வரண்ட நிலமாக மாறி விடுமா பூமி?


பாலைவனமாவதற்கும் வரட்சிக்கும் எதிரான போராட்ட தினம் இன்று.

சுவரில் கசியும் நீரில் ஒரு துளியாவது அருந்தக் கிடைக்குமா?

உலக பாலைவனமாவதற்கும், வரட்சிக்கும் எதிரான போராட்ட தினம் இன்றாகும். 1994ம் ஆண்டில் ஐ.நா பொதுச்சபையின் தீர்மானத்திற்கமைய ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த ஆண்டு ஜுன் 17ம் திகதி முதல் இத்தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

1995ம் ஆண்டு ஜனவரி A/RES/49/115 பிரகடனப்படி (January 30, 1995 by the United Nations General Assembly resolution) பாலைவனமாவதற்கும், வரட்சிக்கும் எதிரான போராட்ட தினமாக ஜுன் 17ம் திகதி அதிகாரபூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

அன்று முதல் இன்று வரை ஐக்கிய நாடுகளின் பாலைவனமாவதற்கு எதிரான மாகநாட்டுக் குழுக்களும், அரசு சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் இது பற்றி விழிப்புணர்வுடன் செயற்படுபவர்களும் இத்தினத்தை உலகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.

பாலைவனமாதலை உதாரணப்படுத்தக் கூடிய வகையில் பின்வரும் சம்பவத்தை இவ்விடத்தில் சுட்டிக்காட்டுவது ஏற்புடையதாக இருக்கும்.

அதாவது சில வரலாற்று சான்றுகளின் பிரகாரம் கி.மு மூன்றாம் நூற்றாண்டில் சஹாரா பாலை நிலப் பகுதியில் சில நீரூற்றுகள் காணப்பட்டதாக தெரியவருகின்றது.

தற்போது அந்நிலப் பகுதி தனிப்பாலை நிலமாகவே காணப்படுகின்றது.இது மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் பாலைநிலங்களை நோக்கும் போது இத்தன்மையினை பொதுவாக அவதானிக்கலாம்.

பாலைவனமாவதை இலகுவாகத் தடுக்கலாம். அதற்கான தீர்வுகள் மிக இலகுவானவை. இதற்குரிய ஒரே ஒரு நடவடிக்கை சகல மட்டத்திலுமுள்ள மக்கள் ஒன்றிணைந்து செயற்படுவதேயாகும். உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிற பிரச்சினைகளில் பூமி வெப்பமடைதல் மிக முக்கியமானதாகும்.

பூமியைச் சுற்றியுள்ள 8 கி.மீ. தொலைவுக்கு கரியமிலவாயு, மீத்தேன், நைட்ரஸ் ஒக்சைட் மற்றும் குளோரோ புளோரா கார்பன் போன்ற வாயுக்களின் அடர்த்தி அதிகமாவதால் வாயு மண்டலம் வெப்பமாகியுள்ளது.

இவ்வாயுக்களை பசுமை வீட்டு வாயுக்கள் என்று அழைக்கின்றனர். இவ்வாயுக்கள் வாயுமண்டலத்தில் நிலைகொண்டு சூரியனின் ஒளிக் கதிர்களை உள்வாங்கி வெப்பமடைந்து வாயுமண்டலத்தை சூடாக்குகிறது. இவ்வாறு பூமி வெப்பமடைவதை பசுமைக் வீட்டு விளைவு என்று அழைக்கிறோம்.

இதனால் எதிர்காலத்தில் பூமியின் பல பகுதிகள் கடலுக்குள் மூழ்கலாம், மழை குறைந்து குடிநீர்ப் பற்றாக்குறை மற்றும் பஞ்சம் பட்டினி ஏற்படலாம். பல நோய்கள் உருவாகலாம்.

மக்கள்தொகை அதிகரிப்பு, காடுகளை அழித்தல், அதிக அளவில் வாகனங்கள், பெட்ரோலியத்தை எரிபொருளாகப் பயன்படுத்துதல், குளிர்சாதன உபகரணங்களைப் பயன்படுத்துதல், வளர்ந்த நாடுகளில் தேவைக்கு அதிகமாக தனிநபர் மின் உபயோகம் மற்றும் வரைமுறை இல்லாத இயற்கை வளங்களை ஆடம்பர வாழ்க்கைக்குப் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் பசுமைக் கூடார வாயுக்கள் அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றன.

பூமியின் வெப்ப அதிகரிப்புக்கு பச்சை வீட்டு வாயுக்களே காரணம். இவ்வாயுக்களின் மூலக்கூறுகள் சூரிய ஒளியின் நீள அலைவரிசை ஒளிக்கற்றைகளை ஈர்த்து தன்னகத்தே உள்வாங்கி வெப்பத்தை நீண்ட நேரம் தேக்கி வைப்பதால் வாயுமண்டலம் வெப்பமாகிறது.

கரியமிலவாயு பூமியை வெப்பமாக்குவதில் அதிக பங்கு வகிக்கிறது.கரியமிலவாயு உற்பத்தியில் உலக அளவில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. நிலக்கரியை ஆதாரமாகக் கொண்டு செயல்படும் அனல் மின் நிலையங்கள் மூலமாக அதிக அளவு பசுமைக் கூடார வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன.

குறிப்பாக இதில் கரியமிலவாயுவின் அளவு அதிகம்.மக்கள்தொகைப் பெருக்கம், தொழில் வளர்ச்சி, காடுகளை அழித்தல், அதிக அளவு பெட்ரோலியம் உபயோகித்தல் போன்ற காரணங்களால் இதன் விளைவு அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது.

கரியமில வாயுக்களின் துகள்கள் சூரிய ஒளியின் வெப்பத்தை உட்கொண்டு நீண்ட நேரம் தன்னகத்தே வைத்துக் கொள்ளும் தன்மையுடையவை. காற்று மண்டலத்தில் இதன் ஆயுள்காலம் மிகவும் அதிகம். இது எளிதில் வெப்பத்தைக் கடத்தாது. எனவே, இவ்வாயுவின் அளவு அதிகரிக்க அதிகரிக்க வெப்பம் உயர்ந்து கொண்டே இருக்கும்.

மனிதனாலும், சீதோஷ்ண நிலை மாற்றத்தாலும் வரட்சி ஏற்பட்டு நிலங்கள் பாலைவனமாக மாறுகின்றன. மேலும் பூமியின் நிலப்பரப்பு படிப்படியாக பாதிப்படைந்து கொண்டே செல்கிறது. இதனால் மக்கள் வறுமைக்குத் தள்ளப்படுகின்றனர்.

சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுப்பதன் மூலம் பாலைவனமாதல் மற்றும் வரட்சி ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

நன்றி – புன்னியாமீன்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *