`பெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது`: ரஜினிகாந்த் ஆவேசம்


ரஜினி மன்னிப்பு கேட்கக்கான பட முடிவுகள்"

துக்ளக் விழாவில் பெரியார் பற்றி தான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், இன்று போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “1971-இல் நடந்த நிகழ்வு பற்றி நான் பேசியது போல எதுவும் நடக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது இந்து குழுமத்தின் அவுட்லுக் இதழில் 2017ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளது. அதில் அந்த ஊர்வலத்தில் ராமர், சீதை உருவபொம்மைகளை ஒன்றுமில்லாமல் ஆக்கி செருப்பு மாலை அடித்ததாக கூறப்பட்டுள்ளது. இல்லாததை ஒன்றும் நான் கூறவில்லை. கற்பனையாக ஒன்றும் கூறவில்லை. மற்றவர்கள் பேசியதையும், இதில் வந்ததையும்தான் நான் பேசியிருக்கிறேன்.”

“அதில் தர்ணாவில் ஈடுபட்ட லட்சுமணனும் அதை ஊர்ஜிதப்படுத்தியுள்ளார். நான் இல்லாததை கூறவில்லை. நான் கேள்விப்பட்டதை, இந்த இதழில் வந்ததை தான் பேசியுள்ளேன். எனவே, நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோருகிறார்கள். மன்னிக்கவும். நான் மன்னிப்பு கேட்க முடியாது. வருத்தம் தெரிவிக்க முடியாது என்று தாழ்மையுடன் கூறிக் கொள்கிறேன்.” என்றார்.

அன்றைய களத்தில் இருந்தவர்கள் அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை என்று கூறும் வேளையில் நீங்கள் பத்திரிகைகளில் நடந்த ஆதாரங்களை காண்பித்து பேசுகிறீர்களே என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, “நான் பார்த்ததை நான் கூறுகிறேன். அவர்கள் பார்த்ததை அவர்கள் கூறுகிறார்கள்.” என்று பதிலளித்தார் ரஜினிகாந்த்.

`வரலாற்றை ரஜினி மாற்றிப் பேசியதாக திராவிடர் விடுதலைக்கழகத்தால் முன்வைக்கப்படுகிறதே` என்ற கேள்விக்கு, “அதை பற்றி தெளிவுபடுத்தி விட்டேன். இது மறுக்கக்கூடிய சம்பவம் இல்லை. மறக்கக் கூடிய சம்பவம்.” என்று பதிலளித்தார்.

சுப்பிரமணியன் சுவாமி ரஜினிக்கு ஆதரவு 

ரஜினிக்கு ஆதரவு தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ரஜினிகாந்த் தான் பேசியதில் உறுதியாக இருந்தால் ரஜினிகாந்திற்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாட தயார் என தெரிவித்துள்ளார்.

“ஓர் ஆங்கிலப் பத்திரிகையை ஆதாரமாக காட்டி அதில் வந்த செய்தியைத் தான் கூறியதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார். ஆனால் அந்த பத்திரிகையில் ராமர் மற்றும் சீதை நிர்வாணமாக இருக்கும் படமே இல்லை. ராமர், சீதை படங்களுக்கு செருப்பு மாலை போடப்பட்டிருக்கும் படமும் இல்லை,” என்று ரஜினிகாந்த் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் போராட்ட நடத்திய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கோவை கு.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசியது என்ன?

சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் 50-ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ஆம் ஆண்டில் நடந்ததாக ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டார்.

“1971ல் சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும் சீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனார்கள். அதை யாரும் செய்தித் தாளில் போடவில்லை. அதை சோ துக்ளக் அட்டையில் போட்டு கடுமையாக விமர்சித்தார்.

இதனால், அப்போதைய தி.மு.க. அரசுக்கு பெரிய கெட்ட பெயர் வந்தது. இதனால் பத்திரிகை பிரதிகளை கைப்பற்றினார்கள். அந்த இதழை, மீண்டும் அச்சடித்து வெளியிட்டார். ‘பிளாக்’கில் விற்றது. இப்படித்தான் கலைஞர் மிகப் பிரபலமாக்கினார். அடுத்த இதழிலேயே நம்முடைய ‘பப்ளிசிடி மேனேஜர்’ என சோ அட்டையிலேயே வெளியிட்டார்” என்று குறிப்பிட்டார்.

ரஜினிகாந்த் கருத்துக்கு எழுந்த எதிர்ப்புகள்

துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசியதற்கு, பல விமர்சனங்களும், எதிர்ப்புகளும் எழுந்தன.

தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துகளை பொது வெளியில் தெரிவித்து, வதந்தி பரப்பி, பொது அமைதியை குலைக்கும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் பேசியிருப்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என திராவிடர் விடுதலை கழக உறுப்பினர்கள் சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தனர்.

விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன்,”பெரியார் குறித்த தனது கருத்துக்கு ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும். சங்பரிவாரின் சதிக்கு ரஜினி பலியாகிவிடாமல் இருக்க வேண்டும்,” என கருத்து தெரிவித்திருந்தார்.

ரஜினி காந்த் பேசியதற்கு உரிய விலை கொடுப்பார் என்று நேற்று தூத்துக்குடியில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்திருந்தார் மேலும் ரஜினிகாந்த் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *