உயரத்தில் பறந்த விமானத்தில் பிரசவம் பார்த்த இந்திய டாக்டர்


அமெரிக்காவில் கிளவ்லேண்டில் உள்ள சிறுநீரகவியல் ஆஸ்பத்திரி ஒன்றில் சிறுநீரகவியல் டாக்டராக பணியாற்றி வருபவர், டாக்டர் சிஜ் ஹேமல். 27 வயதான இவர், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவர், டெல்லியில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு சென்று, அங்கிருந்து ஏர்பிரான்ஸ் விமானம் மூலம் அமெரிக்காவின் நியூயார்க்குக்கு சென்று கொண்டிருந்தார்.

விமானம், 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, 41 வயதான ஒரு நிறைமாத கர்ப்பிணி பயணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக, விமானத்தை தரை இறக்கவும் வாய்ப்பில்லாமல் இருந்தது.அதனால், விமானத்தில் டாக்டர்கள் யாராவது இருக்கிறீர்களா? என்று விமான சிப்பந்திகள் கேட்டனர். டாக்டர் சிஜ் ஹேமல், சிறுநீரகவியல் டாக்டராக இருந்தபோதிலும், ஏற்கனவே 7 குழந்தைகளை பிரசவிக்க செய்துள்ளார். அதனால், சிறிது மது அருந்திவிட்டு குட்டித்தூக்கம் போட நினைத்திருந்த ஹேமல், பிரசவம் பார்க்க முன்வந்தார்.

அவரும், பிரான்சைச் சேர்ந்த குழந்தைகள் நல டாக்டர் ஒருவரும் இணைந்து அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். அரை மணி நேர முயற்சிக்கு பிறகு, அழகான ஆண் குழந்தை பிறந்தது. தனது ஷூ கயிற்றால் தொப்பிள் கொடியை துண்டித்தார், ஹேமல். இதையடுத்து, அந்த பெண்ணும், அவருடைய கணவரும் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

இது, தன்னால் மறக்க முடியாத விமான பயணம் என்று டாக்டர் ஹேமல் நெகிழ்வுடன் தெரிவித்தார். அவரது சேவையை பாராட்டி, அவருக்கு ஒரு பயண கூப்பனும், ஒரு பாட்டில் மதுவும் விமான நிறுவனத்தால் வழங்கப்பட்டது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *