6 மாவட்டங்களில் மேலதிக சிறப்பு அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு | இலங்கைத் தேர்தல்


நாளை நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வன்முறைகள் இடம்பெறக் கூடும் என்று அடையாளம் காணப்பட்ட வவுனியா, மன்னார் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் மேலதிக சிறப்பு அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று தேர்தல் கண்காணிப்பாளர்களின் பரிந்துரைக்கப்பட்ட இடங்களிலேயே மேலதிகமாக சிறப்பு அதிரடிப்படையினரைப் பணியில் ஈடுபடுத்தவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

வவுனியா, மன்னார், புத்தளம்,கண்டி, களுத்துறை, அனுராதபுர ஆகிய ஆறு மாவட்டங்களிலும், இவை தவிர, மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி மற்றும் வாழைச்சேனையிலும், அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது பிரதேசத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதிக ஆபத்துள்ள பகுதிகளில் கூடுதல் காவல்துறையினரையும், மேலதிகமாக சிறப்பு அதிரடிப்படையினரையும் நிறுத்த காவல்துறை மா அதிபர் இணங்கியுள்ளதாகவும் சிறிலங்கா தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

வாக்களிப்பைக் குழப்பும் எந்த முயற்சியும் மேற்கொள்ளப்பட்டால், காவல்துறையினர் நிலைமையைக் கட்டுப்படுத்த, அதிகபட்ச பலத்தைப் பயன்படுத்தவும் தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் 75,000 பேர் ஈடுபடவுள்ளனர்.

இவர்களில் 12,399 வாக்களிப்பு நிலையங்களில், தலா இருவர் வீதமும், 5700 காவல்துறையினர், ரோந்துப் பணியிலும், ஈடுபடவுள்ளனர்.

மேலும், எந்த அவசர நிலையையும் சமாளிப்பதற்காக 1300 இற்கு அதிகமான கலகத் தடுப்பு காவல்துறையினரும் பணியில் ஈடுபடுவர்.

நாளை காவல்துறையினரால், 220 வீதித்தடைகள்  ஏற்படுத்தப்படும் என்றும் தேர்தல் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *