மகாத்மா காந்தியின் பேத்தி எலா காந்திக்கு தென்னாப்பிரிக்க நாட்டின் வாழ்நாள் சாதனையாளர்விருது


தென்னாப்பிரிக்கா நாட்டில் வக்கீலாக பணியாற்றிவந்த மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி, அங்கு வெள்ளையர்களின் அடக்குமுறை ஆட்சியால் கருப்பின மக்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படும் கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதேபோல், தமது தாய்நாடான இந்தியாவிலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்யத்தின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக சுதந்திர வேள்வியை தொடங்கினார்.

இந்த சுதந்திர வேள்விதான், பிற்காலத்தில் தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர் ஆட்சிக்கு எதிரான மிகப்பெரிய போராட்டமாக வெடித்தது.

தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் நிலமோ, வீட்டுமனை உள்ளிட்ட சொத்துக்களோ வாங்க கூடாது என்னும் பிரிட்டிஷ் அரசின் ‘கெட்டோ’ எனப்படும் கொடுங்கோன்மை சட்டத்துக்கு எதிராக டர்பன் நகரில் கடந்த 1946-ம் ஆண்டு மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் 70-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மிகப்பெரிய திருப்புமுனை போராட்டமாக அமைந்த இந்த அறப்போர் நடைபெற்ற டர்பன் நகர சுதந்திரப் பூங்காவில் இந்த விழா நடைபெற்றது. இவ்விழாவில் மகாத்மா காந்தியின் பேத்தி எலா காந்திக்கு தென்னாப்பிரிக்க நாட்டின் வாழ்நாள் சாதனையாளர் என்னும் கவுரவ விருது அளிக்கப்பட்டது.

விருதினை பெற்றுகொண்டு ஏற்புரை நிகழ்த்திய எலா காந்தி(76), ஒடுக்கப்பட்ட மக்களுக்காக 1913-ம் ஆண்டு மகாத்மா காந்தி நடத்திய போராட்டம் பிற்காலத்தில் அகிம்சை முறையிலான மிகப்பெரிய சத்தியாகிரகப் போராட்டமாக உருவெடுத்து தென்னாப்பிரிக்க மக்களுக்கான உரிமைகளை பெற்றுத்தந்த சம்பவங்களை நினைவுகூர்ந்தார்.

இந்த விழாவில் தனிராம் மூல்சந்த்(90) கலந்துகொண்டு டர்பன் சுதந்திரப் பூங்காவில் மரக்கன்றுகளை நட்டார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *