சசிகலா சிறை விதிகளை மீறினார்; விடுதலையில் சிக்கல்


பெங்களூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, சிறை விதிகளை மீறியது உண்மைதான் என விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் – அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் சசிகலாவிற்கு விதிமுறைகளை மீறி விசேட சலுகைகள் வழங்கப்படுவதாக பரபரப்பு புகார் எழுந்தது.

இது தொடர்பாக அப்போதைய கர்நாடக சிறைத்துறை அதிகாரி ரூபா, திடீர் சோதனை நடத்தி விதிமீறல்களைக் கண்டுபிடித்தார். அத்துடன் சசிகலாவிற்குச் சலுகைகள் வழங்கக் கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணன் ராவ் இதற்கு 2 கோடி ரூபா லஞ்சம் பெற்றதாகவும் ரூபா குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய் குமார் தலைமையில் உயர்மட்ட குழுவைக் கர்நாடக அரசு நியமித்தது. அந்த குழு, தனது விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறது. அதில் சிறை விதிகளை சசிகலா மீறியது உண்மைதான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதும் ஐந்து சிறைச்சாலையில் இருந்து கைதிகளை வெளியேற்றி, அறை ஒதுக்கப்பட்டுள்ளது என்றும்,  சிறையில் சசிகலாவிற்காகச் சமையல் செய்யப்பட்டது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறையிலிருந்து விதிகளை மீறி சசிகலா வெளியே சென்றது குறித்துக் பொலிஸ் அதிகாரி ரூபா கூறிய புகார் உண்மை தான் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக சசிகலா நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை ஆவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *