உலகின் மிகப் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் அமெரிக்க அதிபர் ஒபாமா முதலிடம்


உலகின் மிகப் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் அமெரிக்க அதிபர் ஒபாமா முதலிடத்திலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏழாவது இடத்திலும் உள்ளதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பிரிட்டனைச் சேர்ந்த ஓஆர்பி இன்டர்நேஷனல் என்ற அமைப்புக்காக உலக அளவில் 65 நாடுகளில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவில் கூறப்பட்டுள்ளதாவது:
உலக அளவில் மிகவும் பிரபலமான தலைவராக அமெரிக்க அதிபர் ஒபாமா இருக்கிறார். அவருக்கு ஆதரவாக 59 சதவீதம் பேரும், அவரை விரும்பவில்லை என்று 29 சதவீதம் பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அவரைத் தொடர்ந்து, இரண்டாவது இடத்தில் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலும், மூன்றாவது இடத்தில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனும் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, நான்காவது இடத்தில் பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாந்தும், ஐந்தாவது இடத்தில் ரஷிய அதிபர் விளாதிமிர் புதினும், ஆறாவது இடத்தில் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் உள்ளனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏழாவது இடத்தில் இருக்கிறார். அவரை ஆதரித்து 24 சதவீதம் பேரும், அவரை விரும்பவில்லை என்று 20 சதவீதம் பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மோடிக்கு அடுத்தபடியாக, பிரேசில் அதிபர் தில்மா ரூசெஃப் (8ஆவது இடம்), சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துலாசிஸ் (9ஆவது இடம்), ஈரான் அதிபர் ஹஸன் ரூஹான் (10ஆவது இடம்) ஆகியோர் இருப்பது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *