2016ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு | சிறிலங்கா


சிறிலங்கா அரசாங்கத்தின் 2016ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான ஒன்பது நாள் விவாதத்தை அடுத்து. நேற்று பிற்பகல் 5.25 மணியளவில் வாக்கெடுப்பு இடம்பெற்றது.

இதன் போது, 159 வாக்குகள் ஆதரவாகவும், 52 வாக்குகள் எதிராகவும், அளிக்கப்பட்டன.

இந்த வாக்கெடுப்பின் போது, மகிந்த ராஜபக்ச, அத்துரலியே ரத்தன தேரர், எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன, கீதா குமாரசிங்க, சிறிபால கம்லத், பிரேமலால் ஜெயசேகர, ஜனக பண்டார தென்னக்கோன், மனுச நாணயக்கார, புத்திக பத்திரன, லொகான் ரத்வத்த, கனக ஹேரத், சிவசக்தி ஆனந்தன், சிவமோகன் ஆகிய 13 பேர் வாக்கெடுப்பின் போது சபையில் இருக்கவில்லை.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த, லக்ஸ்மன் செனிவிரத்ன, டக்ளஸ் தேவானந்தா, ஆறுமகன் தொண்டமான், கே.கே.மஸ்தான், அங்கஜன் இராமநாதன், முத்துசிவலிங்கம் ஆகியோர் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வரசு செலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களித்தது.

வரவு செலவுத் திட்ட விவாதம் இடம்பெற்ற போது நேற்றுக்காலை சிறிலங்கா அதிபர் அங்கு வந்திருந்தார்.

அப்போது உரையாற்றிய பிரதி அமைச்சர்  அஜித் பெரேரா, வரவு செலவுத் திட்ட விவாதம் உள்ளிட்ட நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காத மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று சிறிலங்கா அதிபரிடம் கோரிக்கை விடுத்தார்.

இதற்கிடையே, வரவுசெலவுத் திட்ட மூன்றாவது வாசிப்பு மீதுான விவாதம் இன்று தொடங்கி வரும் 18ஆம் நாள் வரை இடம்பெறவுள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *