பேராசிரியர் செல்வா கனகநாயகம் | தமிழ் சமூகத்தின் மற்றுமொரு இழப்பு


கனடா, ரொறொன்ரோ தமிழியல் மாநாடு அமைப்பு மற்றும் கனேடிய தமிழ் இலக்கியத் தோட்டம் போன்ற தமிழ் அமைப்புக்களில் முனைப்பாக இயங்கி வருபவரும் ரொறொன்றோ பல்கலைக் கழக ஆங்கிலப் பேராசிரியருமான செல்வா கனகநாயகம் இன்று காலமான செய்தி அறிந்து வருந்துகிறோம்.

தமிழ்க் கவிதைகளை தனது நம்பகமான மொழிபெயர்ப்பின் மூலம் உலக அரங்குக்குக் கொண்டு சென்றவர் செல்வா கனகநாயகம். பல தமிழ் அரங்குகளிலும் பங்கேற்றும் வருபவர்.

மிக சமீபத்தில்தான் அவரது பங்களிப்புகளுக்காக ‘The Royal Society of Canada’ ஃபெல்லோஷிப்புக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார். புகழ்பெற்ற கல்விமான்கள், கலைஞர்கள் ஆகியோர் கனேடியர்களின் அறிவார்ந்த வாழ்க்கைக்கு அளித்துவரும் தனித்துமான பங்களிப்புக்காக ‘The Royal Society of Canada’ என்ற கல்விசார் நிறுவனம் தமது நிறுவனத்தின் சக ஆய்வாளரர்களாகச் சிலரைத் தெரிவு செய்யும். இந்த ஆண்டு ரொறொன்ரோப் பல்கலைக்கழகத்தில் இருபதாண்டுகளுக்கு மேலாக ஆங்கிலப் பேராசிரியராக கடமையாற்றும் பேராசிரியர் செல்வா கனகநாயகத்தை அவர்களில் ஒருவராகத் தெரிவு செய்துள்ளது. 1882இல் கனடாவில் நிறுவப்பட்ட இந்நிறுவனம் 1660இல் நிறுவப்பட்ட லண்டன் றோயல் சொசைற்றியைப் போன்ற ஒன்று. இதிலுள்ள அங்கத்தவர்கள் உலகப் புகழ் பெற்ற கலைஞர்கள், மானுடவியலாளர்கள், அறிவியலாளர்கள். இதன் முதன்மையான நோக்கம், கனேடிய மொழிகள் இரண்டிலும் அத்துறைகளில் மேலும் கற்கையையும் ஆய்வையும் நிகழ்த்துவது. அத்துடன், அரசுக்கும் அரசுசாரா நிறுவனங்களுக்கும் பொது நலன்கள் தொடர்பாக அறிவுறுத்துவது; கல்வி, கலை சார்ந்த துறையிலுள்ளவர்களில் தலையாயவர்களை அங்கீகரிப்பது ஆகியவை. அப்படிப்பட்ட நிறுவனம் தமிழராகிய பேராசிரியர் செல்வா கனகநாயகத்தையும், தமிழர் என்பதற்காக அல்ல, அவருடைய பங்களிப்புக்காக அவர்களில் ஒருவராகத் தெரிவு செய்திருக்கின்றது. அதையிட்டு, கனேடிய தமிழ்ச் சமூகம் உண்மையாகவே பெருமைப்பட்டுக் கொண்டோம்.

‘தமிழ் இலக்கிய வரலாறு’ என்ற நூலின் ஆசிரியரும், இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பல்லாயிரம் மாணவர்களை உருவாக்கியவருமான தமிழ்ப் பேராசிரியர் வி.செல்வநாயகம் அவர்களின் மகன்தான் செல்வா கனகநாயகம் என்பது எங்களுக்கு மேலும் பெருமை தரும் செய்தி. பேரா. வி. செல்வநாயகம், ஒழுக்கத்திற்கும் தமிழ் ஆய்வுக்கும் விரிவுரைக்கும் பேர்போனவர் எனபது அனைவரும் அறிந்த செய்தி.

பேராசிரியர் செல்வா கனகநாயகம் நூல்கள்: 1. Lutesong and Lament: Tamil Writing from Sri Lanka; 2. In Our Translated World; 3. Counter realism and Indo Anglican Fiction; 4. Dark Antonyms and Paradise: The Poetry of Rienzi Crusz; 5. Configuration of Exile: South Asian Writers and Their World; 6. Structures of Negation: The Writing of Zulfikar Ghose; 7. Moveable Margins: Shifting Spaces of Canadian Literature; 8. A History of South Asian Writing in English; 9. Wilting Laughter: Three Tamil Poets; மேலும் பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

செல்வா கனகநாயகம் மரணம், உலகமெல்லாம் தமிழை பரப்பும் அவரது தொண்டை நிறுத்தியிருக்கிறது. இது தமிழுக்கு பேரிழப்பு.

 

மூலம் | காலம் சஞ்சிகை, கனடா

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *