இந்தியாவைத் தாக்குதவதற்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு தயாராகி வருவதாக பரபரப்பு தகவல்


அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில், இந்தியாவைத் தாக்குதவதற்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு தயாராகி வருவதாக, அந்நாட்டுப் பத்திரிகையில்
வெளியிடப்பட்டுள்ள புலனாய்வுக் கட்டுரையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் “யூ.எஸ்.ஏ. டுடே’ பத்திரிகையில் புலனாய்வுக் கட்டுரை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. அத்துடன், பாகிஸ்தான் தலிபான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அந்நாட்டு நபரிடம் இருந்து பெறப்பட்ட உருது மொழி ஆவணமும் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த ஆவணத்தில், இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கான ஏற்பாடுகளில் ஐ.எஸ். அமைப்பு தற்போது ஈடுபட்டிருக்கிறது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலானது, அமெரிக்காவுடன் இறுதிக்கட்ட போருக்கு வழிவகுக்கும் எனவும் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.எஸ். மீது அமெரிக்கா தனது அனைத்து கூட்டணி நாடுகளுடன் சேர்ந்து தாக்குதல் நடத்தும் பட்சத்தில், இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றுசேர்வார்கள். இதன்பலனாக இறுதிக்கட்ட போர் மூளும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள், பல பிரிவுகளாக பிரிந்து கிடப்பதை சுட்டிக்காட்டி, அவை அனைத்தும் ஒரே அமைப்பாக ஒன்றிணைய வேண்டும் என்று ஐ.எஸ். கேட்டுக் கொண்டிருக்கிறது.
ஐ.எஸ். அமைப்புடன் அல் காய்தா பயங்கரவாத அமைப்பு இணைய வேண்டும் என்றும், ஐ.எஸ். அமைப்பின் தலைவரை உலகிலுள்ள 100 கோடி இஸ்லாமியர்களும் தங்களது ஒரே தலைவராக அங்கீகரிக்க வேண்டும் என்றும் அந்த ஆவணத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடன் நேரிடையாக மோதலில் ஈடுபட்டு சக்தியை வீணாக்குவதைத் தவிர்த்து, அரேபிய பிராந்தியத்தில் காலிஃபட் (முஸ்லிம் மத) பேரரசை உருவாக்குவதில் ஐ.எஸ். கவனம் செலுத்த வேண்டும் என்றும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று அமெரிக்க பத்திரிகையில் வெளியாகியுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உருது மொழியில் இருக்கும் அந்த ஆவணம், புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழக பேராசிரியரால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அதை பல்வேறு புலனாய்வுத் துறை அதிகாரிகளும், முன்னாள் புலனாய்வுத் துறை அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *