அழகு சாதனப் பொருள்களில் விலங்குகளின் கழிவு!


மிகப்பெரிய பிராண்டு பொருள்கள் குறைந்த விலையில் கிடைக்கும் என்றால், அந்தக் கடை வாசலில் அலையெனத் திரளும் மக்கள் கூட்டத்தைக் காணலாம். இங்கே விலைக்கு முன், தரம் காணாமல்போகும். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மலிவான விலைக்கு விற்கப்பட்ட அழகு சாதனப் பொருள்களைச் சோதனை செய்ததில், அதிர்ச்சியான பல தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 7 லட்சம் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள போலிப் பொருள்களில், விலங்கின் கழிவுகள் மற்றும் அதிகப்படியான பாக்டீரியாக்கள் இருப்பதை உறுதிசெய்துள்ளனர் அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் காவல் துறையினர்.

அழகு சாதனப் பொருள்கள்

வெள்ளை முடியை மறைக்க `Dye’, கண்களை ஹலைட்டாக்க `கண் மை’, `மஸ்காரா’, `ஐ லைனர்’, `மாதிரி இமைகள்’ மேலும் பல, பருக்களின் சுவடுகள் தெரியாமல் இருக்க `கன்சீலர்’, இதழுக்கு `லிப்ஸ்டிக்’, `லிப் லைனர்’ இன்னும் என்னன்னவோ..! அழகுபடுத்திக்கொள்ள நாம் எடுக்கும் முயற்சிகள்தாம் எத்தனை! கையில் 50 ரூபாய் இருந்தாலும், `ஒரே ஒரு ஐ லைனர் வாங்கிடலாம்’ என்பதுதான் பெரும்பாலான பெண்களின் எண்ணம். `ச்ச… அந்தப் பொண்ணு போட்டிருக்கும் லிப்ஸ்டிக் மட்டும் எப்படி நாள் முழுக்க அப்படியே இருக்கு? அடுத்த முறை அதே பிராண்டு வாங்கணும்!’ போன்ற எண்ணம் சில பெண்களைத் தூங்கவிடாமல் செய்கிறது. இப்படி அழகு சாதனப் பொருள்களின் மாய உலகில் தங்களின் அடையாளத்தை அழித்து வாழும் பெண்கள் (சில ஆண்களும்கூட) ஏராளம். அதிலும் உயர்ந்த பிராண்டு என முத்திரை பதித்த பொருள்கள் மலிவாகக் கிடைத்தால் விட்டுவைப்போமா?

 

லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மக்கள், சமீபகாலமாக கொப்புளம், வீக்கம் போன்ற பல தோல் உபாதைகளால் அவதிக்குள்ளானார்கள். இதுகுறித்து புகார்களும் எழுப்பினர். விசாரணையில், இது குறிப்பிட்ட சில பிராண்டுகளின் அழகு சாதனப் பொருள்களால் ஏற்படுகிறது என்பதை உணர்ந்த Los Angels Police Department (LAPD), திடீர் சோதனையை மேற்கொள்ள திட்டமிட்டது. `Fashion District’ என்றழைக்கப்படும் Santee Alley-யில் இந்தத் திடீர் சோதனை நடைபெற்றது. இதன் விளைவு, பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 21 இடங்களில் சோதனையை நடத்திய காவல்துறை அதிகாரிகள், சுமார் 7 லட்சம் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள MAC, Kylie Cosmetics, Anastasia போன்ற உயர்தர அழகு சாதன பிராண்டு பொருள்களில் விலங்கின் கழிவுகளும் பாக்டீரியாக்களும் அதிகப்படியாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனிதக் கழிவுகளும் இருந்துள்ளன! கைப்பற்றப்பட்டப் பொருள்கள் அனைத்தும் அசல் பொருள்கள்போலவே இருந்தன. ஆனால், அதன் விலையோ அசலைவிட, ஐம்பதிலிருந்து எழுபது சதவிகிதம் வரை குறைவு. இதுவரை சுமார் 4.6 கோடி ரூபாய் வரை இந்தப் போலி பொருள்கள் விற்கப்பட்டுள்ளன.

கலப்படம் நிறைந்த அந்தப் பொருள்களால் இந்த நோய்த்தொற்று உண்டாகவில்லை; அதிகப்படியான ஆசைகளால் உண்டாவது என்பதை உணர்வோமா? எந்த ஒரு பொருளையும் வாங்கும் முன்னர், நன்கு சோதனை செய்வது மிகவும் அவசியம். சருமத்தின் மேல் பயன்படுத்தப்படும் அழகு சாதனப் பொருள்கள் என்பதால், பாதிப்புகள் குறைவு. இதுவே உண்ணும் உணவில் இருந்தால் என்னாவது? சிந்தியுங்கள்! இலவசம், விலை மலிவு என்றால் கண்களை மூடிக்கொண்டு வாங்கும் பழக்கத்தை என்றுதான் நாம் கைவிடுவோமோ தெரியவில்லை.

 

நன்றி : விகடன்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =