கோட்டாவுக்கு தனிய வர பயமென்றால் சகோதர்களுடன் வரலாம்: சஜித்


கோத்தாபய ராஜபக்ஷ தனித்து வருவதற்கு அச்சம் என்றால் தனது சகோரதரர்களுடன் இணைந்தேனும் முடிந்தால் பகிரங்க விவாதத்துக்குவரட்டும் என மீண்டும் அழைப்பு விடுப்பதாக புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஹங்வெல்ல நகரில் நேற்று மாலை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டின் ஜனாதிபதியாகக்கூடியவருக்கு எதிர்காலத்தில் நாட்டில் மேற்கொள்ளவேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பாகவும் தெளிவு இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாமல் வேறு யாராவது எழுதிக்கொடுப்பதை வாசித்து மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்குவதால் மக்களுக்கு ஏமாற்றமே ஏற்படும்.

அதனால் நாட்டின் ஜனாதிபதியாகக்கூடியவர் எவ்வாறு நாட்டை முன்னேற்றப்போகின்றார் என்ற வேலைத்திட்டத்தை பொது மக்களுக்கு முன்னால் தெரிவிக்கவேண்டும். அதன் மூலம் யார் ஜனாதிபதிக்கு பொருத்தமானவர் எனமக்கள் தீர்மானிப்பார்கள். அந்த சந்தர்ப்பத்தை மக்களுக்கு வழங்குவதற்காக எனது எதிர்வேட்பாளரை பகிரங்க விவாதத்துக்கு அழைத்திருந்தேன். ஆனால் அதற்கு இதுவரை பதில் தெரிவிக்கவில்லை.

அத்துடன் ஜனாதிபதி தேர்தலில் நான் வெற்றிபெற்றவுடன் புதிய அரசாங்கம் அமைக்கப்படும். எனக்கு கீழ் அமைக்கப்படும் அந்த அரசாங்கத்தில் திருடர்களுக்கும் மோசடிகார்களுக்கும் எந்த இடமும் வழங்கப்படமாட்டாது.

அதேபோன்று கொலை, கொள்ளைக்காரர்கள் போதை, பாதாள குழுக்கள் என்பவற்றுக்கும் எந்த வாய்ப்பும் எனது அரசாங்கத்தில் வழங்கப்படமாட்டாது. பாடசாலை மாணவர்களை சீரழிக்கும் குடு வியாபாரிகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு நான் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *