சங்ககால சமையல் – எள் துவையல் | பகுதி 5 | பிரியா பாஸ்கர்


அடைஇடை கிடந்த கைபிழி பிண்டம்,

வெள் எள் சாந்தொடு புளிப்பெய்து அட்ட

வேளை வெந்தை, வல்சி ஆகப்

பரற் பெய் பள்ளிப் பாயின்று வதியும்

உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ

 

சுமார் 160 புலவர்களால் பாடப்பெற்று சுமார் நானூறு பாக்களைக் கொண்ட புறநானூறு, எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இறை அருளும், ஆண்மையும், பண்பும், பாசமும் பாவும், பாவலரும், இசையும், அரசும் நாடும், மக்களும், மன்னரும், அன்பும், பண்பின் உயிர்ப்புடன் விளங்குகின்ற பெருமை மிகுந்த நிலையைப் புறநானூறு பாடல்களில் காணலாம்.

பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு என்னும் புலவரால் பாடப்பெற்ற 246வது புறநானூறு பாடலில் 6-8 வரியில் உள்ளது.

பெண்ணின் கணவன் இறந்தபோது அவள் பெறும் துன்பத்தைப் பற்றியும், சுற்றத்தார் வருந்தும் வருத்தம் பற்றியும் இப்பாடல் கூறுகிறது.

சங்க காலத்தில் எள் துவையல் வேளைக்கீரையே கைம்பெண்ணின் உணவாக இருந்துள்ளது. அவர்கள் பழைய சோற்றுடன், நெய் சேர்க்காது சமைத்த வெள்ளை எள் துவையலும் புளியுடன் சேர்த்து சமைத்த வேளைக்கீரையை உண்டு வாழ்ந்தனர் எனப் புலவர் கூறுகிறார். அது மட்டுமல்லாமல் சிறிய கற்களால் ஆன படுக்கையில் பாயில்லாமல் படுத்து வருந்தி படுப்பதை கைம்பெண்கள் விரும்பவில்லை.

கணவன் இறந்த பின்பு மனைவி படும் துயரத்தைப் பற்றிக் கூறுகிறார் புலவர். கைம்பெண்கள் மிகவும் துன்பச் சூழலில் இன்பம் இழந்து வாழ்ந்தனர். அவர்கள் நல்லுணவு உண்பதும் சமுதாயத்தில் மறுக்கப்பட்டு மிகுந்த இழிந்த வாழ்வை வாழ்ந்தனர் என்கிறார் புலவர்.

 

எள் துவையல் எப்படி செய்திருப்பார்கள் எனில்,

 

தேவையான பொருட்கள் :

 

தற்கால அளவு

சங்க கால அளவு

 

வெள்ளை எள்

– 100 கிராம்

– 2½ பலம்

 

உப்பு

– தேவையான அளவு

 

தேங்காய்த்துருவல்

– 100 கிராம்

– 2½ பலம்

 

மிளகு

– 8-10 எண்ணிக்கை

 

பெருங்காயம்

– 1 சிட்டிகை

 

புளி

– ½ எலுமிச்சை அளவு

 

செய்முறை :

கடாயில் நெய் சேர்க்காமல் வெள்ளை எள்ளை வறுத்துக் கொள்ளவும். அதனுடன் தேய்காய்த்துருவல், மிளகு, பெருங்காயம், புளி உப்பைச் சேர்த்து வதக்கவும். சூடு ஆறியவுடன் நன்கு மைய அரைக்கவும். சுவையான எள் துவையல் தயார். பழைய சோற்றுடன் எள் துவையலைச் சேர்த்து உண்டுள்ளனர்.

 

குறிப்பு :

கருப்பு எள் சேர்த்து துவையல் செய்ததைப் பத்துப்பாட்டில் காணலாம்.

சங்க காலத்தில் மக்கள் புளிப்புச் சுவையை விரும்பி உண்டனர்.

சங்க காலத்தில் புளிப்புக்கு புளி, எலுமிச்சை நார்த்தங்காயைப் பயன்படுத்தினார்கள்.

நம் சுவைக்கேற்ப கடாயில் சிறிது நெய் (அ) எண்ணெயைச் சேர்த்து எள்ளை வறுத்தும் எள் துவையலைச் செய்யலாம்.

மைதா கார்ன் ப்ளவர் மாவு சங்க காலத்தில் சமையல் பயன்பாட்டில் இல்லை.

முற்றிய தேங்காயில் துவையல் செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

 

தொடரும்…

 

சமையல் குறிப்பு கலைஞர் பி பிரியா பாஸ்கர்

 

முன்னைய பகுதிகள்:

http://www.vanakkamlondon.com/sanga-kaala-samaiyal-priya-basker-part-1-07-22-19/

http://www.vanakkamlondon.com/sanga-kaala-samaiyal-priya-basker-part-2-07-27-19/

http://www.vanakkamlondon.com/sanga-kaala-samaiyal-priya-basker-part-3-09-27-19/

http://www.vanakkamlondon.com/sanga-kaala-samaiyal-priya-basker-part-4-10-01-19/

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *