வாசிப்பை நேசி!


இன்றைய சிறார்களிடையே வாசிப்புப்பழக்கம் அருகி வருகின்றது. இளமையில் கையாளும் வாசிப்புப்பழக்கமே கல்விக்கு அடித்தளம் என்பதை சிறார்களுக்கு உணர்த்தி, வாசிப்புப்பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். வாசிப்பு என்பது மெளனமான முறையில் நிகழ்கின்ற ஓர் உரையாடல் போன்றது.

வாசிப்பானது பொருள் உணர்ந்து, ஆழமாக, நிதானமாக, பரந்து பட்டு நேசித்த நூல்களை வாசிக்க வேண்டும். அப்போது தான் அவை மனதில் ஆழமாகப்பதியும். வாசிப்பில் ஈடுபடும்போது மனிதனை மனிதனாக மாற்றக்கூடிய நூல்களை நேசித்து வாசியுங்கள் பயன் பெறுவீர்.

தற்போதைய சமூகம் அறிவு மையச் சமூகமாகும், சவால்கள் நிறைந்த சமூகமாகும். இவற்றுக்கு ஈடுகொடுக்க கல்வி மட்டும் போதாது. வாசிப்பின் மூலம் பெற்ற அறிவும் அனுபவமும் தேவை. வாசிப்பும் கற்றலின்ஒரு பகுதி என்பதை உணர்வதுடன் வாசிப்புக்கு நேரம் ஒதுக்கி நேசித்து வாசித்து வாசிப்பின் சுகங்களை அனுபவியுங்கள். பூரணமனிதனாக மாற்றமடைவீர்கள்.

3-kids-reading

அறிவு என்பது பிரதானமான தந்திரோபாயச் சொத்தாக மாற்றமடைந்துள்ள 21ஆம் நூற்றாண்டுக்கு ஈடு கொடுத்து வாழ வாசிப்பு அவசியமானதாகும். வாசிப்பின் மூலம் பலரது பல்வேறு வகையான அனுபவங்களை பெற்றுக்கொள்ளமுடியும். வாழ்வின் வெற்றி தோல்விகளின் சுகங்களை அறிந்து கொள்ள, பல்துறை சார் அறிவைப் பெற்றுக்கொள்ள அவைமூலம் நமது வாழ்க்கைப்போக்கில் மாறுதல்களையும், திருத்தங்களையும் ஏற்படுத்தி சீர்வாழ்வில் ஈடுபட முடியும்.

வாசிப்பை இளமை முதல் முறையாக நேசிக்கத்தவறியமை தான் இன்றைய கலாசார சீரழிவுகளுக்கும் ஒரு காரணமாக அமைகின்றது. வாசிப்பின் மூலம் உள நலம் சீரடைவதுடன் பண்பட்ட மனிதனாக மிளிரவும் சமூகம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படவும், அத்தியாவசியமான சமுதாயக் குறிக்கோள்களை சாதித்துக் கொள்ளவும், சமூகத்துக்கு ஏற்புடையதான மனப்பாங்குகளை விருத்தி செய்யவும், ஆளுமை விருத்தி பெறவும், அறிவு வளம் பெறவும், அதன்வழி மனித நேயம் தோன்றவும்,வாழ்வின் விழுமியங்களை அறிந்து கொள்ளவும் அதன் வழி வாழவும் வாசிப்பு உதவுகின்றது. எனவே வாசிப்பை நேசியுங்கள்.

சமூகத்தில் ஆரோக்கியமான விழிப்புணர்வு விதைக்கப்பட வேண்டும். விரிவான சிந்திப்புக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். தனியாள் அகத்தடைகள் வெற்றி கொள்ளப்பட வேண்டும். இவை இலகுவாக வாசிப்பின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை ஆசிரியர்கள் மட்டுமல்ல பெற்றோர்களும் பிள்ளைகளுக்கு சிறு பராயம் முதல் ஊட்டவேண்டும். இவற்றின் மூலம் தவறான எண்ணங்கள் சீரமைக்கப்படும். எதிர்கால வாழ்வு சிறக்கும். சீரழிவற்ற சமுதாயம் தோற்றம் பெறும்.

வாசித்துக்கொண்டே இரு பல கல்விமான்களதும், அனுபவசாலிகளதும் அறிவை, அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடியும். அவை உனது வாழ்வுக்கு விடிவெள்ளி.

கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னைக்கொன்றுவிடும். கண்ணைத் திறந்துபார் நீ அதை வென்றுவிடலாமென அப்துல்கலாம் கூறினார். உழைத்துப்பிழைக்க வேண்டும். உழைப்பு நின்றுவிட்டால் பிழைப்பு படுத்துவிடும். நுழைந்து சாதனை புரிய மனதிலே உழைக்கும் எண்ணத்தை பதியவை எனக் கல்விமான் ஒருவர் கூறியுள்ளார்.

உழைப்பையும், விடா முயற்சியையும் மூலதனமாகச் செலுத்தி வாழ்வில்வெற்றி காணலாம். அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம்லிங்கன் உலக வரலாற்றில் அழியாத இடம் பெற்றதற்கு அடிப்படைக்காரணம் அவரது இடைவிடாத உழைப்பும் விடா முயற்சியுமாகும்.

இவ்வாறான நல்ல விடயங்களை வாசியுங்கள். மாறாக ஆபத்தான பாலியல் தொடர்புகள்,புகைத்தல், மது, போதைப்பழக்கம்போன்ற நலவியல் விடயங்களில் அறிவை வளர்க்கக்கூடாது.ஒவ்வொரு மாணவனும் வாசிப்பை நேசிக்கவேண்டும். வாசித்தல் தொழிற்பாடு அலட்சியப்படுத்தப்படும் காரியமாக ஆகிவிடுவது சமூகத்தின் ஒட்டுமொத்த வீழ்ச்சிக்கு அடிப்படையாக அமைந்து விடும்.

 

 

நன்றி : நவீனன் | யாழ் இணையம்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *