ஜனாதிபதி இன்று புதிய திட்டம் ஆரம்பம்!


 

கிராம சக்தி மக்கள் இயக்கத்தின் வடமேல் மாகாண செயற்குழுக் கூட்டம் இன்று (13) முற்பகல் புத்தளம் மதுரங்குளி மேர்ஸி கல்வி நிலையத்தில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது.

வறுமையை இல்லாதொழிப்பதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் கிராம சக்தி மக்கள் இயக்கத்துடன் இணைந்ததாக நடைமுறைப்படுத்தப்படும் செயற்திட்டம் (கிராம சக்தி – கிராமத்தைக் கட்டியெழுப்பும் பயணம்) நாளை (13) புத்தளம் மாவட்டத்தில் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.

கிராமத்தைக் கட்டியெழுப்பும் பயணம் செயற்திட்டத்தினூடாக கிராம மக்களின் அபிவிருத்தி பிரச்சினைகளுக்கு துரிதமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கப்படுவதுடன், அதன் முதலாவது வேலைத்திட்டம் புத்தளம், மகாவெவ, மெதகொட பிரதேசத்தில் நாளை பிற்பகல் ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

புத்தளம் மாவட்டத்தின் 16 பிரதேச செயலக பிரிவுகளையும் சேர்ந்த மக்களுக்கு அபிவிருத்தி தொடர்பான தமது பிரச்சினைகளை நேரடியாக ஜனாதிபதியிடம் முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் இதனூடாக வழங்கப்படவுள்ளது.

மாகாண மக்கள் பிரதிநிதிகளும் அரச உத்தியோகத்தர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அழைக்கப்பட்டுள்ளதோடு இதன்போது முன்வைக்கப்படும் மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாகவே தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவுள்ளார்.

ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த செயற்திட்டத்தினை எதிர்காலத்தில் சகல மாவட்டங்களிலும் நடாத்த எதிர்பார்க்கப்படுகின்றது.

அரசியல் பிரதிநிதிகள், அரச உத்தியோகத்தர்கள் ஆகியோரது பங்களிப்பில் இடம்பெறும் இச்செயற்குழுக் கூட்டத்தில் கிராம சக்தி மக்கள் இயக்கம் வடமேல் மாகாணத்தில் செயற்படுத்தப்படும் விதம், முன்னேற்றம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது.

நாட்டு மக்களின் வறுமையை இல்லாதொழிக்கும் நோக்குடன் ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய 2017 ஆம் ஆண்டில் கிராம சக்தி மக்கள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

அன்று முதல் இன்று வரை வறுமையை இல்லாதொழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையிலான கொடுக்கல் வாங்கல்களாகவே இடம்பெற்றுள்ளன. ஆயினும் கிராமசக்தி மக்கள் இயக்கத்திலேயே முதன்முறையாக வறுமையை இல்லாதொழிக்கும் திட்டத்தினை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு தனியார் துறையினரின் பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்களின் உற்பத்திகளுக்கு நிலையான விலையும் தொடர்ச்சியான சந்தைவாய்ப்பும் பெற்றுக்கொள்ளப்படுகின்றது.

இதற்கமைய எந்தவொரு சிறிய முயற்சியாளர்களும் தமது வியாபாரத்தினை முன்னேற்றுவதற்காக பாரிய நிறுவனங்களுடன் கைகோர்த்து செயற்பட கிராமசக்தி இயக்கம் வழிகாட்டுகின்றது. தேவையான நவீன தொழில்நுட்ப அறிவினை பெற்றுகொள்ளல், உள்நாட்டு வெளிநாட்டு சந்தைவாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளல், கடன் மற்றும் நிதியுதவிகளை பெற்றுக்கொள்ளல் என்பன கிராமசக்தி இயக்கத்தினூடாக கிடைக்கப்பெறும் நன்மைகளாகும். இதனூடாக அவர்களது வாழ்க்கைத்தரம் உயர்த்தப்படுவதுடன், அவர்களது உற்பத்திகள் நாட்டிற்கு அந்நிய செலாவணியை பெற்றுக்கொடுக்கும் மார்க்கமாகவும் அமைகின்றன.

இந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரபல தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

(ஜனாதிபதி செயலகம்)Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 4 =