திருமண விழாவில் தற்கொலைப்படை தாக்குதலில் 30 பேர் பலி | சிரியா


சிரியாவில் செயல்பட்டுவரும் ‘சிரிய ஜனநாயக படை’ (எஸ்.டி.எப்.) அமைப்பு அங்கு ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய ஐ.எஸ். இயக்கத்தினருக்கு எதிராக சண்டையிட்டு வருகிறது. குர்து இன போராளிகளுடன் நெருங்கிய தொடர்புடைய எஸ்.டி.எப். அமைப்பை சேர்ந்தவர்களை குறிவைத்து ஐ.எஸ். இயக்கத்தினர் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஹசாகே மாகாணத்தில் உள்ள டால் டவில் என்ற கிராமத்தில் எஸ்.டி.எப். அமைப்பின் உறுப்பினர் ஒருவரின் குடும்ப திருமண விழா நடைபெற்றது. திருமண மண்டபத்தில் ஏராளமான மக்கள் கூடி இருந்தனர்.

அப்போது பயங்கரவாதி ஒருவர் உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு மண்டபத்துக்குள் நுழைந்தார். மணமகனும் மணமகளும் ஒருவருக்கு ஒருவர் திருமண உறுதிமொழி அளித்துக்கொண்டிருந்த போது அந்த நபர் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். அவை பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின.

இந்த தாக்குதலில் 30 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இந்த தகவலை உறுதி செய்து உள்ள சிரியாவின் மனித உரிமை கண்காணிப்பகம் குண்டுவெடிப்பில் சிக்கி மணமகனும் இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளது. ஆனால் மணமக்களின் உறவினர்கள் மணமக்கள் இருவரும் பாதுகாப்பாகவும், நலமாகவும் இருப்பதாக கூறுகின்றனர்.

இதற்கிடையில் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று ஐ.எஸ். இயக்கம் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், திருமண நிகழ்ச்சியை குறிப்பிடாமல் பொதுமக்கள் அதிகமாக கூடியிருந்த இடத்தில் தங்களது இயக்கத்தை சேர்ந்த போராளி ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு பின்னர் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததாகவும், அந்த தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டு உள்ளது.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *