சவுதி அரேபியா மீது இரட்டை கோபுர தாக்குதலுக்கு வழக்கு


உலக வர்த்தக மையமான அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள 110 மாடிகளை கொண்ட இரட்டை கோபுரத்தை 11-9-2002 அன்று அல் கொய்தா தீவிரவாதிகள் அடுத்தடுத்து இரண்டு விமானங்களால் தாக்கினர். இச்சம்பவம் உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்த தாக்குதலுக்கு ஒசாமா பின்லேடன் தலைமையிலான அல் கொய்தா தீவிரவாத அமைப்புதான் காரணம் என கண்டுபிடிக்கப்பட்டது. அதன் விளைவாக, அந்த இயக்கத்தை ஒழிக்க அமெரிக்கா தீவிர நடவடிக்கை எடுத்தது. அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவனான ஒசாமா பின் பின்லேடனை பாகிஸ்தானில் உள்ள ஆபோட்டாபாத் நகருக்குள் புகுந்து அமெரிக்க சீல் படையினர் சுட்டுக் கொன்றனர்.

இரட்டை கோபுர தாக்குதலின் பின்னணியில் சவுதி அரேபியா இருந்ததாக பின்னர் நடைபெற்ற விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. தாக்குதலுக்கு பயன்படுத்திய விமானங்களை கடத்திய 19 அல் கொய்தா தீவிரவாதிகளில் 15 பேர் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்கள் என்பது ஆதாரத்துடன் நிரூபணமானது.

இந்நிலையில், இரட்டை கோபுர தாக்குதலில் 2996 பேர் உயிரிழந்ததற்கும், சுமார் 6 ஆயிரம் பேர் காயம் அடைந்ததற்கும், பல லட்சம் கோடி டாலர்கள் அளவுக்கு பொருட்சேதம் ஏற்பட்டதற்கும் சவுதி அரேபியா அரசின்மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என இந்த தாக்குதலில் உயிரிழந்த, காயமடைந்த மற்றும் சொத்துகளை பறிகொடுத்தவர்களின் வாரிசுகள் தீர்மானித்தனர்.

இதற்கு வாய்ப்பளிக்கும் சட்டத்தை அமெரிக்க பாராளுமன்றத்தில் கொண்டுவர வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தினர். இதுதொடர்பான அதிகாரத்தை அமெரிக்க மக்களுக்கு அளிக்கும் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, இரு அவைகளிலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் ஒப்புதலுக்காக முன்வைக்கப்பட்ட இந்த மசோதாவை அதிபர் ஒபாமா இன்று தனது வெட்டுரிமையால் (வீட்டோ அதிகாரம்) நிராகரித்தார்.

The Justice Against Sponsors of Terrorism Act (JASTA) எனப்படும் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களுக்கு எதிரான நீதி என்னும் இந்த சட்டத்தை அனுமதித்தால் அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை சார்ந்த அதிகாரிகள் பிறநாடுகளில் உள்ள நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட வேண்டிய சூழல் நேரிடும்.

மேலும், அமெரிக்கா நீண்டகாலமாக கடைபிடித்துவரும் பிறநாட்டின் இறையாண்மை தொடர்பான சர்வதேச கொள்கைகளுக்கு தீமையாக அமைந்துவிடுவதுடன் கடல்கடந்துவாழும் அமெரிக்கர்கள் மீதும் எதிர்வினைகளை ஏற்படுத்தக்கூடும் என குறிப்பிட்டுள்ள அதிபர் ஒபாமா, இந்த சட்ட மசோதாவை நிராகரித்து கையொப்பமிட்டுள்ளார்.

இரட்டை கோபுர தாக்குதலின் பின்னணியில் ஒரு வெளிநாட்டை சேர்ந்த அரசு இருந்துள்ளது என்பதை அறிந்து அதற்குரிய வகையில் செயலாற்ற இதைப்போன்ற சட்டம் சரியான வழிமுறையாக இருக்க முடியாது.

இத்தகைய சட்டம் ஏற்படுத்தக்கூடிய எதிர்விளைவை எண்ணியும், உலகளவில் நாம் இந்த சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க நேர்ந்தால் நமது நட்பு நாடுகளுடனான உறவுகளில் பாதிப்பு ஏற்படும் என அஞ்சியும் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி, இந்த சட்டத்தை நிராகரித்துள்ளதாக அதிபர் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *