ரஷ்யாவுக்கு எதிராக புதிய பொருளாதார தடைகள்


ரஷ்யாவுக்கு எதிராக புதிய பொருளாதார தடைகளை விதிப்பதற்கான சட்டத்திற்கு அமெரிக்க கொங்கிரஸில் இணக்கம் ஏற்பட்டிருக்கும் நிலையில் வெள்ளை மாளிகை அதிகாரிகள் மாறுபட்ட செய்திகளை வழங்கி வருகின்றனர்.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு எந்த ஒரு தடையையும் நீக்கும் அதிகாரமும் இந்த சட்டங்களில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு அவர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த சட்டமூலத்தில் கைச்சாத்திடுவதா, இல்லையா என்பது குறித்து ஜனாதிபதி இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று வெள்ளை மாளிகையின் புதிய தகவல்தொடர்பு இயக்குனர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த சட்டத்திற்கு வெள்ளை மாளிகை ஆதரவளிக்கும் என்று டிரம்ப் நிர்வாகத்தின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையிட்டதான குற்றச்சாட்டுக்கு தண்டனை வழங்கும் வகையிலேயே இந்த சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதில் டிரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தில் ரஷ்யாவுடன் கூட்டுச் சேர்ந்திருந்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

ரஷ்யா விடயத்தில் டிரம்பின் நிலைப்பாடு எப்படி இருந்தபோதும் ரஷ்யா மீதான கடும் நிலைப்பாட்டை தொடரும் வகையில் புதிய சட்டத்திற்கு அமெரிக்க கொங்கிரஸின் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகளுக்கு இடையில் கடந்த சனிக்கிழமை இணக்கம் ஏற்பட்டது.

இந்த சட்டத்தில் 2014 ஆம் ஆண்டு ரஷ்யா கிரிமியா பிராந்தியத்தை தனது ஆட்புலத்திற்குள் இணைத்தது அதேபோன்று அமெரிக்க தேர்தலில் அதன் தலையீடு குறித்த குற்றச்சாட்டுகளுக்கு புதிய தடைகளை விதிக்க அனுமதி அளிக்கிறது.

அதேபோன்று ஈரான் மற்றும் வட கொரியா மீது மேலும் தடைகளை விதிப்பதற்கும் இந்த சட்டமூலத்தில் சாத்தியங்கள் உள்ளன.

இந்த சட்டமூலம் ஏற்கனவே செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 17 =