துபாய் நகரில் 63 அடுக்கு கொண்ட சொகுசு ஹோட்டலில் வியாழக்கிழமை இரவு தீ விபத்து


ஐக்கிய அரபு அமீரகம், துபை நகரில் 63 அடுக்கு கொண்ட சொகுசு ஹோட்டலில் வியாழக்கிழமை இரவு தீவிபத்து ஏற்பட்டது.

புத்தாண்டு தொடங்கும் நிலையில் விடிய விடிய எரிந்து வரும் அந்தத் தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் 10 மணி நேரத்திற்கு மேல் போராடினர்.

இந்த விபத்தில் 16 பேர் லேசாகக் காயமடைந்ததாகவும், கட்டடத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

துபை நகரில் உலகின் மிக உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலிஃபாவுக்கு அருகே, “அட்ரஸ் டவுன்டவுன்’ சொகுசு ஹோட்டல் அமைந்துள்ளது.

63 அடுக்குகளைக் கொண்ட அந்த ஹோட்டலில் மையப் பகுதியில் வியாழக்கிழமை இரவு 9.30 மணிக்கு (உள்ளூர் நேரம்) தீப்பிடித்தது.

கட்டடத்தின் 20-ஆவது மாடியில் தீப்பிடித்ததாக சிலர் தெரிவித்தனர்.

அந்தத் தீ மளமளவென்று பிற தளங்களுக்கும் பரவியது.

இதையடுத்து அங்கு வந்த தீயணைப்புப் படையினர், தீயை அணைக்கப் பல மணி நேரம் போராடினர்.

பெரும்பாலும் கீழ்ப்பகுதியிலிருந்தே தீயை அணைக்கப் போராடிய அவர்கள், ஒரு உயரத்துக்கு மேல் நீரைப் பீய்ச்சியடிக்க முடியாமல் திணறினர்.

பிறகு நீருக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டு உயரமான இடங்களிலிலும் பீய்ச்சியடிக்கப்பட்டது.

தீவிபத்துக்கான காரணம் குறித்து தகவல் இல்லை.

பொதுமக்கள் பீதி: புத்தாண்டையொட்டி, “அட்ரஸ் டவுன் டவுன்’ சொகுசு ஹோட்டலைச் சுற்றியுள்ள பகுதிகளில் குவிந்திருந்த மக்கள், தீவிபத்தைக் கண்டதும் பீதியில் அலறியடித்தபடி ஓடினர்.

அருகிலுள்ள புகழ்பெற்ற வணிக வளாகம் மூடப்பட்டது.

தீவிபத்து நிகழ்ந்த பகுதியில் உணவு விடுதிகள் வழக்கம் போல் இயங்கினாலும், அந்தப் பகுதிகளுக்கு குழாய் மூலம் எடுத்துச் செல்லப்படும் சமையல் எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு தகவல்கள் தெரிவிக்கின்றன.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *