சங்ககால சமையல் – திணைபால் சாதம் | பகுதி 1 | பிரியா பாஸ்கர்


தமிழக பிரபல சமையல் குறிப்பு கலைஞர் பிரியா பாஸ்கர் சங்ககால சமையல் எனும் தலைப்பில் தமிழர் வரலாற்றில் பல நூறு ஆண்டுகளின் முன்னர் சமைத்து உண்ட உணவுகளை எவ்வாறு தயாரிப்பதென எழுதுவதில் பிரசித்தி பெற்றவர். இவர் தமிழகத்தில் முன்னணி வகிக்கும் பல பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் பல சமையல் குறிப்புகளை எழுதி மக்களின் பாராட்டுக்களை பெற்றிருந்தார். அத்துடன் அது சம்பந்தமான பல கலை நிகழ்வுகளையும் நடாத்தி மக்களின் வரவேற்பினை பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அண்மையில் பிரசித்தி பெற்ற அவரது சங்க கால சமையல் குறிப்புகளை வணக்கம் லண்டன் இங்கே தொடராக தர இருக்கின்றது…

 

நம் தமிழர்கள் பண்பாட்டிலும், நாகரிகத்திலும் சிறந்து விளங்கினர் என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் சமையலிலும் சிறந்து விளங்கியுள்ளனர். அந்த காலத்தில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு ஆரோக்கியமாகவும், சுவையாகவும் உண்டு வந்துள்ளனர் என்பதைச் சங்க இலக்கிய பாடல்கள் மூலம் அறியலாம். எண்ணற்ற பாடல் வரிகள் நம் தமிழர்கள் வாழ்ந்த முறையும் உணவு உண்ட முறையும் கூறுகிறது.

குறுந்தொகையில் உணவு பரிமாறும் முறையைப் பற்றிக் காண முடிகிறது. அதாவது முதலில் குழம்பைப் பரிமாறுவதா, சாதத்தைப் பரிமாறுவதா, தயிரைப் பரிமாறுவதா என்று எந்த முறையில் சரியாக உணவைப் பரிமாறி உண்ணலாம் என்பதைக் காண முடிகிறது. ஆனால் இங்கிருந்து பிற்காலத்தில் ஈரோப்பியன் நாடுகளுக்குப் பரவியது. நாம் அதை அறியலாம் அவர்களை மிகைப்படுத்திக் கூறுகிறோம்.

நெருப்பில் வாட்டிச் சுட செய்து உண்ணக் கூடிய ‘பார்பிக்யூ” (BBQ) உணவு முறை சங்க காலத்தில் மிகுதியாய் பயன்படுத்தியதை நம் சங்க கால பாடல்கள் பல கூறுகின்றன. சுருக்கமாகச் சொன்னால் விஞ்ஞான வளர்ச்சிக் காரணமாக நாம் பயன்படுத்தும் மிக்ஸி, கிரைண்டர், கேஸ் ஸ்டவ், அவன் ரூ இன்டக்ஷன் ஸ்டவ் போன்றவை அந்தக் காலத்தில் இல்லை என்றாலும், அடிப்படையாக உணவு செய்யும் முறையை நம் சங்கத்தமிழர் நமக்குக் கற்றுத் தந்துள்ளனர் என்பதே உண்மை.

அதன் அடிப்படையில் நம் முன்னோர்கள் எவ்வாறு எந்தெந்த உணவுகளை உண்டு வாழ்ந்தனர் என்பதைப் பார்ப்போம் அவர்கள் சமைத்து உண்ட உணவில் நம் உடலுக்கேற்ற அனைத்து நற்பயன்களும் அடங்கியுள்ளன.

சங்க காலத்தில் சமைத்த உணவின் முறையும், விளக்கத்தையும் தொடர்ந்து காணலாம். அவர்கள் சமைத்து உண்ட உணவின் சத்துக்களையும் காணலாம்.

தற்காலத்தில் நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் வராகு, கம்பு, ராகி, சோளம், திணை போன்ற சிறுதானியங்களை நம் முன்னோர்கள் சமையலில் மிகுதியாய் பயன்படுத்தியுள்ளார்கள். காரத்துக்கு மிளகை மட்டுமே பயன்படுத்தியுள்ளனர். ஆனால் சுவைக்கு உப்பைப் பயன்படுத்தியுள்ளனர்.

அதிகமாகச் சமையலில் மாமிசத்தைச் சமைத்து உண்டனர். ஒளவையாரும் புலவர்களும் புலால் (மாமிச) உண்டனர். கள்ளையும் உண்டு வாழ்ந்துள்ளனர். அதிகம் பண்டம் மாற்றும் முறையில், மக்கள் தங்கள் பொருட்களைக் கொடுத்து மாற்றியுள்ளனர்.

‘சிறியகள் பெறினே எமக்கு ஈயும் மன்னே,

பெரிய கள் பெறினே

யாம்பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே,

சிறுசோற்றானும் நனிபல கலத்தன் மன்னே

பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன மன்னே”

என்று ஒளவையார் அதியமான் நெடுமான் அஞ்சி இறந்த போது, அத்துயரம் தாங்காது புலம்புகிறார். இவ்வரிகளின் மூலம் ஒளவையார்; புலாலும் ரூ மதுவும் உண்டனர் என்பதை அறிய முடிகிறது. இது புறநானூற்றில் 235 ஆவது பாட்டு.

புலால் உணவு உண்ணாதவர்கள் தமிழகத்தில் வாழ்ந்தனர் என்பதைப் பத்துப்பாட்டில் காணமுடிகிறது.

 

பண்டமாற்று முறை,

‘தேன்நெய்யொடு கிழங்கு மாறியோர்

மீன்நெய்யொடு நறுவுமறுகவும்

தீம் கரும்போடு அவல் வகுத்தோர்

மான் குறையொடு மது மறுகவும்”

இவ்வரிகளின் மூலம் குறிஞ்சி நில மக்கள் தேனையும், கிழங்கையும் கொண்டு போய் நெய்தல் நில மக்களுக்கு பண்ட மாற்று முறை செய்து, நெய்தல் நிலத்து மீன் ரூ நெய்யோடு நறவாகிய கள்ளைப் பெற்றனர். அதுபோல மருத நிலத்து மக்கள் கரும்பு, அரிசி ரூ அவலையும் கொடுத்து முல்லை நிலத்தில் கிடைக்கும் பொருள்களான மான் தசையோடு மதுவையும் பெற்று பண்ட மாற்றம் செய்தனர்.

 

1.திணைபால் சாதம் :

‘நெய் விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்,

எருமை, நல் ஆன், கரு நாகு, பெறூஉம்

மடிவாய்க் கோவலர் குடிவயிற் சேப்பின்

இருங்கிளை ஞெண்டின் சிறு பார்ப்பு அன்ன

பசுந்தினை மூரல் பாலொடும் பெருகுவிர்”.

 

என்ற வரிகள் சங்க இலக்கியமான பதினென் மேற்கணக்கில் உள்ள பத்துப்பாட்டில் நான்காவதாக உள்ள பெரும்பானாற்றுப்படையில் இருந்து எடுக்கப்பட்டது.

கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவர் தொண்டைமான் இளந்திரையனைக் சிறப்பித்து 500 அடிகளில் பாடியுள்ளார். இந்தப் பாடல் 16-169 வரிகளிலிருந்து எடுக்கப்பட்டது.

பெரும்பானாற்றுப்படையில் மன்னன் இளந்திரையைப் பற்றியும் அவன் நாட்டில் பல்வேறு நிலைகளில் வாழும் மக்களின் வாழ்க்கை நெறி  விருந்தோம்பும் பண்பு விளக்கப்பட்டுள்ளன.

இடையர் மகள் தான் விற்ற மோரினால் நெல் பெற்று தனது சுற்றம் அனைத்தையும் உண்ணச் செய்கிறாள். நெய் விற்ற பணத்தில் பசும்பொன் எதையும் பெறாமல், எருமையையும், நல்ல பசுக்களையும் அவற்றின் கன்றுகளோடு வாங்குகிறாள். இத்தகையச் சிறப்புடைய இடையர் மகள் வாழும் மடித்த வாயினையுடைய கோவலர் குடியிருப்புக்குச் சென்றால், நண்டுகளின் சிறுகுஞ்சுகளைப் போன்ற பசுமையான தினையரிசியினாலானச் சோற்றைப் பாலுடன் பெறலாம் என்று குறிப்பிடுகிறார்.

பொதுவாக நாம் நம் வீட்டில் பாலுடன் உப்பு சாதத்தைச் சேர்த்து பிசைந்து சாப்பிடுவோம். உடலுக்குக் குளுமை சூட்டைத் தணிக்கும்.

அதேபோல் நம் சங்க காலத்திலும் உண்டுள்ளனர் என்பதை இப்பாடல் வரிகளின் மூலம் அறியலாம்.

தினையில் புரதம், மாவுச்சத்து, போதுமான மினரலும்  நார்ச்சத்தும்  பாலில் கொழுப்பு  புரதச்சத்தும் நிறைந்துள்ளது. மிகவும் எளிதாக தினைப்பால் செய்யலாம்.

 

 

திணைபால் சாதம்:

தேவையான பொருட்கள் :

தினை-200 கிராம் உப்பு -தேவையான அளவு

பால் -200 மி.லி. (காய்ச்சியப் பால்)

செய்முறை :

தினை அரிசியை நன்கு இடித்து அதன் உம்மியைப் புடைத்து அகற்றி சுத்தம் செய்து கொள்ளவும். வேண்டுமெனில் சிறிது நேரம் ஊறவைக்கலாம். இல்லையெனில் நன்கு சுத்தம் செய்த தினை அரிசியுடன் சுமார் 3 கப் அளவு (அ) 600 மி.லி. தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். தண்ணீருடன் போதுமான உப்பைச் சேர்த்து வேக வைக்கவும். சாதத்தின் சூடு ஆறியவுடன், சூடானப் பாலைச் சேர்த்து, நன்கு குளைய பிசைந்து சாப்பிடவும்.

உடலுக்கு ஆரோக்கியமான எளிமையான ரெசிப்பி. முக்கியமாக குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்றது.

பிசைந்த சாதத்தை உடனே சாப்பிட்டால் சுவையாக இருக்கும். தினை சாதத்தை நன்கு நுங்குப் போல் பிசைந்து சாப்பிட்டால் சுவை கூடுதலாக இருக்கும்.

 

தொடரும்…

 

 

 

 

 

சமையல் குறிப்பு கலைஞர் பி பிரியா பாஸ்கர்

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *