சீனாவில் 6 மாடி கட்டிடம் இடிந்தது -பலர் பலி


சீனாவின் மேற்கு பகுதியில் ஷெஜியாங் மாகாணத்தில் உள்ள வெங்ஷூ நகரில் 6 தளங்களை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விபத்துக்குள்ளானது. அதில் பலர் பலியாகினர். ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். அந்த கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அவர்களின் மனதை உருக்கிய ஒரு காட்சி தென்பட்டது. சில கட்டிட இடிபாடுகளை அகற்றிய போது ஒரு இளம் ஆணின் உடல் மட்டும் தென்பட்டது. பின்னர் முழுமையாக அகற்றினர். அதையடுத்து அந்த ஆணின் உடலையொட்டி ஒரு பெண்ணின் உடலும் இருந்தது. அவர்கள் இருவருக்கும் இடையே 3 வயது சிறுமியின் உடலும் இருந்தது. ஆண் மற்றும் பெண்ணின் கைகள் அச்சிறுமியை அணைத்து பாதுகாத்த படியும் உடல்கள் கவிழ்ந்த நிலையிலும் கிடந்தன.

உடனே அந்த 3 பேரின் உடல்களையும் தீயணைப்பு படையினர் மீட்டனர். ஆனால் அவர்களில் சிறுமி மட்டும் லேசான காயங்களுடன் உயிருடன் இருந்தாள். உடனே, அவளை ஆஸ்பத்திரியில் அனுமதித்து உயிர் பிழைக்க வைத்தனர். அவளது பெயர் வூ நிங்ஸி. கட்டிடம் இடிந்த போது அவளது பெற்றோர் இவளை காப்பாற்றுவதற்காக அவளை தனது கரங்களால் சுற்றி அணைத்து இடிபாடுகள் அவள்மீது விழாமல் காப்பாற்றியுள்ளனர்.

கடவுள் அருளால் அவளும் தீயணைப்பு படை வீரர்களால் கண்டு பிடிக்கப்பட்டு 15 மணி நேரத்துக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டாள். இக்காட்சி கண்காணிப்பு காமிராவில் பதிவாகி ஏராளமானவர்களின் மனதை கரைய செய்தது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *