ஜிகா வைரஸ் மியாமி நகராட்சியின் வருவாயில் பின்னடைவு


பிரேசில் நாட்டில் தோன்றி ஆயிரக்கணக்கான மக்களிடம் நோய்த்தொற்றை ஏற்படுத்திய ஜிகா வைரஸ் அமெரிக்காவின் புகழ்பெற்ற மியாமி கடற்கரையில் பரவி வருவதாக வெளியாகும் தகவல் அமெரிக்க மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கொசுக்கடியால் பரவும் ஜிகா நோய்த்தொற்று, பிரேசில் நாட்டில் உருவாகி உலகில் உள்ள 50-க்கும் அதிகமான நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது, அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான மியாமி கடற்கரை பகுதியில் ஜிகா நோய்த்தொற்று பரவி வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறிப்பாக, மியாமியின் வின்வுட் பகுடியில் ஜிகா தொற்று அதிகமாக காணப்படுவதாகவும், கடந்த 17-ம் தேதி நிலவரப்படி ஜிகா தொற்றுக்குள்ளான 33 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மியாமி சுகாதாரத்துறையின் சார்பில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் எழில்மிகு கடற்கரை நகரமான மியாமியில் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் ஒன்றரை கோடி மக்கள் இரவுப் பொழுதை கழித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இவர்களின் வருகையால் மியாமி நகராட்சி நிர்வாகத்துக்கு சுமார் 250 கோடி டாலர் வருமானமாக கிடைத்துள்ளது.

தற்போது, மியாமி கடற்கரை பகுதியில் ஜிகா வைரஸ் பரவும் செய்திகள் வெளியாகி வருவதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவதுடன் மியாமி நகராட்சியின் வருவாயிலும் பின்னடைவு ஏற்படும் என கருதப்படுகிறது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *