பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபியுங்கள் – ஜனாதிபதி


பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை முறையாக நிரூபிக்குமாறு ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான கட்சிகளுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தனர்.

பாராளுமன்றத்தின் பெரும்பான்மை தம்மிடம் உள்ளதாகவும் அதனை ஏற்றுக்கொள்ளுமாறும் குறித்த கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தாம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அரசியல் அமைப்பின் பிரகாரமே செயற்படுவதாகவும் அதற்கு மதிப்பளிப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார். பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கு மதிப்பளித்து பெரும்பான்மையை முறையாக நிரூபிக்குமாறு குறித்து தரப்பினருக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

கடந்த 14 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பிரேரணையை பாராளுமன்றத்தில் இன்று (16) மீண்டும் சமர்ப்பித்து பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பை நடத்துமாறும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்வாறு வாக்கெடுப்பு நடத்தப்படும் பட்சத்தில், அரசியலமைப்பின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க முடியும். எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்திற்குள் அமைதியை உறுதிப்படுத்த ஜனநாயகம் மற்றும் நிலையியற் கட்டளைகளுக்கு அமைய செயற்படுமாறும் ஜனாதிபதி பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *