நான் பிறந்தபோது இந்தியா என்ற நாடில்லை; பாகிஸ்தானுமில்லை பங்களாதேசுமில்லை!


இப்போது நான் மரணிக்கும் வயதை எட்டிவிட்டேன். நீங்களாக சண்டையிட்டீர்கள், என்னைச்சுற்றி நீங்களாக எல்லைகளை வகுத்தீர்கள். இப்போது என்னிடம் ஆவணங்கள் கேட்கிறீர்கள்!

 நான் பிறந்தபோது இந்தியா என்ற நாடில்லை! பாகிஸ்தானுமில்லை, பங்களாதேசுமில்லை!

ப்போது நான் குழந்தையாக இருந்தேன். வாளும் வேலும் கேடயமும் சிலநூறு வீரர்களையும் கொண்டிருந்த ஒருவரைக் காட்டி, இவர்தான் உனக்கும் இந்த சமஸ்தானத்துக்கும் அரசர் என்றார்கள். சரி என்றேன்.

அப்போது நான் சிறுவனாக இருந்தேன். எங்கிருந்தோ வாளும் வேலும் குதிரையும் கொண்டு படைதிரட்டி வந்த ஒருவன் என் அரசரின் தலையைக் கொய்து விட்டு இனி நான்தான் உங்களுக்கும் உங்கள் சிற்றரசுக்கும் அரசன் என்றான். சரி என்றேன்.

அப்போது நான் இளைஞனாக இருந்தேன். துப்பாக்கிகளும் பீரங்கியும் கொண்டு கப்பலில் வந்த வியாபாரிகள் என் அரசனைக் கொன்றுவிட்டு சிலரை அடிமையாக்கி நாங்கள் தான் உங்களுடைய அரசாங்கம், நம்முடைய பேரரசின் அரசி பிரிட்டிசில் இருக்கிறார் என்றார்கள். சரி என்றேன்.

அப்போது நான் குடும்பத்தலைவனாக இருந்தேன். நாம் விடுதலை பெற்றுவிட்டோம். இனி நாங்கள் தான் உனக்கும் நம் இந்தியாவுக்கும் அரசாங்கம் என்றார்கள். சரி என்றேன்.

வெடிகுண்டுகள் விமானங்கள் ஏவுகணைகள் கொண்டு நிறைய சண்டைகள் நடந்தது, கொலைகள் நடந்தது, கொள்ளைகள் நடந்தது. இந்தியா என்றார்கள் பாகிஸ்தான் என்றார்கள் பங்களாதேஷ் என்றார்கள் தனித்தனி நாடுகள் தனித்தனி அரசாங்கம் என்றார்கள். சரி என்றேன்.

இப்போது நான் மரணிக்கும் வயதை எட்டிவிட்டேன். ஆவணங்கள் கேட்கிறார்கள். நீங்களாக சண்டையிட்டீர்கள், என்னைச்சுற்றி நீங்களாக எல்லைகளை வகுத்தீர்கள், நீங்களாக போர் புரிந்தீர்கள், எங்களைச்சுற்றி நீங்களாக எல்லைகளை மாற்றிக் கொண்டீர்கள். இப்போது மட்டும் என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் ஆவணங்களை..? என்று கேட்டேன்.

துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி முகாமுக்கு போகச்சொல்கிறார்கள். வேறு வழி என்ன இருக்கிறது. சரி என்று சொல்வதைத்தவிர..?

நன்றி : Samsu Deen Heera முகநூல் பதிவிலிருந்து…

நன்றி – வினவுLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *