நேற்றைய இரவு சந்திப்பு – சஜித்துக்கு ரணில் தெரிவித்தது என்ன?


ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க முன்னர் கூட்டணிக் கட்சிகள் மற்றும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவை தெரிவிக்க இணக்கம் தெரிவித்துள்ள தமிழ் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவை பெற்று வாருங்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு வலியுறுத்தியுள்ளார்.

இந்தவார இறுதிக்குள் இறுதித்தீர்வு ஒன்றினை எட்ட பிரதமர் ரணில் – அமைச்சர் சஜித் பிரேமதாச இடையிலான பேச்சுவர்த்தையில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று நேற்று இரவு இடம்பெற்றது.

இரவு 9.40 தொடக்கம் 11.30 மணிவரையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணியாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவது அதில் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற விடயங்களே முக்கியத்துவம் கொடுத்து கலந்துரையாடப்பட்டிருந்தது.

நேற்று  பிற்பகல் 5 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெற்றும் என ஆரம்பத்தில் கூறப்பட்ட போதிலும் இரவு 9.40 மணியளவிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றது.

கடந்த சந்திப்பில் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் பிரதமருடன் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்த போதிலும் கூட நேற்று  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அவரது சார்பில் அமைச்சர் ராஜித சேனாரத்னவும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன்  அமைச்சர்களான கபீர் ஹசீம், மலிக் சமரவிக்கிரம, ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரும் கலந்துகொண்டனர்.

சபாநாயகர் கரு ஜெயசூரிய கலந்துகொள்வார் என கூறப்பட்ட போதிலும் அவர் கலந்துகொள்ளவில்லை. அமைச்சர் மங்கள சமரவீர இன்றைய கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை.

எவ்வாறு இருப்பினும் ஆரம்பத்திலே ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சினை குறித்து இரண்டுபேரும் கருத்துக்களை பரிமாற்றிக்கொண்டனர். இதில் ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மை ஆதரவும் மக்களின்  ஆதரவும் தனக்கு கிடைத்துள்ளதை சுட்டிக்காட்டிய பிரதித் தலைவர் சஜித் தான் ஒருபோதிலும் கட்சியின் யாப்பினை மீறிய எந்த நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என்பதை எடுத்துக்கூறியிருந்தார். தான் கட்சிக்குள் வீணான குழப்பங்களை ஏற்படுத்தவில்லை எனவும் கட்சியையும் அரசாங்கத்தையும் தக்கவைக்க வேண்டும் என்ற நோக்கமே தனக்கு இருப்பதாக அவர் பிரதமரிடம் எடுத்துக்கூறியுள்ளார்.

ஊடகங்கள் முன்னெடுக்கும் பிரச்சாரங்கள் குறித்தும் சுட்டிக்காட்டிய அவர் இறங்கசியமாக ஒப்பந்தங்களை செய்துகொண்டு தான் அரசியல் செய்ய வேண்டிய எந்த அவசியமும் இல்லை என்ற காரணிகளை கூறியுள்ளார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *