அரசியல் நெருக்கடியை உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி தம்மை ஜனாதிபதியாக்கிய 62 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு இன்று நன்றி கூறுவதாக அவர் தெரிவித்தார். தாம் ஜனாதிபதியான பின்னர் பிரதமராகப் பதவியேற்ற ரணில் 62 இலட்சம் மக்களின் அபிலாசைகளை முற்றாக சீரழித்ததாகவும் ஜனாதிபதி குற்றம் சுமத்தினார்.

எனினும் அவை அனைத்தையும் பொறுமையோடு கடந்த மூன்றரை வருடங்களாக அவதானித்து வந்ததாகவும் இந்த நெருக்கடி நிலையை அமைச்சரவையில் இருந்தவர்கள் நன்கு அறிந்திருந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ மைத்திரிபால சிறிசேன இணைவு திடீரென ஏற்பட்ட ஒன்றல்ல எனவும் ரணில் விக்ரமசிங்க நல்லாட்சிக் கொள்கையை அழித்து நாட்டையும் அழித்து பண்பான ஐக்கிய தேசியக் கட்சியையும் சீரழித்ததாகவும் ஜனாதிபதி குற்றம் சாட்டினார். இதற்காகவே ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து விரட்டியதாக ஜனாதிபதி கூறினார்.

நாட்டை பிளவுபடுத்தாமல் வடக்கு மக்களுக்கு வழங்கக்கூடிய அனைத்தையும் ரணில் விக்ரமசிங்க திட்டமிட்ட வகையில் தாமதப்படுத்தியதாக ஜனாதிபதி குற்றம் சாட்டினார்.

நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி ஐந்து வர்த்தமானிகளை வெளியிட்டதாகவும், உன்னதமான நோக்கத்துடனே ஊழலுக்கு எதிராக தாம் வர்த்தமானிகளில் கையொப்பமிட்டதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் கையொப்பமிட்டாலும் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பதவியில் அமர்த்தப்போவதில்லை என ஜனாதிபதி மீண்டும் கூறினார்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *