ரோஹிங்கியா ஆட்கடத்தல்காரர்களை சுட்டுக்கொன்ற வங்கதேச காவல்துறை!


வங்கதேசத்திலிருந்து மலேசியாவுக்கு 15 ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளை கடத்த முயன்ற போது ஏற்பட்ட மோதலில் 3 ஆட்கடத்தல்காரர்களை வங்கதேச காவல்துறை சுட்டுக்கொன்றிருக்கிறது.

ஜுன் 25 அன்று வங்கதேசத்தின் குட்டுபலாங் பகுதியில் அமைந்திருக்கும் ரோஹிங்கியா முகாம் அருகே அகதிகளை கடத்த முயன்ற சம்பவம் நடந்துள்ளது.

“காவல்துறையினர் வருவதை அறிந்து கொண்ட ஆட்கடத்தல்காரர்கள், எங்களை நோக்கி சுட்டனர், காவல்துறையினரும் திருப்பி சுட்டனர்,” என தெரிவித்திருக்கிறார் காவல்துறை அதிகாரி பிரோதிப் குமார் தாஸ்.

அவர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட 3 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஆட்கடத்தல்காரர்களாக அறியப்பட்ட இந்த 3 ரோஹிங்கியாக்களும் குட்டுபுலாங் பகுதியில் வாழ்ந்து வந்ததாக தெரிவக்கப்பட்டுள்ளது.

தற்போது மீட்கப்பட்ட ரோஹிங்கியா அகதிகள் முதல்கட்ட விசாரணைக்கு பின்னர், முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மலேசியா சென்றால் நல்ல வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையினால் அகதிகள் கடத்தப்படும் ஆபத்து அதிகரித்துள்ளது.

வங்காள விரிகுடா வழியாக கடத்தல் நிகழ்வுகள் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தை ஆட்கடத்தல் தடுப்பு அமைப்புகள் வெளிப்படுத்தியிருக்கின்றன.

இதே போல், கடந்த மாதம் ஆட்கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்பட்ட 2 பேர் சுட்டுகொல்லப்பட்டிருந்தனர்.

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட ராணுவ முற்றுகை மற்றும் வன்முறை காரணமாக வெளியேறிய சுமார் 9 லட்சம் அகதிகள் குட்டுபலாங் முகாமில் வசித்து வருகின்றனர். இதுவே உலகின் பெரிய அகதி முகாமாக பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில், வங்கதேசத்தில் காலவரையின்றி 11 லட்சம் மியான்மர் குடிமக்களுக்கு(ரோஹிங்கியாக்கள்) உணவு, உடை, தங்கும் வசதி ஏற்படுத்தி தருவது மிகவும் கடினமானது எனக் கூறியுள்ள அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசினா, “ரோஹிங்கியாக்கள் மியான்மரில் உள்ள அவர்களது தாய்நிலத்துக்கு திருப்பி அனுப்பப்படவில்லை என்றால் அது வங்கதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக ஆகிவிடும்” என நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *