“சந்தியாராகம்” கோல்டன் சூப்பர் சிங்கர் – 2019


கடந்த சனி Oct 12 அன்று தமிழிசை கலா மன்றத்தில் மூன்றாவது வருடமாக மூத்தோர்க்கான  “சந்தியாராகம்” கோல்டன் சூப்பர் சிங்கர்  போட்டிக்களம் வெற்றி கரமாக நடந்தேறியது.

விலா கருணா மூத்தோர் இல்லத் தலைவியான திருமதி இந்திராணி நாகேந்திரம் அவர்களின் நெறியாள்கையில் நடுவர்களாக நியூயோர்க் ராஜா, பாபு ஜெயகாந்தன், அன்டன் பீலிக்ஸ், ஆனந்தம் அண்டோனி, உஷா குலேந்திரன் மற்றும் குரல் பயிற்சியாளர்களாக  வைத்திய கலாநிதி வரகுணன், கிருத்திக்கா சந்திரசேகர் ஆகியோரும் கடமையாற்றியிருந்தனர்.

இந் நிகழ்வினை ஆரம்பித்து வைக்கும் வகையில் கிருஷ்ரபெல்லா அல்போன்ஸ், கன்னிகா சந்திரன் மற்றும் வனித்தா விக்னேஸ்வரராஜ் ஆகியோரால் கனடாவின் தேசிய கீதம் ஆங்கிலத்திலும் தமிழிலுமாக பாடப்பெற்றன.

ஆரம்ப நிலையில் 40 பேர் பங்கு பற்றிய இப் போட்டியில் 5  சுற்றுக்கள் தொடர்ந்து நடைபெற்றன. பின்னர் இறுதிச் சுற்றுக்கு 5 நபர்கள் தெரிவு செய்யப்பட்டு அன்றைய தினம் மேடையேறி பாடினார்கள். இந்த ஐவரில் ஒருவருக்கு சுகயீனம் காரணமாக இறுதி போட்டியில் பங்கு கொள்ள முடியாத காரணத்தினால் நால்வர் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள முடிந்தது.

யோகராசா பொன்னையா, சபா குருநாதன், சிவராஜா செல்லையா மற்றும் ஜெயஸ்வரி கைலாயநாதன் ஆகியோரே இறுதிச் சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்ட 4 போட்டியாளர்களுமாவார்கள்.

போட்டி முடிவிலே “சந்தியாராகம்” கோல்டன் சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் ஆக சபா குருநாதன் அவர்களும் இரண்டாவது இடத்தில் யோகராசா பொன்னையா அவர்களும் மூன்றாம் இடத்தில் சிவராஜா செல்லையா அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள்.

அன்றைய தினம் இரு சுற்றுக்களாக நடைபெற்ற இப்போட்டியில் மூத்தோர்கள் தங்கள் உடைகளை அதற்கேற்றவாறு அணிந்து குதூகலமாக பாடியமை பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. தங்கள் நிலையை மறந்து  மூத்தோர்கள் குழந்தைகள் போல ஆடிப் பாடியமை அரங்கத்தையே  கரகோஷத்தால் அதிர வைத்தது. இவர்களின் இந்த சந்தோஷங்களுக்கு  வடிகாலாக அமைந்த திருமதி இந்திராணி நாகேந்திரம் அவர்களின் அளப்பரிய சேவையினை பாராட்டியே ஆக வேண்டும்.

அரங்கம் நிறைந்த மக்களின் கைதட்டல்களுடன் அன்றைய போட்டிக்களம்  மிகவும் சிறப்பாக நடந்தேறியது.

இந் நிகழ்வின் இறுதியில் வைத்திய கலாநிதி வரகுணன் அவர்கள் ஒரு பாடலை பாடி அரங்கத்தையே மகிழ வைத்தமை சிறப்பாக அமைந்திருந்தது.

இந் நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக ஒகஸ்டீன் ஜெகசோதி, பாட்ரி மணி, பெர்னாடெட் காசம், சாண்ட்ரா சுதர்லாண்ட் ஆகியோர் வருகை தந்து சிறப்பித்திருந்தார்கள். ஒவ்வொருத்தரும் திருமதி இந்திராணி நாகேந்திரம் அவர்களின் சேவையினைப்  பாராட்டி பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திருமதி இந்திராணி நாகேந்திரம் அவர்கள் விலா கருணா மூத்தோர் இல்லத்தை 16 வருடங்களாக நடாத்தி வருகிறார். அவரின் வியக்கத்தக்க இந்த  சேவையினால் இருட்டில் இருந்த பல மூத்தோர்களின் வாழ்க்கை பிரகாசமாக ஒளிர்வதைக் காணக் கூடியதாக இருக்கிறது.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *