தமிழ் மக்கள், ஜனநாயகத்தின் உண்மையான பலனை அடைய செய்யுங்கள் | சிறீசேனாவுக்கு தமிழர் கட்சி வேண்டுகோள்


தமிழ் மக்கள், ஜனநாயகத்தின் உண்மையான பலனை அடையச்செய்யுங்கள் என இலங்கை புதிய அதிபர் சிறீசேனாவுக்கு தமிழர் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், ராஜபக்சேயை எதிர்த்து போட்டியிட்ட எதிர் அணியின் பொது வேட்பாளர் சிறீசேனாவுக்குத்தான் தமிழர் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது ஆதரவை அளித்தது.

அதன்படி, வடக்கு மாகாணத்தில் சிறீசேனாவுக்கு 74 சதவீத ஓட்டுகளும், கிழக்கு மாகாணத்தில் 81 சதவீத வாக்குகளும் கிடைத்தன. இது சிறீசேனாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழர்களின் ஏகோபித்த ஆதரவுதான், சிறீசேனாவை அபார வெற்றி பெறச்செய்திருக்கிறது.

இந்த நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், கொழும்பு நகரில் நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அறிவுறுத்தலை ஏற்று, இலங்கை அதிபர் தேர்தலில் சிறீசேனாவுக்கு அமோகமாக வாக்களித்த இலங்கை மக்களுக்கு குறிப்பாக வட-கிழக்கு மக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

நாடு எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய பிரச்சினைகளை அதிபர் சிறீசேனா தீர்க்க வேண்டும். குறிப்பாக, சிறுபான்மை தமிழ் மக்கள் ஜனநாயகத்தின் உண்மையான பலனை பெறச்செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆர்.சம்பந்தன், மற்றொரு பத்திரிகை பேட்டியில், “சிறீசேனாவின் தலைமை மீது மக்கள் அதிக எதிர்பார்ப்புகளை முன்வைத்து தமது முடிவை தெளிவாகவும், வெளிப்படையாகவும், உறுதியாகவும் கூறி இருக்கிறார்கள். நாடு பழைய பாதையிலிருந்து விலகி, வேறு வழியில், நியாயமான தடத்தில் பயணிக்க வேண்டியதின் அவசியத்தை தமது விருப்பமாக நாட்டு மக்கள் தெரிவித்திருக்கிறார்கள்” என குறிப்பிட்டார். மேலும், “நாட்டு மக்கள் அனைவரும், சமாதானமாகவும், சமத்துவமாகவும், கவுரவமாகவும் வாழ்வதற்கு உகந்த சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பை அவர்கள் அப்பட்டமாக முன்வைத்திருக்கிறார்கள். தமிழ் மக்களும், தமிழ்ப்பேசும் மக்களும் குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்கள் தங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்பி இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள்” என கூறினார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *