ரோஹிங்கியா அகதிகள் பெயரில் ஆட்கடத்தல்


மியான்மரில் தொடர்ந்து வரும் வன்முறைக் காரணமாகவும் வங்கதேசத்தில் அகதி முகாம்கள் நிரம்பி வழியும் சூழலினாலும் அந்நாடுகளிலிருந்து படகு வழியாக மலேசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு செல்ல ரோஹிங்கியா அகதிகள் முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையில், ரோஹிங்கியா அகதிகள் என்ற போர்வையில் வங்கதேசத்தினர் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல எடுத்த முயற்சி அம்பலமாகியுள்ளது.

இந்த ஆட்கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை ஆஸ்திரேலிய காவற்துறையின் உதவியுடன் அடையாளம் கண்டுள்ளதாக இந்தோனேசிய காவற்துறை தெரிவித்துள்ளது. இந்த மூன்று பேரில் ஒரு ரோஹிங்கியாவும், வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவரும், இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒருவரும் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஆட்கடத்தலின் பின்னணி

இந்த குறிப்பிட்ட ஆட்கடத்தல் சம்பவத்தின் பின்னணியைக் குறித்த தகவல்களை  இந்தோனேசிய காவல் குற்றப்பிரிவின் இயக்குநர் ஜெனரல் தெரிவித்திருக்கிறார்.

*இந்த ஆட்கடத்தல்காரர்கள் ஆறு வங்கதேசத்தினருக்கு போலியானச் சான்றுகளை உருவாக்கி, மலேசியாவிலிருந்து அதிவேக படகின் மூலம் கலிமண்டன் மற்றும் ஜாவா இந்தோனேசிய தீவுப்பகுதிகள் வழியாக மெராயுகே (Port of Merauke) துறைமுகத்தை அடையச் செய்துள்ளனர்.

*அங்கிருந்து உள்ளூர் மீன்பிடி படகின் மூலம் அவர்களை ஆஸ்திரேலியாவுக்கு கூட்டிச்செல்வது திட்டமாக இருந்துள்ளது.

* வங்கதேசத்தைச் சேர்ந்த ஆறு பேரும் ரோஹிங்கியா முஸ்லீம்கள் என அடையாளம் காட்டிக் கொண்டதால் உள்ளூர் இந்தோனேசியர்கள் கூட அவர்களுக்கு உதவியிருக்கின்றனர்.

*இதில் அனுதாப்பட்ட சிலர் அவர்கள் மெராயுகேவுக்கு விமானம் வழியாக செல்லக்கூட பணம் திரட்டியுள்ளனர்.

*“இவர்கள் உண்மையில் மலேசியாவில் வேலைச் செய்துவந்த வஙக்தேசத்தினர். ஆஸ்திரேலியா சென்றால் அதிகமாக சம்பாதிக்கலாம் என்ற ஆட்கடத்தல்காரர்கள் ஆசை வார்த்தைகளை நம்பி இப்பயணத்தை மேற்கொண்டுள்ளனர்” என பிரிகேடியர் ஜெனரல் ரூடோல்ப் நகாக் குறிப்பிட்டுள்ளார்.

எப்படி சிக்கினர்?

*மெராயுகேவை அடைந்த இவர்கள் மீது  சந்தேகப்பட்ட உள்ளூர்காரர்கள் அங்குள்ள காவற்துறைக்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து இவர்கள் சிக்கியுள்ளனர்.

*2017 ஆம் ஆண்டு இறுதியில் கைது செய்யப்பட்ட இந்த ஆறு வங்கதேசத்தினரும் சாட்சிய பாதுகாப்பின் கீழ் இந்தோனேசியாவில் வசித்து வருகின்றனர். ஆட்கடத்தல்காரர்கள் மீதான வழக்கு விசாரணையின் சாட்சிகளாக இவர்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.

இது, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நலன் சார்ந்த பிரச்னை என்பதால்
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து காவற்துறையுடன் இந்தோனேசிய காவற்துறை இணைந்து பணியாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, இலங்கை, வங்கதேசம், மியான்மர், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து படகு வழியாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அடைய நினைக்கும் அகதிகளின் முயற்சிகளில் இந்தோனேசியா இணைப்பு நாடாக பயன்படுத்தப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

அண்மையில், மூன்று வெவ்வேறு படகுகளில் ரோஹிங்கியா அகதிகள் தஞ்சம் கோரி மியான்மரிலிருந்து வெளியேறியதை அடுத்து, ‘ரோஹிங்கியா அகதிகள் பெயரில் நடந்த இந்த ஆட்கடத்தல்’ சம்பவம் பற்றிய முதற்கட்ட தகவல் கசிந்துள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *