தமிழர்களுக்கு எதிராக என்னால் செயல்படவே முடியாது | ராஜபக்சே


இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் முன்கூட்டியே நடைபெற உள்ள பரபரப்பான சூழ்நிலையில், இலங்கை அதிபர் ராஜபக்சேவை  செய்தியாளர் எஸ்.ஏ.ஹரிஹரன் சிறப்பு பேட்டி கண்டுள்ளார். அவர் கேட்ட சுறுசுறுப்பான கேள்விகளுக்கு, ராஜபக்சே விறுவிறுப்பாக பதில் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- சமீபத்தில், சார்க் மாநாட்டின்போது நீங்களும், இந்திய பிரதமர் நரேந்திரமோடியும் சந்தித்தீர்கள். இலங்கை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்களை விடுவித்ததற்கு மோடி நன்றி தெரிவித்தார். இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நல்லெண்ண நடவடிக்கையாகக்கூட இது கருதப்பட்டது.

மீனவர்களும் வரவேற்றார்கள். ஆனால், இந்த பிரச்சினை தீர்ந்தபாடில்லை. மீனவர் கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன. தாக்குதல்கள் நடக்கின்றன. இரு நாடுகளுக்கு இடையிலான இந்த நீண்ட கால பிரச்சினை எப்படி தீர்க்கப்பட வேண்டும் என கருதுகிறீர்கள்?.

பதில்:- இந்திய பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தபோது, அவர் மேற்கொண்டிருக்கும் அயலுறவுக் கொள்கைக்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்தேன். நமது இரு நாட்டு உறவுகள் வலுப்பெறும் வண்ணம், அயலுறவுக்கொள்கையை அவர் விரிவுபடுத்தியுள்ளார். இதுவே மீனவர்களை விடுதலை செய்வதற் கான முடிவெடுக்க காரணமாக இருந்தது.

மீனவர் பிரச்சினையை மனிதாபிமானத்தோடு அணுக வேண்டிய பிரச்சினையாகவே நான் பார்க்கிறேன். மீன் வளத்துறையின் அமைச்சராக நான் இருந்த காலத்தில் இருந்தே இதுதான் என் பார்வை. அந்த காலக்கட்டத்தில் நான் பலமுறை இந்தியா சென்றிருக்கிறேன். உங்களது அமைச்சர்களை சந்தித்து, பறிமுதல் செய்யப்பட்ட எங்கள் நாட்டு படகுகளை விடுவிக்க கோரிக்கை விடுத்திருக்கிறேன். இது ஒரு மனிதாபிமானத்தோடு அணுக வேண்டிய பிரச்சினை என்பதே என் பார்வை. மீன்களுக்கு எல்லை தெரியாது.

கேள்வி:- அது சரி, ஆனால் மீனவர்கள் தாக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. கைது சம்பவங்களும் தொடர்கின்றனவே?.

பதில்:- நான் இதை மறுக்கிறேன். தாக்குதல்களுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. யாரையும் தாக்கக்கூடாது என தெளிவாக உத்தரவு பிறப்பித்துள்ளோம். எனவே, தாக்குதல்கள் நடக்காது. இவை எல்லாம் கட்டுக்கதைகள்.

கேள்வி:- நீங்கள் தமிழர்களுக்கு, இலங்கை தமிழர்களுக்கு எதிரானவர் என்ற பரவலான பார்வை உள்ளதே?.

பதில்:- நான் எப்படி தமிழர்களுக்கு எதிராக இருக்க முடியும். எனது அமைச்சரவையில் உள்ள தமிழ் அமைச்சர்களை கேட்டுப்பாருங்கள், எம்.பி.க்களை கேளுங்கள். என்னால் தமிழர்களுக்கு எதிராக செயல்படவே முடியாது. என் உறவினர் ஒருவர் யாழ்ப்பாணத்தமிழர் ஒருவரை திருமணம் செய்திருக்கிறார். மற்றும் ஒரு உறவினர் கண்டியைச் சேர்ந்த, மலையகத்து இஸ்லாமியரை திருமணம் செய்துள்ளார்.

இது ஒரு சிறிய நாடு. சிங்களர்கள், தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு இடையே கலப்புத் திருமணங்கள் இங்கு சகஜம். நான் இந்த நாட்டின் ஜனாதிபதி. நான் அனைவரையும் ஒன்றாகவே கருதுகிறேன். மதம், சாதி மற்றும் இனத்தின் அடிப்படையில் என்னால் பாகுபாடு காட்ட முடியாது. ஓட்டுக்காகவும், மக்களை எங்களிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்பதற்காகவும் எதிர்க்கட்சிகள் எங்கள் மீது புழுதியை வாரி தூற்றுகின்றன.

கேள்வி:- ஒரு சுவாரஸ்யமான ஜனாதிபதி தேர்தலை இலங்கை சந்திக்கிறது. உங்கள் அரசில் அமைச்சராக பணியாற்றிய ஒருவர், உங்களுக்கு எதிராக அதிபர் தேர்தலில் களமிறங்கியுள்ளார். மீண்டும் ஆட்சிக்கு வர முடியும் என நம்பிக்கை உள்ளதா?.

பதில்:- மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறேன். இல்லை என்றால் முன் கூட்டியே தேர்தலை சந்திக்க மாட்டேன். எனது பதவிக்காலம் மீதம் 2 ஆண்டுகள் உள்ளது. அந்த 2 ஆண்டுகளை தியாகம் செய்து தான் தேர்தலை சந்திக்கிறேன். ஜப்பான் போல, ஜப்பான் பிரமர் ஷின்சோ அபேயும் முன்கூட்டியே தேர்தலை சந்தித்து 3-ல் 2 பங்கு பெரும்பான்மையை பெற்றுள்ளார். எனக்கும் நம்பிக்கை உள்ளது.

கேள்வி:- இலங்கையில் கணிசமான எண்ணிக்கையில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மலையகத் தமிழர்கள் வாழ்கிறார்கள். உங்கள் ஆட்சியின் கீழ் இந்த சமூகம் எந்த அளவிற்கு பயனடைந்திருப்பதாக கருதுகிறீர்கள்?.

பதில்:- நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தான் அவர்களை கவனிக்கத் தொடங்கினோம். எந்த அரசும் அவர்களை கண்டுகொள்ளவில்லை. மற்ற அரசுகள் அவர்களை கவனிக்கும் கடமையை மலையகத்தில் உள்ள நிறுவனங்களிடம் கொடுத்துவிட்டார்கள். மலையகப் பகுதிகளை நாங்கள் முன்னேற்றத் தொடங்கியுள்ளோம். சாலைகளை அமைக்கிறோம், வீடுகள் கட்டித் தருகிறோம்.

இவற்றை அந்த நிறுவனங்கள் முன்பே செய்திருக்க வேண்டும். அதனால் நாங்கள் இப்போது செய்கிறோம். தரமான சாலை வசதிகள் தந்திருக்கிறோம். நல்ல பள்ளிகளை உருவாக்கித் தந்துள்ளோம். அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு செல்கிறார்கள். மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி தந்துள்ளோம். மருத்துவமனைகள் அமைத்துள்ளோம்.

கேள்வி:- ஐ.நா. சபையில், தமிழில் உரையாற்றினீர்கள். நீங்கள் தேர்தல்களில், பொதுக்கூட்டங்களில் தமிழில் பேசியதுண்டு. ஆனால் ஐ.நா.வில் பேசியதன் நோக்கம் என்ன?.

பதில்:- இது நல்லெண்ணத்தின் அடிப்படையிலான செய்கை. நான் தமிழ் கற்க விரும்புகிறேன். நான் இன்னும் ஒரு தமிழ் மாணவன். ஒரு தலைவர் என்னை சிங்களத்தில் பேசச் சொன்னார். இங்கே 3 அலுவல் மொழிகள் உண்டு. சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம். ஆகவே, நான் 3 மொழிகளிலும் பேசினேன். தமிழில் பேசி பதிவு செய்தேன்.

இங்கே தமிழர்கள் சிறிய அளவில் வாழ்கிறார்கள். இந்தியாவை ஒப்பிடும்போது அவர்களின் தொகை குறைவு. இங்கே எல்லோருக்கும் 3 மொழிகளும் தெரிய வேண்டும் என்று நினைத்தேன். தற்போது அனைத்து மாணவர்களுக்கும் ஆங்கிலம், தமிழ் மற்றும் பிரதான மொழி சிங்களம், உள்ளிட்ட 3 மொழிகளையும் கற்பிக்கும் முயற்சியில் இருக்கிறோம்.

அவர்கள் இவற்றை கற்க வேண்டும். நீங்கள் தமிழ் பேசினால் எனக்கு புரியாது. ஆகவே எனக்கு சந்தேகம் வரும். நான் சிங்களத்தில் பேசினால் என்னை சந்தேகிப்பார்கள். இதற்கு சிறந்த வழி ஒருவர் மொழியை மற்றவர் கற்பதுவே. எங்கள் மக்களிடம் இதைத்தான் சொல்லியிருக்கிறேன். இதற்கான பாதையை எங்கள் மக்களுக்கு காட்ட விரும்புகிறேன். சிங்கள மக்களும் தமிழ் மொழி கற்க வேண்டும்.

இவ்வாறு ராஜபக்சே கூறினார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *