மலேசியாவிற்கு படகு வழியாக செல்ல முயன்ற 93 ரோஹிங்கியா அகதிகள் கைது!


மியான்மரிலிருந்து மலேசியாவிற்கு படகு வழியாக செல்ல முயன்ற 93 ரோஹிங்கியா அகதிகளை மியான்மர் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். மேற்கு ரக்ஹைன் மாநிலத்தில் அமைந்துள்ள முகாம்களிலிருந்து தப்பிய இந்த ரொஹிங்கியாக்கள், கடல் வழியாக மலேசியாவை அடையும் முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது.

“முகாம்களில் இருந்து தப்பி வந்ததாக அவர்கள் கூறுகின்றனர். மலேசியாவுக்கு செல்லும் நோக்கத்தில் வந்ததாக கூறினர்” என மியன்மரின் தென் கடலோர பகுதியின் அரசு இயக்குனர் மோ ஜா லட்ட் கூறியிருக்கிறார். அவர்களை மீண்டும் முகாம்களுக்கே அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக அவர் தெரிவித்திருக்கின்றார்.

இதேபோல், கடந்த நவம்பர் 16 அன்று மியான்மரின் வர்த்தக மையமாக அறியப்படும் யாங்கோன் அருகே படகு ஒன்றிலிருந்து 106 ரொஹிங்கியாக்கள் கைது செய்யப்பட்டனர். மலேசியா செல்ல முயன்ற இவர்கள், படகு எஞ்சின் பழுதான நிலையில் மியான்மர் அதிகாரிகளிடம் சிக்கியிருந்தனர்.

இத்துடன், தெற்கு ரக்ஹைன் கடல் பகுதியிலிருந்து மேலேசியா செல்ல முயன்ற 80 ரொஹிங்கியாக்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர். மியான்மர் கடல்பகுதியில் மழையின்றி அமைதியான வானிலை காணப்படுவதால், இவ்வாறான படகு வழிப்பயணங்கள் மீண்டும் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

அந்த வகையில், சமீப வாரங்களில் படகு வழியாக மலேசியாவில் தஞ்சமடையும் 3 முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் 2017 ல் மியான்மரில் ஏற்பட்ட தொடர் வன்முறைகள் மற்றும் இராணுவத்தின் தேடுதல் வேட்டை காரணமாக 8 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் வங்கதேசத்தில் தஞ்சமடைந்திருக்கின்றனர்.

இதேபோல் முந்தைய வன்முறைகளில் வெளியேறிய 40,000 க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் இந்தியாவில் அகதிகளாக வசித்து வருகின்றனர்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *