உயிர் காக்கும் மலம் மாற்றும் சிகிச்சை


நீங்கள் படிப்பது சரிதான். மருத்துவ உலகத்திலேயே இந்த மலமாற்று சிகிச்சைதான் மிகவும் அருவருப்பான சிகிச்சையெனக் கருதப்படுகிறது.

இந்த சிகிச்சையில் ஒருவரின் உடலிலிருந்து மலம் எடுக்கப்பட்டு மற்றொருவரின் உடலில் வைக்கப்படும். இதன் மூலம் தருபவரின் உடலிலுள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை பெறுபவரின் சீரண அமைப்புக்குப் பலன் தரும் வகையில் மாற்றுவதே இதன் நோக்கம். இந்த செயல் ஒருவரின் உயிரையே கூட காப்பாற்றலாம்.

நமது உடலின் அனைத்து பகுதிகளிலும் நிறைந்திருக்கும் நுண்ணுயிரிகளின் முக்கியத்துவத்தை இது உணர்த்துகிறது.

பல்வேறு வகையான நுண்ணுயிரிகள் ஒன்றுக்கொன்று தங்களுக்கிடையேயும் மற்றும் மனித திசுக்களுடனும் தொடர்புக் கொள்ளும் வளமான பகுதியாக மனிதர்களின் குடல் விளங்குகிறது.

ஆக்ஸிஜன் குறைந்து காணப்படும் உங்களது மலக்குடலின் ஆழப்பகுதியானது மழைக்காடுகள் அல்லது பவளப்பாறைகள் போன்று வளம் மிக்க உயிர்சூழலாக உள்ளது.

ஆனால் க்ளாஸ்டிரீடியம் டிஸ்டிசிலை (சி. டிபிசிலி) என்று அழைக்கப்படும் பாக்டீரியம் மலக்குடலை கட்டுப்படுத்தி அதன் மீது ஆதிக்கம் செலுத்துகிறது.

நோயாளிகளுக்கு ஆன்டிபயாடிக் எனப்படும் எதிர் உயிரி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் இந்த பாக்டீரியமானது தனது சந்தர்பவாத செயல்பாட்டை தொடங்குகிறது.

மலமாற்று அறுவை சிகிச்சை

ஆண்டிபயாடிக் மருந்துகள் நவீன காலத்தின் அற்புதங்களில் ஒன்றாக இருந்தாலும், அவை நல்ல மற்றும் கெட்ட பாக்டீரியாக்களை ஒரே மாதிரியாக அழிக்கின்றன.

அதாவது, காட்டுத்தீ பரவுவதை போன்று, மலக்குடலிலுள்ள நுண்ணுயிரிகளை இந்த பாக்டீரியம் அழிக்கிறது.

நுண்ணுயிரிகள்

மனித செல்களை விட உங்களது உடலில் அதிக அளவிலான நுண்ணியிரிகள் உள்ளன. அதாவது உங்களது உடலில் 43 சதவீதம்தான் உடல் செல்கள் உள்ளன.

மற்றவை எல்லாம் பாக்டீரியா, வைரஸ்கள், பூஞ்சைகள் மற்றும் ஒருசெல் நுண்ணுயிரியான ஆர்க்கீயா போன்ற நுண்ணுயிரிகளே.

ஒரு மனித ஜீனோமானது (மனித உயிருக்கான முழுமையான மரபீனி குறிப்புத் தொகுதி) 20,000 ஜீன்கள் எனப்படும் மரபீனிக் குறிப்புகளைக் கொண்டுள்ளது.

ஆனால் நம் உடலில் உள்ள நுண்ணுயிரிகளின் அனைத்து மரபீனிகளையும் ஒன்றாக சேர்த்தால், இந்த எண்ணிக்கை இரண்டு மில்லியன் முதல் 20 மில்லியன் நுண்ணுயிர் மரபீனிகளைக் கொண்டதாக இருக்கும். மேலும், இது இரண்டாவது ஜீனோம் என்றும் அறியப்படுகிறது.

மாற்று சிகிச்சை

சி. டிபிசிலி பாக்டீரியத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தினமும் தண்ணீரான மற்றும் இரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு ஏற்படும். வயிற்று பிடிப்புகள், காய்ச்சல் மற்றும் மிகவும் கடுமையான சந்தர்ப்பங்களில் அபாயகரமான இந்த நோய்த் தொற்று சமயத்தில் உயிரையும் பறித்துவிடும்.

மலமாற்று அறுவை சிகிச்சை

இதற்கு சிறந்த மருந்தாக ஆன்டிபயாட்டிக்குகள் விளங்குகின்றன.

இந்த சிகிச்சை முறைக்கு மாற்றாக உள்ளதுதான் மல மாற்று சிகிச்சை. அதாவது, நல்ல உடல்நிலையிலுள்ள ஒருவரின் உடலிலிருந்து மலம் எடுக்கப்பட்டு நோய்ப் பாதித்த மற்றொருவரின் உடலில் வைக்கப்படும்.

நோயாளியின் உறவினருடைய குடலிலுள்ள நுண்ணுயிரிகள் அவரை ஒத்து காணப்படும் என்பதால் பெரும்பாலும் அவரது மலமே எடுத்துக்கொள்ளப்படும்.

“மாதிரி” எடுக்கப்பட்டவுடன், அதனுடன் தண்ணீர் கலக்கப்படும். சில சமயங்களில் கைகளால் அல்லது வீட்டில் பயன்படுத்தப்படும் மிக்ஸரால் மலம் உடைக்கப்படும்.

உடலில் தேவையான இடத்தில் மலத்தை பொருத்த இரண்டு வழிகள் உண்டு. ஒன்று வாய் வழியாக அல்லது மலக்குடல் வழியாக.

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள, பசிஃபிக் நார்த்வெஸ்ட் தேசிய ஆய்வகத்தின் நுண்ணுயிரியல் நிபுணர் ஜேனட் ஜேன்சன், மலமாற்று சிகிச்சை தீர்வு தரும் என்று நிரூபிக்க முயற்சிக்கும் குழுவில் இடம் பெற்றுள்ளார்.

நாள்பட்ட வயிற்றுப்போக்கு காரணமாக 27 கிலோ எடை குறைந்திருந்தார் 61 வயதான பெண் ஒருவர்.

“நோய்த் தொற்று காரணமாக உயிரிழக்கும் அபாயத்தில் இருந்தார். எந்த ஆன்டிபயாடிக்கும் பலனளிக்கவில்லை” என்கிறார் மருத்துவர் ஜேன்சன்.

அவரது கணவரின் உடலில் இருந்து மலம் எடுக்கப்பட்டு, அந்த பெண்ணுக்கு மலமாற்று சிகிச்சை செய்யப்பட்டது.

சிகிச்சை வெற்றி பெற்றது மிகவும் ஆச்சரியம் அளித்ததாக பிபிசியிடம் பேசிய ஜேன்சன் தெரிவித்தார்.

இரண்டு நாட்களுக்கு பின், அவரது குடல் இயக்கங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி குணமடைந்தார்.

மலமாற்று அறுவை சிகிச்சை

90 சதவீதம், இந்த சிகிச்சை வெற்றி பெறும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆனால், சி.டிஃபிசிலிக்கான சிகிச்சையைக் கடந்து மருத்துவத்துறையில் மலமாற்று சிகிச்சைக்கு அர்த்தமுள்ள ஏதேனும் ஒன்று உள்ளதா?

நீங்கள் நினைத்துப் பார்க்கும் எந்த ஒரு நோய்களிலும், நம் மனித மற்றும் நுண்ணியிரியல் செல்கள் இடையிலான தொடர்பு ஆராயப்படுகிறது.

அழற்சி குடல் நோய், நீரிழிவு நோய், பார்கின்சன் மற்றும் மன அழுத்தம், மன இறுக்கம் போன்ற நோய்களுக்கும், புற்றுநோய் மருந்துகள் வேலை செய்கிறதா என்பதற்கும் நுண்ணியிரிகளுக்கும் தொடர்பு உள்ளது.

ஆனால், மலமாற்று சிகிச்சையால் திட்டமிடப்படாத விளைவுகள் ஏற்படும் என்பதையே இது குறிக்கிறது.

தன் மகளிடம் இருந்து மலமாற்று சிகிச்சை செய்து கொண்ட பெண் ஒருவர் 16 கிலோ உடல் எடை கூடினார் என்று 2015ஆம் ஆண்டின் அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.

இதே போல, அபாயகரமான நோயை ஏற்படுத்தும் நுண்ணியிர்கள் பரிமாற்றப்படும் ஆபத்தும் இதில் உள்ளது.

 

நன்றி : பிபிசி நியூஸ் தமிழ்One thought on “உயிர் காக்கும் மலம் மாற்றும் சிகிச்சை

  1. தாய்லாந்து யானைகள் தனது கூட்டத்தில் உள்ள வயிறு கோளாறு உள்ள யானைகளுக்கு தனது மலத்தை உணவாக எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறது.நோயுற்ற யானை ஆரோக்கியமான யானையின் மலத்துவாரத்தில் தனது தும்பிக்கையை செலுத்தி அதனுடைய மலத்தை எடுத்து தனது வாயின் மூலம் செலுத்தி கொள்கிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *