`நான் காத்திருந்த நாள்கள் அதிகம்’ உலக சாம்பியன் பட்டத்தை வென்ற பி.வி.சிந்து ஆனந்தக் கண்ணீர்


“நான் இந்த வெற்றிக்காக நீண்டநாள் காத்துக்கொண்டிருந்தேன். இறுதியாக உலக சாம்பியன்பட்டம் வென்றுள்ளேன். என்னிடம் வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை”.

PV Sindhu

சுவிட்சர்லாந்தின் பா.செல் நகரில் உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் தொடர் நடைபெற்றது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டியில், உலகின் 4-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நசோமி ஒகுஹராவுடன் மோதினார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து. தங்கம் வென்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் களம் கண்டார் சிந்து. அதன்படி, தொடக்கம் முதலே பி.வி. சிந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது ஆட்டத்திற்கு ஒகுஹராவால் ஈடுகொடுக்க முடியவில்லை.

PV Sindhu

இதனால் முதல் செட்டை 21-7 என பி.வி. சிந்து எளிதாகக் கைப்பற்றினார். 2-வது செட்டிலும் அதே உத்வேகத்துடன் விளையாடினார். இதனால் 2-வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்தி, அதையும் 21-7 எனக் கைப்பற்றி, ஜப்பான் வீராங்கனை நசோமியை தோற்கடித்துத் தங்கம் வென்றார். இதன்மூலம், உலக சாம்பியன்ஷிப் தொடரில் முதன்முதலாகத் தங்கம் வென்ற இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை பி.வி.சிந்து படைத்தார். அவருக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பி.வி.சிந்து, “நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். நான் இந்த வெற்றிக்காக நீண்டநாள் காத்துக்கொண்டிருந்தேன். இறுதியாக உலக சாம்பியன்பட்டம் வென்றுள்ளேன்.

என்னிடம் வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை; காரணம் இதற்காக நான் காத்திருந்த நாள்கள் அதிகம். கடைசி முறை சில்வர் கிடைத்தது. ஆனால் இப்போது உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளேன். இதற்கான கிரெடிட்ஸ்கள் அனைத்தும் என் பயிற்சியாளர் கோபி மற்றும் கிம், எனது பெற்றோர்கள், என்னை நம்பிய ஸ்பான்ஸர்கள் எல்லோரையும் சாரும். தேசிய கீதம் ஒலிக்க, தேசிய கொடி பறந்த அந்த சமயம், உண்மையில் ரொம்ப ஸ்பெஷல்; புல்லரித்துப்போனேன்.

PV Sindhu

என் அம்மாவின் பிறந்தநாள் இன்று. எனது வெற்றியை என் தாய்க்கு சமர்ப்பிக்கிறேன். பிறந்த நாளை முன்னிட்டு என் அம்மாவுக்கு எதாவது கிஃப்ட் கொடுக்கலாம் என்று நினைத்திருந்தேன். இறுதியில் நான் வென்ற தங்கப்பதக்கத்தை அவருக்கு கிஃப்டாக கொடுத்துள்ளேன். நான் இருக்கும் இந்தநிலைக்கு எனது பெற்றோர் தான் காரணம்.

நாட்டுக்காக விளையாடியதை பெருமையான தருணமாக உணர்ந்தேன். நான் இதை இறுதிப்போட்டியாக நினைக்கவில்லை. என்னுடைய ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தினேன். அரையிறுதி, கால்இறுதியைப்போல மற்றொரு போட்டி என்று மட்டும் தான் நினைத்து விளையாடினேன். வெற்றியோ, தோல்வியோ அது இரண்டாம்பட்சம்.
PV Sindhu

என்னைப்பொறுத்தவரை களத்துக்குச்சென்று 100 சதவிகித உழைப்பை செலுத்தவேண்டும் என்பதுதான் முக்கியமானதாக தோன்றியது. பொதுவாக ஜப்பானிய வீராங்கனைகள் விளையாட்டில் லாங் ரேலிஸ் (rallies) யுக்தியை பயன்படுத்துவார்கள். ஆனால், அதையெல்லாம் முறியடித்து, ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி, ஸ்கோரை தக்கவைத்து வெற்றிபெற்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

நன்றி: விகடன்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *