டொனால்டு டிரம்பின் வாழ்க்கை வரலாறு | தொழில் அதிபராக இருந்து ஜனாதிபதி ஆகிறார்


தொழில் அதிபராக இருந்து அமெரிக்க ஜனாதிபதி ஆகும் டொனால்டு டிரம்பின் வாழ்க்கை  வரலாறு  வருமாறு:–

நியூயார்க்கின் குயின்ஸ் பகுதியைச் சேர்ந்த பிரடெரிக் டிரம்ப்–மேரி மெக்லியோட் தம்பதிக்கு 4–வது மகனாக கடந்த 1946–ம் ஆண்டு ஜூன் 14–ந் தேதி பிறந்தவர் டொனால்டு ஜான் டிரம்ப். குயின்ஸ், ஸ்டேட்டன் தீவு, புரூக்ளின் உள்ளிட்ட பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்து வந்த பிரடெரிக் டிரம்ப், ரியல் எஸ்டேட் துறையில் கொடிகட்டி பறந்தார்.

டொனால்டு டிரம்ப், குழந்தை பருவத்திலேயே சுறுசுறுப்பும், ஆற்றலும் மிகுந்தவராக இருந்ததால் அவரை 13 வயதிலேயே நியூயார்க் ராணுவ அகாடமியில் பெற்றோர் சேர்த்து விட்டனர். அங்கு கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கிய டிரம்ப், பள்ளிப்பருவத்தில் சிறந்த தடகள வீரராகவும், மாணவர் தலைவராகவும் ஜொலித்தார்.

1964–ல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த டிரம்ப், 2 ஆண்டுக்குப்பின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட வார்ட்டன் ஸ்கூல் ஆப் பைனான்ஸ் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார்.

கல்வியை முடித்தவுடன் தந்தையின் ரியல் எஸ்டேட் துறையிலேயே டிரம்ப் காலடி வைத்தார். இதற்காக தந்தையிடம் இருந்து 1 மில்லியன் டாலர் கடன் பெற்று தொழில் தொடங்கினார். இதில் சிறந்த வளர்ச்சியடைந்த டிரம்ப் 1971–ல் தந்தையின் நிறுவனத்துக்கு தலைவரானதுடன், அதன் பெயரை ‘டிரம்ப் கூட்டமைப்பு’ எனவும் மாற்றிக்கொண்டார்.

ரியல் எஸ்டேட் துறையில் இரக்கமற்ற வியாபாரியாக அறியப்பட்ட டொனால்டு டிரம்ப், புரூக்ளின் மற்றும் குயின்சில் வெறும் வீடு கட்டி விற்பனை செய்யும் பணிகளை செய்து வந்த தனது குடும்ப நிறுவனத்தை மன்ஹட்டனுக்கு மாற்றியதுடன், அங்கு உயர்ரக அடுக்குமாடிகளை கட்டும் நிறுவனமாக உயர்த்தினார்.

ஐ.நா. தலைமையகத்துக்கு மறுபுறம் இருக்கும் 72 மாடி குடியிருப்பை 2001–ம் ஆண்டு கட்டி முடித்தார் டிரம்ப். இதைப்போல ஹட்சன் ஏரியை ஒட்டியுள்ள டிரம்ப் பிளேஸ், கொலம்பஸ் சர்க்கிளில் உள்ள டிரம்ப் இன்டர்நேஷனல் ஓட்டல் மற்றும் டவர் உள்ளிட்ட பல்வேறு அடுக்குமாடிகளை கட்டியுள்ளார்.

ரியல் எஸ்டேட் துறையில் பேரரசராக திகழும் டிரம்ப்புக்கு மும்பை, இஸ்தான்புல், பிலிப்பைன்ஸ் என பல்வேறு வெளிநாடுகளிலும் கோடிக்கணக்கில் சொத்துகளும், அடுக்குமாடிகளும் உள்ளன.

டிரம்பின் இந்த வெற்றிக்குப்பின் பல்வேறு தோல்விகளும் இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக தனது நிறுவனம் திவால் ஆனது என அறிவித்தது, தன்னிடம் பணியாற்றிய ஒப்பந்ததாரர்களுக்கு பணம் கொடுக்காததால் குற்றச்சாட்டுக்கு ஆளானது, சிறு சிறு வர்த்தக நிறுவனங்களை விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது என பல்வேறு கடினமான சூழல்களை அவர் கடந்து வந்தார்.

ரியல் எஸ்டேட் துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளிலும் கொடிகட்டிப்பறந்த டிரம்ப், பொழுதுபோக்கு துறையில் மிகப்பெரும் ஜாம்பவானாக திகழ்ந்தார். அந்தவகையில் கடந்த 1996 முதல் 2015–ம் ஆண்டு வரை பிரபஞ்ச அழகி, அமெரிக்க அழகி உள்ளிட்ட அழகிப்போட்டிகளை நடத்தும் குழுவையும் நடத்தி வந்தார்.

2003–ம் ஆண்டு ‘தி அப்பிரண்டிஸ்’ என்ற மிகப்பெரும் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவை டிரம்ப் தொடங்கினார். இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதுடன் வெற்றிகரமாக 14 சீசன் ஒளிபரப்பாகியது.

70 வயதான டிரம்ப் 3 முறை திருமணம் செய்துள்ளார். இதன் மூலம் அவருக்கு டொனால்டு டிரம்ப் ஜூனியர், இவன்கா, எரிக், டிபானி, பாரன் ஆகிய பிள்ளைகள் உள்ளனர்.

எந்தவித அரசியல் பின்புலத்தையும் கொண்டிராத டிரம்ப், அமெரிக்க அரசியலை அடிக்கடி விமர்சித்து வந்தார். குறிப்பாக முந்தைய ஜனாதிபதிகளான ஜார்ஜ் புஷ், ஒபாமா ஆகியோரின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தார். அதுவும் ஒபாமா அமெரிக்காவில் பிறக்கவில்லை எனக்கூறி அவரது பிறந்த நாடு குறித்து தொடர் கேள்விகளை எழுப்பி வந்தார்.

கடந்த 2011–ம் ஆண்டு முதல் டிரம்ப் இவ்வாறு விமர்சித்து வந்ததால் ஒபாமா தனது பிறப்பு சான்றிதழை வெளியிட்டார். அதில் அவர் அமெரிக்காவிலேயே பிறந்திருப்பதாக கூறப்பட்டு இருந்தது. எனினும் இதை ஏற்காத டிரம்ப் தொடர்ந்து ஒபாமாவை வசைபாடுவதிலேயே குறியாக இருந்தார்.

முன்னதாக கடந்த 2000–ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருந்த டிரம்ப் சீர்திருத்த கட்சியின் வேட்பாளர் தேர்தலில் நின்றார். ஆனால் கலிபோர்னியா மாகாணத்திலேயே தனக்கு ஆதரவு இல்லை என்று தெரிந்தவுடன் அவர் வாபஸ் பெற்றார்.

இதைத்தொடர்ந்து கடந்த 2012–ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக அறிவித்தார். எனினும் ஒபாமாவின் பிறப்பு நாடு குறித்த அவரது கேள்விகள் மற்றும் விமர்சனங்களால் அவரது அரசியல் கனவு அப்போதும் பலிக்கவில்லை. இறுதியாக தனது வெள்ளை மாளிகை குறித்த கனவை கடந்த ஆண்டு ஜூன் 16–ந் தேதி அதிகாரப்பூர்வமாக டிரம்ப் அறிவித்தார்.

நியூயார்க் நகரில் உள்ள தனது டிரம்ப் டவரில் நடந்த நிகழ்வில் பேசிய அவர், 2016–ம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தேர்தலில் தான் நிற்கப்போவதாக அறிவித்தார். அப்போது முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷின் சகோதரர் ஜெப் புஷ் உள்பட மேலும் 17 குடியரசு கட்சி வேட்பாளர்கள் அவருடன் இருந்தனர்.

பின்னர் குடியரசு கட்சியின் வேட்பாளர் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களின் போது பல்வேறு சர்ச்சைகளில் அவர் சிக்கினார். குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான அவரது கருத்துகள், சட்டவிரோத குடியேறிகளை கட்டுப்படுத்த அமெரிக்கா–மெக்சிகோ இடையே சுவர் எழுப்புதல் போன்ற அவரது திட்டங்களுக்கு சொந்த கட்சியிலேயே எதிர்ப்புகள் வலுத்தன.

மேலும் அவருக்கு எதிராக பல பெண்கள் அளித்த செக்ஸ் புகார்களும் அமெரிக்கர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வீடியோக்களும் வெளியாகி டிரம்பின் பிரசாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

ஆனாலும் ‘அமெரிக்க வேலைவாய்ப்புகள் அமெரிக்கர்களுக்கே’, ‘அமெரிக்காவை மீண்டும் உயர்த்துவோம்’, ‘அமெரிக்க பொருளாதாரத்தை உயர்த்துவேன்’ போன்ற தாய்நாட்டுப்பற்றை தட்டி எழுப்பும் வகையிலான டிரம்பின் சொல்லாட்சி மிக்க வார்த்தைகள் அமெரிக்கர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.

இந்த வாக்குறுதிகளால் கவரப்பட்ட மக்கள் பெருவாரியான வாக்குகளை டிரம்புக்கு அளித்து வெற்றி பெறச்செய்துள்ளனர் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்து உள்ளனர். ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரும் தொழிலதிபராக இருக்கும் அவர் அசாதாரண முறையிலான பிரசாரம் மற்றும் தேர்தல் மூலம் ஜனாதிபதியாகி இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *